எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெரிதும் எதிர்பார்ப்புக் கொண்ட ஒக்டோபர் 15 ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆலோசித்து வருகிறது.
ஹிந்துக்களின் நவராத்திரி பண்டிகையின் முதல் நாள் ஒக்டோபர் 15 ஆம் திகதி இடம்பெறவிருப்பதால் அன்றைய தினத்தில் பாதுகாப்பு வழங்குவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவுறுத்தியபோதும் இதுவரை உறுதியான முடிவு ஒன்று எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் இறுதி முடிவு ஒன்றை எடுப்பதற்கு முன்னர் அனைத்து மாநில சங்கங்களுடன் இன்று (27) பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
எனினும் ஒக்டோபர் 14 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளும் மோதவுள்ள நிலையில் ஒருநாளில் மூன்று போட்டிகள் நடத்த அட்டவணையில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி ஒக்டோபர் 12 ஆம் திகதி இலங்கை அணியை ஹைதராபாத்தில் எதிர்கொள்ளவுள்ள நிலையில் ஒக்டோபர் 14 ஆம் திகதி போட்டி மாற்றப்பட்டால் அந்த அணி இரண்டு நாள் இடைவெளிக்குள் அஹமதாபாத் வரவேண்டி இருக்கும்.
உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை நீண்ட தாமதத்திற்கு பின்னர் ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியிடப்பட்ட நிலையிலேயே தற்போது இந்த பிரச்சினை எழுந்துள்ளது.