விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் வழங்கப்பட்டிருக்கும் கணக்காய்வு தலைமை அதிகாரியின் அறிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளையே கதைத்து வருகிறோம். இது தொடர்பாக கதைத்தது போதும். நாங்கள் எப்போதும் இது தொடர்பாக கலந்துரையாடுவது என்பது இதில் மாற்றம் செய்ய தேவை இல்லை என்பதாகும். உண்மையில் கிரிக்கெட் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கத்துக்கு அரசியல் தேவைப்பாடு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இங்குவந்து கண்ணீர் வடித்து பயனில்லை.
அத்துடன் யார் என்ன சொன்னாலும் எமது விளையாட்டின் தொட்டில் பாடசாலையாகும். பாடசாலை விளையாட்டு தொடர்பில் அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது. என்றாலும் அமைச்சர் அதனை சரியாக நிர்வகிப்பதில்லை. நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். நாட்டு மக்களும் அவ்வாறே கிரிக்கெட்டை நேசிக்கின்றனர். என்றாலும் கிரிக்கெட்டில் இருக்கும் மோசடிகளில் இருந்து எவ்வாறு நாங்கள் மீள்வது?
அதனால் கிரிகெட்டில் மோசடி என தெரிவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த பிரச்சினைக்கு அமைச்சருக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், கிரிக்கெட் தொடர்பான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புங்கள். அதனால் அரசியல் தேவைப்பாடு இல்லாமல் கிரிக்கெட் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியாது என்றார்.