செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் யாழ். மற்றும் மலையக வீராங்கனைகள்

இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் யாழ். மற்றும் மலையக வீராங்கனைகள்

2 minutes read

நேபாளத்தில் நடைபெறவுள்ள 7 நாடுகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன (SAFF) மகளிர் சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தின் ஹாலி எல பகுதிகளைச் சேர்ந்த நான்கு வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர்.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் முன்னாள் வீராங்கனைகளான பாஸ்கரன் ஷானு, சுரேந்திரன் கௌரி, சிவனேஸ்வரன் தர்மிகா, பதுளை, ஹாலி எலயைச் சேர்ந்த செல்வராஜ் யுவராணி ஆகியோர் இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் இடம்பெறுகின்றனர்.

ஷானு, யுவராணி ஆகிய இருவரும் சில வருடங்களாக இலங்கை மகளிர் அணியில் இடம்பெற்றுவருதுடன் கௌரி, தர்மிகா ஆகியோர் தேசிய மகளிர் அணியில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

பத்து வருடங்களுக்கு முன்னர் 14 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்ற ஷானு தொடர்ந்து சகல வயது பிரிவுகளிலும் இலங்கை அணியில் இடம்பெற்று வந்துள்ளார். கௌரி, தர்மிகா,  யுவராணி  ஆகிய மூவரும் கனிஷ்ட தேசிய அணியில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நால்வரினதும் கால்பந்தாட்ட ஆற்றல்கள் மிகச் சிறப்பாக இருப்பதாக அணி பயிற்றுநர் முன்னாள் தேசிய வீரர் மொஹமத் ஹசன் ரூமி தெரிவித்தார்.

23 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் அணக்கு துஷானி மதுஷிக்கா தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழுக்களாக நடத்தப்படும் தெற்காசய மகளிர் கால்பந்தாட்டப் போட்டியில் வரவேற்பு நாடு நேபாளம், இலங்கை, மாலைதீவுகள், பூட்டான்  ஆகியன   பி  குழுவிலும்    இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியன ஏ குழுவிலும் பங்குபற்றுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

இப் போட்டி அக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பிக்கும். அரை இறுதிகள் 27ஆம் திகதியும் இறுதிப் போட்டி 30ஆம் திகதியும் நடைபெறும்.

இலங்கை தனது முதலாவது போட்டியில் மாலைதீவுகளை 18ஆம் திகதி சந்திக்கிறது.

தொடர்ந்து பூட்டானை 21ஆம் திகதியும் கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை 24ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இலங்கைக்கு இலகுவாக அமையாது என பயிற்றுநர் மொஹமத் ஹசன் ரூமி தெரிவித்தார்.

‘கடந்த சில வருடங்களாக இலங்கையில் மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படாத நிலையில் பயிற்றுநர் பொறுப்பை நான் ஏற்றேன். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தப் பொறுப்பை ஏற்றேன். 40 வீராங்கனைகள் கொண்ட இலங்கை மகளிர் கால்பந்தாட்ட குழாத்திற்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தீவிர பயிற்சிகளை வழங்கியதுடன் சில பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடச் செய்தோம். அதன் பின்னரே 23 வீராங்கனைகள் கொண்ட இலங்கை அணி தெரிவு செய்யப்பட்டது.

‘தெற்காசிய கால்பந்தாட்டத்தில் எம்மால் சாதிக்க முடியும் என்றோ, முடியாது என்றோ என்னால் கூறமுடியாது. எனினும் மாலைதீவுகள், பூட்டான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெறுவதை இலக்கு வைத்து விளையாடவுள்ளோம். நேபாளத்துடனான போட்டியில் கடும் சவாலை நாங்கள் எதிர்கொள்வொம் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் நேபாள அணியில் இடம்பெறும் வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளில் தொழில்முறை கால்பந்தாட்டம் விளையாடுபவர்கள். அத்துடன் ஓர் ஆணைப் பொன்ற தொற்றமுடைய சபித்ரா பண்டாரி ஒரு சிறந்த வீராங்கனையாவார். அவர் பிரான்ஸ் நாட்டில் குயிங்காம்ப் அணிக்காக விளையாடி வருகிறார்’ என ரூமி மேலும் தெரிவித்தார்.

அணியின் உதவிப் பயிற்றுநராக ரட்னம் ஜஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மகளிர் குழாம்

துஷானி மதுஷிகா (தலைவி), பிரான்சிஸ் சலோமி, மஹேஷிகா குமுதினி, ஷ ஷிகா மதுவன்தி, சக்குரா செவ்வந்தி, ப்ரவீனா மாதுக்கி, ஹிமாயா சச்சினி, அச்சலா சஞ்சீவனி, ஷானிக்கா மதுமாலி, பூர்ணிமா சந்தமாலி, செல்வராஜ் யுவராணி, இஷன்கா அயோமி, மதுபாஷினி நவஞ்சனா, பாஸ்கரன் ஷானு, இமாஷா ஸ்டெஃப்னி, கீதாஞ்சலி மதுஷானி, இமேஷா அநுராதினி, டிலினிக்கா லோச்சனி, சுரேந்திரன் கௌரி, சிவனேஸ்வரன் தர்மிகா, கே. இமேஷா, தாரிதி ரன்ஷாரி, சந்துனி செவ்மினி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More