செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடும்போக்குக்கு கடும்போக்கு, அமைத்திக்கு அமைதி | பங்களாதேஷ் ஊடகத்திற்கு தனஞ்சய பதில்

கடும்போக்குக்கு கடும்போக்கு, அமைத்திக்கு அமைதி | பங்களாதேஷ் ஊடகத்திற்கு தனஞ்சய பதில்

2 minutes read

அவர்கள் (பங்களாதேஷ்) கடும்போக்கைக் கடைப்பிடித்தால் நாங்களும் கடும்போக்கை கையாள்வோம். அவர்கள் அமைதியைக் கடைப்பிடித்தால் நாங்களும் அமைதியைப் பேணுவோம் என ஊடகவியலாளர்களிடம் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

சட்டோக்ராமில் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்களாதேஷ் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தனஞ்சய டி சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஷக்கிப் அல் ஹசனுக்கென ஏதாவது திட்டம் உள்ளதா? அவரைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்? என தனஞ்சய டி சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, ‘திட்டங்கள் பற்றி இப்போது என்னால் கூறமுடியாது. அத்துடன் அவர் எனது அணியில் இல்லாததால் அவர் பற்றி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவரைப் பற்றி பங்களாதேஷ் அணியிடம் தான் கெட்கவேண்டும். எனக்கு அது பொருத்தமான கேள்வி அல்ல. தவறாக என்னிடம் கேட்கிறீர்கள்’ என பதிலளித்தார்.

கசுன் ராஜித்த உபாதைக்குள்ளானதால் அசித்த பெர்னாண்டோ குழாத்தில் இணைந்துள்ளதுபற்றி என்ன நினைக்கிறீரர்கள் என அவரிடம் கேட்கப்பட்டதற்கு,

‘நான் ஏற்கனவே கூறியதுபோல் வேகப்பந்துவீச்சாளர்களில் 1, 2, 3 என யாரையும் தரப்படுத்த மாட்டேன். யார் அணிக்குள் வந்தாலும் அவரது கடமையை நிறைவேற்றுவதற்கு அவர் தெரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அசித்த சிறப்பாக விளையாடியிருந்தார். அவர் இங்கும் சிறந்த பங்களிப்பை வழங்குவார் என நான் நினைக்கிறேன்’ என பதிலளித்தார்.

சட்டோக்ராம் ஆடுகளம் பற்றி கருத்து வெளியிட்ட அவர்,

‘சட்டோக்ராம் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமையும் என கருதுகிறேன். ஆனால், கடைசி நாட்களில் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் எல்லா துடுப்பாட்ட வீரர்களும்   பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. எமது முன்வரிசை வீரர்கள் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் திறமையாகத் துடுப்பெடுத்தாடியிருந்தனர். கடந்த போட்டியில் அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஆனால் இந்த டெஸ்டில் எமது முன்வரிசை வீரர்கள் பிரகாசிப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் பிரகாசித்தால் எனக்கும் கமிந்துக்கும் துடுப்பெடுத்தாட வேண்டிய அவசியம் ஏற்படாது என நான் கருதுகிறேன்’ என்றார்.

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இலங்கை, சட்டோக்ராமில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.

அதேவேளை, தொடரை சமப்படுத்த பங்களாதேஷ் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மைதானத்தில் இலங்கையும் பங்களாதேஷும் சந்தித்துக்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகளில் 2இல் இலங்கை வெற்றி பெற்றதுடன் மற்றைய 3 டெஸ்ட் போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

சில்ஹெட் மைதானத்தில் இலங்கையின் வேகபந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 20 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டிருந்தனர். ஆனால், சட்டோக்ராம் ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு உகந்ததாகும்.

இதன் காரணமாக இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்குப் பதிலாக சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கையின் முன்வரிசை வீரர்கள், குறிப்பாக சிரேஷ்ட வீரர்கள் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுவது அவசியமாகும்.

அணிகள்

இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணியில் பெரும்பாலும் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார அல்லது அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுவர்.

பங்களாதேஷ் அணியில் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அணித் தலைவர் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் மீண்டும் இணைந்துள்ளதுடன் அவர் இறுதி அணியில் இடம்பெறுவது உறுதி.

பங்களாதேஷ் அணியில் மஹ்முதுல் ஹசன் ஜோய், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் ஹக், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், ஷொரிபுல் இஸ்லாம், காலித் அஹ்மத், நஹித் ரானா அல்லது ஹசன் மஹ்முத் ஆகியோர் இடம்பெறுவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More