வடக்கின் பெருஞ்சமரில் யாழ். மத்திய கல்லூரி அணியை 99 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றிகொண்டது.
இந்த போட்டியில், 6 ஆண்டுகளின் பின்னர் சதமடித்த வீரராக சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் கமலபாலன் சபேசன் பதிவானார்.
115 ஆவது வடக்கின் பெருஞ்சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 167 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி 125 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
42 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய மூன்றாம் நாளின் போது 7 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
116 பந்துகளை எதிர்கொண்ட கமலபாலன் சபேசன், 5 சிக்ஸர்கள் 9 பவுண்ட்ரிகளுடன் 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
யாழ். மத்திய கல்லூரியின் ரஜித்குமார் நியூட்டன் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து, யாழ். மத்திய கல்லூரியின் வெற்றியிலக்காக 263 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்த இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணியால் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களையே பெற முடிந்தது.
அஜந்தன் கஜன் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஜெயச்சந்திரன் அஷ்நாத் 6 விக்கெட்களை வீழ்த்தி, அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
முதல் இன்னிங்ஸிலும் 4 விக்கெட்களை வீழ்த்திய அவரே போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.