ஜப்பானின் ஒசாக்கா யன்மார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற 11ஆவது கினாமி மிச்சிடக்கா ஞாபகார்த்த மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெற்றிபெற்றார்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.92 செக்கன்களில் நிறைவுசெய்த காலிங்க குமாரகே முதலாம் இடத்தைப் பெற்றார்.
ஒலிம்பிக் போட்டிக்கான அடைவு மட்டம் 45.00 செக்கன்களாகும். எனினும் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவர் இதுவரை பெற்றுள்ள தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார் என நம்புவதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் பொதுச் செயலாளர் சமன் குணவர்தன தெரிவித்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 54.02 செக்கன்களில் நிறைவுசெய்த நடீஷா ராமநாயக்க 4ஆம் இடத்தைப் பெற்றார்.
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரட்னவினால் போட்டியை பூர்த்தி செய்ய முடியாமல் போனது.