ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷங்கா மற்றும் குஷல் பெரேரா களமிறங்கினர்.
ஆரம்பமே இலங்கை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குஷல் பெரேரா 0 ரன்னில் பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், முகமது சிராஜ் வீசிய ஓவரில் பதும் நிசங்கா (2 ரன்கள்), சதீரா சமரவிக்கிரம (0 ரன்கள்), சரித் அசலங்கா (0 ரன்கள்), தனஞ்ஜெயா டி சில்வா (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஓரே ஓவரில் சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பின், களமிறங்கிய இலங்கை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் – இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்ததுடன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் இந்திய வெறும் 6.1 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இதில் ஷுப்மன் கில் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும், இஷான் கிஷன் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் 8ஆவது ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.