பாபர் அசாம் ஆட்டமிழக்காது 110 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி தொடரை 1–1 என சமநிலைக்குக் கொண்டுவந்தது.
கராச்சியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் 200 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பந்துகளை மிச்சம் வைத்து வெற்றியீட்டியது.
சொந்த ரசிகர்கள் முன் 62 பந்துகளில் அணித்தலைவர் பாபர் சதத்தை பதிவு செய்ததோடு ரிஸ்வான் தனது ஓட்டங்களை பெறுவதில் 51 பந்துகளுக்கு முகம்கொடுத்து நான்கு சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
இதன்மூலம் டி20 போட்டியில் விக்கெட் இழப்பின்றி அதிகூடிய வெற்றி இலக்கை எட்டி பாகிஸ்தான் புதிய சாதனை படைத்தது.
டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் தோல்வியை சந்திப்பது இது முதல் முறையாகும்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது. அணித் தலைவர் மொயின் அலி 23 பந்துகளில் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை விளாசினார்.