பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொழும்பு ஸாஹிரா மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரிகள் தோல்வியை சந்தித்தன.
பிரிவு ஒன்றில் போட்டியிடும் கொழும்பு ஸாஹிரா, கடந்த வியாழக்கிழமை (06) நடைபெற்ற போட்டியில் காலி மஹிந்த கல்லூரி அணியை எதிர்கொண்டது. இதில் தனது சொந்த மைதானத்தில் ஆடிய மஹிந்த கல்லூரி ஸாஹிராவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
எனினும் ஸாஹிரா கல்லூரியால் 35.4 ஓவர்களுக்கும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களையே பெற முடிந்தது.
இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய மஹிந்த கல்லூரி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அந்த இலக்கை எட்டியது.
இதேவேளை பிரிவு மூன்றுக்காக தனது சொந்த மைதானத்தில் ஆடிய கம்பளை ஸாஹிரா கல்லூரி கம்பளை, ஜினரத்ன ஆண்கள் கல்லூரியை எதிர்கொண்டது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கம்பளை ஸாஹிராவால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களையே பெற முடிந்தது.
ஜினரத்ன ஆண்கள் கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.