எட்டு கழகங்கள் பங்குபற்றிய கலம்போ – சிட்டி சவால் கிண்ண நொக் அவுட் கால்பந்தாட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை றினோன் கழகம் சம்பியனானது.
சிட்டி லீக் மைதானத்தில் இன்று சனிக்கிழமை (10) பிற்பகல் நடைபெற்ற ஸ்டார் கழகத்துடனான இறுதிப் போட்டியில் நியூ 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டி கலம்போ – சிட்டி சவால் கிண்ணத்தை றினோன் கழகம் சுவீகரித்தது.
கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் 112ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த அழைப்பு நொக்அவுட் கால்பந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இறுதிப் போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நினோன் கழகம் 15ஆவது நிமிடத்தில் கவிந்து இஷான் மூலமும் 21ஆவது நிமிடத்தில் எம்.என்.எம். பஸால் மூலமும் கோல்களைப் போட்டு இடைவேளையின்போது 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
ஆனால், இடைவேளையின் பின்னர் நியூ ஸ்டார் கழகம் திறமையாக விளையாடி கோல் போட எத்தனித்தது.
எவ்வாறாயினும் அதன் முயற்சிகள் பலனளிக்காமல் போனது.
போட்டியின் முழுநேரம் கடந்து உபாதையீடு நேரத்தில் எம். அனாஸ் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் போட்டு நியூ ஸ்டார் கழகத்திற்கு புத்துயிர் கொடுத்தார். ஆனால் அது காலம் கடந்த கோலாக அமைந்தது. சற்று நேரத்தில் ஆட்டம் முடிய றினோன் கழகம் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.
சம்பியனான றினோன் அணிக்கு கலம்போ – சிட்டி சவால் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டதுடன் வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள் சூட்டப்பட்டன.
இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூ ஸ்டார் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் சூட்டப்பட்டன.
அத்துடன் போட்டியில் பங்குபற்றிய மற்றைய 6 கழகங்களுக்கு தலா 250,000 ரூபா வழங்கப்பட்டது.