பங்களாதேஷின் குர்மிட்டோலா கோல்வ் புல்தரையில் அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ் கோல்வ் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது.
அப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய எம். எச். சாலித்த புஷ்பிக்க, 15 வயதுடைய ரேஷான் அல்கம, உதேஷ் சன்கா பெரேரா ஆகியோர் முறையே 13ஆம், இணை 24ஆம் இடங்களைப் பெற்றனர்.
அப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஆரவ் டி ஷா சம்பியனானதுடன் நேபாள வீரர் சுபாஷ் தமாங் 2ஆம் இடத்தையும் பங்களாதேஷின் ஷபிக்குல் இஸ்லாம் 3ஆம் இடத்தைப் பெற்றனர்.
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மலேசியா, நேபாளம், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 கோல்வ் வீரர்கள் மொத்தம் 72 குழிகளைக் கொண்ட நான்கு நாள் (தலா 18 குழிகள்) கோல்வ் போட்டியில் பங்குபற்றினர்.
இலங்கையிலிருந்து பங்குபற்றிய மூவரில் சாலித்த புஷ்பிக்க 77, 75, 77, 73 ஆகிய நகர்வுகளைக் கொண்ட 303 நகர்வுகளில் 72 குழிகளைப் பூர்த்தி செய்து 13ஆவது இடத்தைப் பெற்றார். இலங்கையர்கள் மூவருக்கு இடையிலான பேறுபெறுகளில் அவரது பெறுபேறே அதிசிறந்த பெறுபேறாக அமைந்தது.
இளம் வீரரான 15 வயதே உடைய ரேஷான் அல்கம 79, 79, 78, 75 ஆகிய நகர்வுகளுடன் மொத்தம் 311 நகர்வுகளிலும் உதேஷ் சன்கா பெரேரா 77, 81, 75, 78 ஆகிய நகர்வுகளுடன் மொத்தம் 311 நகர்வுகளிலும் இணை 24ஆம் இடத்தைப் பெற்றனர்.
வெளிநாட்டவர்களின் பெறுபேறுகளுடன ஒப்பிடும்போது இலங்கையர்களது பெறுபேறுகள் பெரும் பின்னடைவில் இருக்கிறது.
இப் போட்டியில் சம்பியனான அவுஸ்திரேலியாவின் ஆரவ் டி ஷா மிகவும் அற்புதமாக விளையாடி 70, 74, 70, 70 ஆகிய மிகக் குறைந்த நகர்வுகளுடன் மொத்தம் 284 நகர்வுகளில் சம்பியன் பட்டத்தை உறுதிசெய்துகொண்டார்.
இரண்டாம் இடத்தைப் பெற்ற நேபாள வீரர் சுபாஷ் தமாங் 72, 66, 73, 75 ஆகிய நகர்வுகளுடன் மொத்தம் 286 நகர்வுகளில் போட்டியை நிறைவு செய்தார். 2ஆம் நாள் ஆட்டத்தை மிகக் குறைந்த 66 நகர்வுகளில் நிறைவு செய்ததன் மூலம் தமாங் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.
பங்களாதேஷ் வீரர் ஷபிக்குல் இஸ்லாம் மொத்தமாக 290 நகர்வுகளில் (72, 73, 72, 73) மூன்றாம் இடத்தைப் பெற்றார்.