செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எவரெஸ்ட் உச்சியை அடைந்த ஜயந்திக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது

எவரெஸ்ட் உச்சியை அடைந்த ஜயந்திக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது

2 minutes read

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையரான ஜயந்தி குரு உத்தும்பால, சர்வதேச ஒலிம்பிக் குழுவின்  பாலின சமத்துவம், பல்வகைமை மற்றும் உள்ளடக்கல் சம்பியன்களுக்கான 2023 ஆசிய விருதை வென்றுள்ளார்.

விளையாட்டுத்துறையிலும், விளையாட்டுக்களின் ஊடாகவும் பாலின சமத்துவம், பல்வகைமை மற்றும் உள்ளடக்கல்  ஆகியவற்றை ஊக்குவிப்பதில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக்குழு வருடாந்தம் விருது வழங்கிவருகிறது.

2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது  2021 ஆம் ஆண்டுவரை  இவ்விருது பெண்கள் மற்றும் விளையாட்டு விருது என அழைக்கப்பட்டது. பின்னர் பாலின சமத்துவம், பல்வகைமை, உள்ளடக்கல் சம்பியன்கள் விருது  (GEDI Champions Awards) என இவ்விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வருடாந்தம் உலகளாவிய ரீதியில் ஒருவருக்கும், ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஓஷியானியா ஆகிய கண்டங்களிலிருந்து தலா ஒருவருக்குமாக 6 விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்வருடம் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவருக்கான விருது ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையர் எனும் சாதனையைப் படைத்தவர் ஜயந்தி.

மலேயேற்றத்தில் 20 வருடங்களுக்கு அதிகமான அனுபவத்தைக் கொண்ட ஜயந்தி, பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாடுகளில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டவர்.

மகளிர் கல்வியில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவும், பாலின கற்கைகளில் முதுமாணி பட்டமும் பெற்றவர் அவர்.

புகழ்பெற்ற மலையேறியும் பாலின சமத்துவ செயற்பாட்டாளருமான ஜயந்தி குரு உத்தும்பால, ஆசியாவிலுள்ள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு முன்மாதிரியானவர் என சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாதுகாப்பான விளையாட்டுக்   கொள்கை முறைப்பாட்டுக் குழுவின் முதலாவது தலைவரான ஜயந்தி, விளையாட்டுத்துறையில் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராகவும், விளையாட்டு வீர,வீராங்கனைகளுக்கான பாதுகாப்பான சுற்றாடலை உறுதிப்படுத்துவதற்கும் தீவிரமாக செயற்பட்டவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#ClimbLikeAGirl  எனும்  பிரச்சாரத்தின் ஊடாக பெண்கள் சிறுமிகள் குறித்த ஒரேமாதிரியான மனப்பாங்கை மாற்றுவதற்காக செயற்படும் அவர், ஐ.டபிள்யூ.ஜி உலக மாநாடு உட்பட உலகளாவிய அரங்குகளில் பங்குபற்றினார். பாரபட்சங்கள், உள்ளடக்கல் தொடர்பில் கவனம் செலுத்தும் அவர், பல்வேறு ஊடகங்கள், மாநாடுகள், செயலமர்வுகள் மூலம் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்துள்ளார் எனவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறையின் ஊடாக மாற்றம் ஏற்படுத்திய 12 பெண்களில் ஒருவராக 2019 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தினால் ஜயந்தி தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 2016 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்துக்கான பயணத்தின் பின் அவர் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கழகங்கள், தொழிற்சார் விளையாட்டு அணிகள், சங்கங்கள், அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்ததக நிறுவனங்கள், படையினர், பொலிஸாருக்கா 500 இற்கும் அதிகமான ஊக்கப்படுத்தும் உரைகளை நிகழ்த்தியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விருதை வென்றமைக்காக ஜயந்தி குரு உத்தும்பாலவை பாராட்டியுள்ள இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, ‘எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையரான ஜயந்தி, சர்வதேச ஒலிம்பிக் குழுவிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தகுதியானவர். நம் அனைவரையும் அவர்  பெருமையடையச் செய்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விருதை பெறுவதில் தான் பெருமையடைவதாக ஜயந்தி குரு உத்தும்பால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியிலான சர்வதேச ஒலிம்பிக் குழுவின்  பாலின சமத்துவம், பல்வகைமை மற்றும் உள்ளடக்கல் 2023 சம்பியன் விருதை அமெரிக்காவின் கத்ரினா அடம்ஸ் வென்றுள்ளார். முன்னாள் தொழிற்சார் டென்னிஸ் வீராங்கனையான கத்ரினா அடம்ஸ் அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த முதல் கறுப்பினத்தவர் ஆவார்.

இம்முறை  ஆபிரிக்காவைச் சேர்ந்தவருக்கான விருதை ஐரீன் லிமிக்கா (கென்யா) வென்றுள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்தவருக்கான விருதை  ஒரேலி பிரேசன் (பிரான்ஸ்) வென்றார். அமெரிக்க கண்டத்துக்குரியவருக்கான விருதை மரியோலெரேட்டோ கொன்ஸாலெஸ் ஜெக் (சிலி) வென்றார். ஓஷியானியாவுக்கான விருதை பட்றிக் ஜோன்சன் (அவுஸ்திரேலியா) வென்றுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More