2022ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கி, அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்பது இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டின் நோக்கமாகும். அதேவேளை இந்த விளையாட்டில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெற்றி ஈட்டுவதற்கு ஊக்கமளிப்பதாக அமையும்.
இதன்போது மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சத்தப்பந்து கிரிக்கெட் போட்டியில் உதயம் விழிப்புலனற்றோர் அணி வெற்றி ஈட்டியது.
இறுதி நாளில் சக்கர நாற்காலி ஓட்டம், அஞ்சல் ஓட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றியீட்டிய வீரர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் மற்றும் டாடா அமைப்பு இந்த விளையாட்டு விழாவை இணைந்து நடத்தின.