முதலிரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் என்னுடைய மோசமான பந்துவீச்சுக்கு வயதை குறைகூறக் கூடாது என இங்கிலாந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.
41ஆவது வயதை எட்டவுள்ள ஜேம்ஸ் அண்டர்சன், முதலிரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 77 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 75.33 ஆகும்.
இந்நிலையில், பிரித்தானியாவின் டெலிகிராப் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள ஜேம்ஸ் அண்டர்சன்,
“பெரிய தொடர்களில் நன்கு செயற்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 2 போட்டிகளில் நான் மோசமாக செயற்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் எனது பங்களிப்பு இருந்திருக்கிறது. அதேசமயம், நான் மோசமாக பந்து வீசியதாக நினைக்கவில்லை. இது சிறிய சரிவுதான். ஆனால், இது ஆஷஸில் நடக்கக்கூடாது.
சரிவு என்று நான் கூறினாலும் கூட, 181 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில்தான் இந்தச் சரிவு.
மீண்டும் ஒருமுறை நான் ஆடுகளத்தை குறைகூற மாட்டேன். இந்த ஆடுகளம் எனக்கு உகந்ததாக இல்லை. கடந்த காலங்களில் தட்டையான (Flat) ஆடுகளங்களில் கூட விக்கெட் வீழ்த்துவதற்கான வழிகளை கண்டறிந்திருக்கின்றேன். அதைத்தான் தற்போது செய்வதற்கு முயற்சித்து வருகிறேன்.
இருந்தாலும் கூட, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் பந்தை தொடர்ச்சியாக ஆடுகளத்தின் நடுவில் பிட்ச் செய்வதை பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.
கடந்த 20 வருடங்களாக பந்துவீச்சில் பந்தை மேலெழும்பச் செய்தும் ஸ்விங் செய்தும் முயன்றுள்ளேன். இவையனைத்தையும் செய்த பிறகும் கூட விக்கெட் கிடைக்கவில்லை என்றால் அது விரக்தியை உண்டாக்கும்.
என்னுடைய ஆட்டத்தில் நான் இன்னும் கவனம் செலுத்தி, பயிற்சியாளர்களுடன் உரையாடி, என்னால் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.
வயதை காரணம் காட்டி என்னுடைய எதிர்காலம் குறித்துப் பேசுகிறார்கள். எனக்குப் புரிகிறது. ஆஷஸ் மிக முக்கியமான தொடர். ஆனால், நான் விக்கெட்டுகள் வீழ்த்தாமல் இருப்பதற்கு என்னுடைய வயது காரணம் அல்ல.
எதிர்காலம் குறித்து நான் சிந்திக்கவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமையும், அடுத்த டெஸ்டின் தொடக்கமும்தான் நான் தற்போது சிந்தித்துக்கொண்டிருக்கும் எதிர்காலம். இந்தத் தொலைவு வரைதான் என்னால் பார்க்க முடிகிறது.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அணிக்குத் தேவையான ஆட்டத்தை நான் வெளிப்படுத்துவேன். இல்லையெனில், இந்தத் தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக தொடர்ந்து கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பேன்” என அந்த கட்டுரையில் ஜேம்ஸ் அண்டர்சன் எழுதியுள்ளார்.