மலேசியாவின் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 9 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
19 வயதான ட்ரிஷா கொங்காடி பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து இந்தியா சம்பியனாவதை உறுதி செய்தார்.
தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியா சம்பயினாகி இருந்தது.
அந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட்களால் இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனாகி இருந்தது.
இந்த வருடம் நிக்கி ப்ரசாத் தலைமையிலான இந்தியா, சம்பியன் பட்டத்தை மீண்டும் சுவீகரித்ததன் மூலம் முதல் இரண்டு அத்தியாங்களிலும் சம்பியனான அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்காவின் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஜெம்மா போத்தா (16 ஓட்டங்கள்) உட்பட மூன்று வீராங்கனைகள், பவர் ப்ளேக்குள் ஆட்டம் இழந்ததால் தென் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், மத்திய வரிசையில் மூவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதால் தென் ஆபிரிக்கா ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.
மீக்கே வன் வூஸ்ட் 23 ஓட்டங்களையும் ஃபே கௌலிங் 15 ஓட்டங்களையும் கராபோ மெசோ 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கொங்காடி ட்ரிஷா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பூர்ணிக்கா சிசோடியா 4 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆயுஷி ஷுக்லா 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி மீண்டும் சம்பியனானது.
தமிழக வீராங்கனை குணாலன் கமிலினி (8), ட்ரிஷா கொங்காடி ஆகிய இருவரும் 27 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ட்ரிஷா, சானிக்கா சோல்கே ஆகிய இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தனர்.
கொங்காடி ட்ரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டறிகள் உட்பட 44 ஓட்டங்களுடனும் சானிக்கா சோல்கே 22 பந்துகளில் 4 பவுண்டறிகள் உட்பட 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இலங்கை உட்பட 16 அணிகள் பங்குபற்றிய இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இந்தியா சகல போட்டிகளிலும் வெற்றிபெற்றது.
முதல் சுற்றில் ஏ குழுவில் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களாலும் மலேசியாவை 10 விக்கெட்களாலும் இலங்கையை 60 ஓட்டங்களாலும் இந்தியா வெற்றிகொண்டிருந்தது.
தொடர்ந்து சுப்பர் சிக்ஸ் சுற்றில் பங்களாதேஷை 8 விக்கெட்களாலும் ஸ்கொட்லாந்தை 150 ஓட்டங்களாலும் அரை இறுதியில் இங்கிலாந்தை 9 விக்கெட்களாலும் இந்தியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றிருந்தது.
இந்திய வீராங்கனைகள் முன்னிலை
இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி வீராங்கனைகளே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் முன்னிலையில் இருக்கின்றனர்.
துடுப்பாட்டத்தில் கொங்காடி ட்ரிஷா 7 போட்டிகளில் ஒரு ஆட்டம் இழக்காத சதம் உட்பட மொத்தமாக 309 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரது சராசரி 77.25 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 147.14 ஆகும்.
ட்ரிஷா பந்துவீச்சிலும் துல்லியமாக பந்துவீசி 7 விக்கெட்களைக் கைப்பற்றி தான் ஒரு சிறந்த சகலதுறை வீராங்கனை என்பதை நிரூபித்தார்.
குணாலன் கமலினி 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 143 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் சுழல்பந்துவீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா 6 போட்டிகளில் மொத்தமாக 17 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவரது சராசரி 4.35 ஆகும்.
அவரது சக வீராங்கனை ஆயுஷி ஷுக்லா 5.71 என்ற சராசரியுடன் 14 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இறுதி போட்டியில் 44 ஓட்டங்களைப் பெற்றதுடன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியமைக்காக இறுதி ஆட்டநாயகி விருது கொங்காடி ட்ரிஷாவுக்கு வழங்க்பட்டது.
தொடரில் 309 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 விக்கெட்களை வீழ்த்தியதால் தொடர்நாயகி விருதும் ட்ரிஷாவுக்கே வழங்கப்பட்டது.