இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண றக்பி நொக் அவுட் போட்டியில் திடீர் திருப்பம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னோடி கால் இறுதிப் போட்டியில் தேர்ஸ்டன் கல்லூரியை 51 – 8 என்ற புள்ளிகள் கணக்கில் பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரி வெற்றிகொண்டிருந்தது.
இதற்கு அமைய நாளை நடைபெறவிருந்த கால் இறுதிப் போட்டியில் ஸாஹிரா கல்லூரியை புனித பேதுருவானவர் கல்லூரி எதிர்கொள்ளவிருந்தது.
ஆனால், புனித பேதுருவானர் கல்லூரி நொக் அவுட் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என ‘வீரகேசரி’ ஒன்லைனுக்கு இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத் தலைவர் கமல் ஆரியசிங்க தெரிவித்தார்.
புனித பேதுருவானவர் கல்லூரி விலகுவதற்கான காரணம் என்னவென அவரிடம் கேட்டபோது ‘அது கல்லூரியின் உள்ளக பிரச்சினையாகும். கல்லூரி நிருவாகம் எடுத்த முடிவுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்றார்.
சில வீரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும்வரையும் கல்லூரியின் பெறுமதிகளையும் நலன்களையும் கருத்தில் கொண்டு போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக கல்லூரி முதல்வரிடமிருந்து கடிதமூலம் மே முதலாம் திகதி அறிவிக்கப்பட்டதாக இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் கிம்ஹான தெரிவித்தார்.
கால் இறுதிப் போட்டிகள்
றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நாளை சனிக்கிழமை (03) நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்த கால் இறுதிப் போட்டி கைவிடப்பட்டு ஸாஹிராவுக்கு வெற்றி அளிக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் ஸாஹிரா அரை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் கண்டி திரித்துவ அணியை கல்கிஸ்ஸை சென். தோமஸ் அணி எதிர்த்தாடவுள்ளது.
இந்த இரண்டு கல்லூரிகளும் முன்னோடி அரை இறுதிப் போட்டிகளில் முறையே புனித அந்தோனியார் கல்லூரியையும் விஞ்ஞானக் கல்லூரியை இலகுவாக வெற்றிகொண்டிருந்தன.
எனினம் கால் இறுதிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் பலத்த சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (04) கடைசி இரண்டு கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் முன்னாள் சம்பியன் றோயல் கல்லூரிக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் நடைபெறும்.
இப் போட்டியில் பெரும்பாலும் றோயல் கல்லூரி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்லி கல்லூரிக்கும் நடப்பு சம்பியன் இஸிபத்தன கல்லூரிக்கும் இடையிலான கடைசி கால் இறுதிப் போட்டி றோயல் விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப் போட்டி கடைசிவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 9ஆம், 11ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி சுகததாச அரங்கில் மே 18ஆம் திகதியும் நடைபெறும்.