செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பார்படோஸை வீழ்த்திய இலங்கை முதல் வெற்றியை சுவைத்தது

பார்படோஸை வீழ்த்திய இலங்கை முதல் வெற்றியை சுவைத்தது

2 minutes read

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் அரங்கில் புதன்கிழமை (03) நடைபெற்ற பார்படோஸுக்கு எதிரான ஈ குழுவுக்கான முன்னோடி சுற்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியின் கடைசி ஆட்ட நேர பகுதியில் எதிர்நீச்சில் போட்டு விளையாடிய இலங்கை 60 – 56 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இதன் மூலம் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் முதல் ஐந்து போடடிகளில் தொடர் தோல்விகளைத் தழுவிய இலங்கை, இறுதியாக முதாலவது வெற்றியை சுவைத்து திருப்தி அடைந்தது.

இந்த உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இல்லாமலும் தங்களால் சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற முடியும் என்பதை இந்த வெற்றியின் மூலம் இலங்கை நிரூபித்தது. இப் போட்டியில் தர்ஜினிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

பார்படோஸுடன் இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. கடைசியாக 8 வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பார்படோஸ் 67 – 33 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

இதன் காரணமாகவும் இந்த வருடப் போட்டிகளில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்ததாலும் பார்படோஸ்  வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு அமைய போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் ஒரு கட்டத்தில் 8 – 6 என்ற கோல்கள் கணக்கில் பார்படோஸ் முன்னிலையில் இருந்தது.

எவ்வாறாயினும் அதன் பின்னர் வீறுகொண்டு விளையாடிய இலங்கை கோல் நிலையை 15 – 15 என சமப்படுத்தி முதலாவது ஆட்ட நேர பகுதியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் அற்புதமாக விளையாடிய இலங்கை தொடர்ச்சியாக 5 கோல்களைப் போட்டு முன்னிலை அடைந்தது.

இதன் காரணமாக பார்படோஸ் அணியில் விங் அட்டேக் நிலையில் சாஷா கோபின் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது சகோதரி காடீன், கோல் அட்டாக் நிலைக்கு மாற்றப்பட்டார். இவர் இங்கிலாந்து சார்பாக விளையாடி பொதுநலவாய விளையாட்டு விழா தங்கப் பதக்கத்தை வென்றவர்.

இந்த மாற்றங்கள்   பார்படோஸுக்கு சாதகமாக அமையவில்லை. தொடர்ந்த சிறப்பாக விளையாடிய இலங்கை, இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 15 – 11 என தனதாக்கி இடைவேளையின் போது 30 – 26 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.

இடைவேளையின் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. மொத்தமாக 35 கோல்கள் போடப்பட்ட 3ஆவது ஆட்ட நேர பகுதியில் பார்படடொஸ் 23 முயற்சிகளில் 22 கோல்களைப் போட்டதுடன் இலங்கை 13 முயற்சிகளில் 13 கோல்களைப் போட்டது. இதற்கு அமைய 3ஆவது ஆட்ட நேர பகுதி முடிவில் 48 – 43 என்ற கோல்கள் கணக்கில் பார்படோஸ் முன்னிலையில் இருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் முதலாவது நிமிடத்தில் பார்படோஸ் மேலும் 2 கோல்களைப் போட்டு 7 கோல்கள் வித்தியாசத்தில் (50 – 43) முன்னிலை அடைந்தது. ஆனால், அதன் பின்னர் எதிர்நீச்சல் போட்டு திறமையாக விளையாடிய இலங்கை சிறுக சிறுக ஆட்டத்தை தன் வசப்படுத்த ஆரம்பித்தது.

இறுதியாக 4ஆவது ஆட்ட நேர பகுதியை 17 – 8 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிய இலங்கை, 60 – 56 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

கடந்த 20 வருடங்களில் சிங்கப்பூரைவிட வேறு ஒரு நாட்டு அணியை வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இலங்கை சார்பாக திசலா அல்கம 50 முயற்சிகளில் 47 கோல்களையும் செமினி அல்விஸ் 9 முயற்சிகளில் 9 கோல்களையும் துலங்கி வன்னிதிலக்க 4 முயற்சிகளில் 4 கோல்களையும் போட்டனர்.

பார்படொஸ் சார்பாக லெட்டோனியா ப்ளக்மன் 35 முயறச்சிகளில் 29 கோல்களையும் காடின் கோபின் 31 முயற்சிகளில் 27 கோல்களையும் போட்டனர்.

அப் போட்டியில் ஆட்டநாயகி விருதை துலங்கி வன்னித்திலக்க வென்றெடுத்தார்.

போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அணித் தலைவி கயாஞ்சலி அமரவன்ச, ‘இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. எனது அணியையிட்டு பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில் இதுதான் எமது முதலாவது வெற்றி’ (இந்த உலகக் கிண்ணப் போட்டியில்) என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More