ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கனி, சரியான தலைமை அமையும் வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகிவற்றில் விளையாடவுள்ளது. இதற்காக ரஷித் கான் தலைமையில் 16 வீரர்கள் கொண்ட அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கனியின் பெயர் இடம்பெறவில்லை.
இவ்விடயம் குறித்து உஸ்மான் கனியின் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மிகுந்த கவனத்துடனே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைமைதான் என்னை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. சரியான நிர்வாகமும் தேர்வுக் குழுவும் அமையும் வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடர்ந்து கடுமையான உழைப்பைச் செலுத்திக்கொண்டே இருப்பேன்.
இது நடக்கும்போது நான் பெருமையுடன் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவேன். நிறைய முயற்சிகளை மேற்கொண்டபோதும் கூட என்னால் சபைத் தலைவரை சந்திக்க முடியவில்லை. அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் நான் நீக்கப்பட்டதற்கு தேர்வுக் குழு தலைவரிடம் திருப்தியான பதிலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் கனி.
உஸ்மான் கனி ஆப்கானிஸ்தானுக்காக 17 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 35 இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.