யாழ். மாவட்ட ஹொக்கி சங்கத்தினால் நடத்தப்பட்ட கழகங்களுக்கு இடையிலான மகேஸ்வரன் சவால் கிண்ண ஹொக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஓல்ட் கோல்ட்ஸ் (கோல்ட்) விளையாட்டுக் கழகமும் பெண்கள் பிரிவில் யாழ்.பல்கலைக்கழக விளையாட்டுக் கழகமும் சம்பியனாகின.
இறுதிப் போட்டிகள் யாழ். விக்டோரியா கல்லூரி மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்றன.
ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டி ஓல்ட் கோல்ட்ஸ் கழகத்தின் உள்ளக போட்டியாக அமைந்தது.
ஓல்ட் கோல்ட்ஸ் (கோல்ட்) அணியும் ஓல்ட் கோல்ட்ஸ் (கிறிம்சன்) அணியும் மோதிக்கொண்ட இறுதிப் போட்டி 1 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
கோல்ட் அணி சார்பாக 23ஆவது நிமிடத்தில் கௌசிகனும் கிறிம்சன் அணி சார்பாக 28ஆவது நிமிடத்தில் சுகிர்தனும் கோல் போட்டனர்.
இதனை அடுத்து சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 5 – 4 என ஓல்ட் கொல்ட்ஸ் (கொல்ட்) அணி வெற்றிபெற்று சம்பியனானது.
இறுதி ஆட்டநாயகன்: விதுசன் (ஓல்ட் கோல்ட்ஸ் – கிறிம்சன்)
சுற்றுப் போட்டி நாயகன்: கௌசிகன் (ஓல்ட் கோல்ட்ஸ் – கோல்ட்)
பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் பண்டத்தரிப்பு யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட யாழ். பல்கலைக்கழக விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
யாழ். பல்கலைக்கழக அணி சார்பாக அஞ்சலீனா 14ஆவது நிமிடத்தில் போட்ட கோல் வெற்றி அணியைத் தீர்மானிக்கும் கோலாக அமைந்தது.
இறுதி ஆட்டநாயகி: அஞ்சலீனா.
சுற்றுப் போட்டி நாயகி: நிதர்சனா.
ஆண்கள் பிரிவில் 3ஆம் இடத்தை யூனியன் விளையாட்டுக் கழகமும் பெண்கள் பிரிவில் 3ஆம் இடத்தை ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகமும் பெற்றன.