இண்டியன் பிறீமியர் லீக் 2025 கிரிக்கெட் போட்டிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் தேவாஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பங்குதாரர்களுடனும் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்த பின்னர் புதிய அட்டவணை மற்றும் மைதானங்கள் தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என சைக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பெரும்பாலான அணி உரிமையாளர்கள் தங்களது வீரர்கள் தொடர்பாக வெளியிட்ட கரிசணை மற்றும் உணர்வுகளையும் ஒளிபரப்பாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு ஐபிஎல் ஆளுநர் பேரவை சகல முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் நமது ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலை ஆகியவற்றின்மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முழு நம்பிக்கை வைத்துள்ளது. அத்துடன் அனைத்து பங்குதார்களினதும் கூட்டு நலனுக்காக செயல்படுவது விவேகமானது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கருதுகிறது’ என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், சைக்கியா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோரிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தம் தொடர்பாக சகல அணிகளினதும் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே இந்திய நேரப்படி இந்த அறிக்கை பிற்பகல் 2.40 மணி அளவில் வெளியிடப்பட்டது.
அணிகள் ஏற்கனவே கலைந்து செல்லத் தொடங்கியுள்ளதுடன் வீரர்களும் அதிகாரிகளும் அடுத்து கிடைக்கக்கூடிய முதலாவது விமானங்களில் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ளேயும் பயணிக்க தயாராகிவிட்டனர்.
தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்வது பொருத்தமல்ல என அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையில் தரம்சாலாவில் வியாழக்கிழமை (08) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விமானத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்த இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.