பெரிய பரந்தன் கதை
இந்த வரலாற்றை ஏற்கனவே நான் எழுதி வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வந்தது. அதனை லண்டனில் இருந்து வெளிவரும் “ஒரு பேப்பர்” பத்திரிகை தொடர்ந்து பிரசுரித்தது. வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் வந்ததை வாசித்து அதனை ரசித்த அப்போதைய “சுடரொளி வாரமலர்” ஆசிரியர் மூன்று கிராமங்களின் கதை என்ற தலையங்கத்தை “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்ற பெயரில் மாற்றி தொடராக வெளியிட்டார்.
குஞ்சுப்பரந்தன், செருக்கன் கிராமங்களின் வரலாற்றை நான் அறிந்தவரை முழுமையாக எழுதியிருந்தேன். எனது தந்தையும் நானும் பிறந்து தவழ்ந்து வளர்ந்த ” பெரிய பரந்தன்” கிராமத்தைத் பற்றி முழுமையாக எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு இருந்தது. எனவே பெரிய பரந்தன் வரலாற்றை ஒரு கதை வடிவில் எழுதி மூன்று கிராமங்களின் கதையை விரும்பி இரசித்த வாசகர்களுக்கு வழங்கலாம் என்ற எனது விருப்பத்தை ” வணக்கம் லண்டன்” இணையத்தளத்தின் இயக்குனரிடம் தெரிவித்தேன். அவரும் மனமுவந்து சம்மதித்தார்.
இதோ “பெரிய பரந்தன்” கதை
மேற்கே கொல்லனாறு, தெற்கே எள்ளுக்காடு, கிழக்கே நீலனாறு, வடக்கே வடக்குக் காடு என்பவற்றிற்கிடையே அமைந்திருந்த காடு, மீசாலையிலிருந்து வந்த தம்பையராலும், அவரது உறவினர்களாலும், தம்பையரின் உறவினர்களும் இணைபிரியாத நண்பர்களாகவுமிருந்த ஆறுமுகம், முத்தர் என்பவர்களாலும் வெட்டப்பட்டு கழனியாக்கப்பட்டு பின்னர் வளம் கொழிக்கும் கிராமம் ஆக மாறிய இடமே பெரிய பரந்தன் ஆகும்.
1900 ஆம் ஆண்டளவில் ஒருநாள்….
தம்பையர், ஆறுமுகம், முத்தர், தம்பையரின் நெருங்கிய உறவினர்களாகிய ஐந்து பேர் அடங்கிய இளைஞர் குழு காடு வெட்டத் தேவையான கத்தி, கோடரி, மண்வெட்டி அலவாங்கு, சுட்டியல், முதலியவற்றையும் இரண்டு கிழமைக்கு சாப்பாட்டிற்கு தேவையான அரிசி, மா, பருப்பு, சீனி, உப்பு, தூள், புளி என்பவற்றையும் பொதிகளாக கட்டிக் கொண்டு இரண்டு மாட்டு வண்டில்களில் மீசாலையிலிருந்து அதி காலையில் புறப்பட்டு கச்சாய் துறைமுகத்தை அடைந்தனர். இவர்களில் சிலர் தமது வளர்ப்பு நாய்களையும் வண்டியின் பின்னால் ஓடிவரச் செய்தனர்.
கச்சாய் துறைமுகத்தில் செருக்கன் கிராமத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு தோணிகளுடன் காத்திருந்தனர். தம்பையரும் குழுவினரும் இரண்டு பிரிவாக இரண்டு தோணிகளிலும் ஏறினர். ஆறுமுகமும் முத்தரும் தம்பையர் ஏறிய தோணியிலேயே ஏறினர். சில நாய்கள் தோணிகளில் ஏறி இருந்தன. சில உரிமையாளர்கள் கயிற்றால் கழுத்தில் கட்டி பிடித்திருக்க தோணியுடன் நாய்கள் நீந்திவர தோணிகள் புறப்பட்டு சுட்டதீவு துறையை நோக்கி பயணத்தை தொடங்கின.
நாய்கள் களைத்த போதும் குளிரில் நடுங்கிய போதும் உரிமையாளர்கள் அவற்றைத் தூக்கி தோணியில் விட்டனர். வெய்யில் சுள்ளென்று சுடத் தொடங்க தோணிகள் சுட்ட தீவு கரையை அடைந்தன. நாய்கள் சுட்டதீவின் சுடு மணலில் உருண்டு பிரண்டு தம்மை சூடேற்றிக் கொண்டன.
எல்லோரும் பொதிகளை இறக்கி சுட்டதீவு பிள்ளையார் கோயிலின் அருகே இருந்த ஒரு வேப்பமர நிழலில் கொண்டு போய் வைத்தனர். ஆறுமுகம் கோவில் பூசாரிகள் வெட்டி பயன் படுத்திய பூவலில் (பழைய நூல்களில் “கூவல்” என்றும் கேணி போல வெட்டப்பட்ட கிணறுகளை அழைத்தனர்) நீரை அள்ளி ஒரு பானையில் கொதிக்க வைத்தான். அதனுள் தேயிலைத் தூளை போட்டான். பின்புறம் செருக்கப்பட்ட சிரட்டைகளில் தேனீரை வார்த்து ஒவ்வொரு பனங்கட்டி துண்டுடன் எல்லோருக்கும் பரிமாறினான்.
தேனீர் குடித்து களையாறிய தம்பையருடனும் குழுவினருடனும் பிடித்த மீன்களுடன் கரை சேர்ந்திருந்த செருக்கன் மக்கள் உரையாடினார்கள். குழுவினர் தாம் காடு வெட்டி கழனியாக்கி வாழ வந்ததாக கூறினார்கள். செருக்கன் மக்கள் மிகவும் மகிழ்ந்து நல்ல விடயம் என்று பாராட்டினார்கள். தாம் அயற்கிராமமாகிய செருக்கனில் வசிப்பதாகவும் அவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்கள். சிறிது தூரம் தெற்கே நடந்து ஒரு சிறிய மரத்தில் ஏறி பார்த்தால் தெற்கில் ஒரு மிகப்பெரிய புளியமரம் தெரியும் என்றும் அப்புளிய மரத்தை நோக்கி போனால் பெரிய பரந்தன் காடு வரும் என்றும் கூறினார்கள். குஞ்சுப்பரந்தன், செருக்கன் மக்கள் காட்டில் திசை மாறி தவிக்கும் போது அந்த புளியமரம் தான் வழிகாட்டி உதவும், அதனால் தாங்கள் அப்புளிய மரத்தை “குறிப்பம் புளி” என்று அழப்பதாகவும் கூறினார்கள்.
தம்பையரும் குழுவினரும் பொதிகளை சுமந்தபடி காட்டுப்பாதையில் நடந்தனர். வழியில் மான்கள், மரைகள், குழுமாடுகளைக் கண்ட நாய்கள் குரைத்தபடி அவற்றை துரத்திப் பார்த்துவிட்டு களைத்தபடி மீண்டும் வந்து குழுவினருடன் இணைந்துகொண்டன. குழுவினரைச்சுற்றி ஓடியபடி வந்த நாய்கள் ஒரு பெரிய உடும்பைக் கண்டன. எல்லாமாக அதை சுற்றி வளைத்தன. அது பயந்து போய் அருகே இருந்த ஒரு புற்றுக்குள் புகுந்தது. முழுவதுமாக உள்ளே நுழைய முடியவில்லை. நாய்களோ விடாது குரைத்தன. ஆறுமுகம் தனது பொதியை இறக்கி வைத்து விட்டு உடும்பை லாவகமாகப் பிடித்து வாலைச்சுற்றி கட்டி கூட வந்த ஒருவரிடம் கொடுத்தான். மதியம் நல்ல சாப்பாடு என்று எல்லோரும் மகிழ்ந்தனர். தம்பையரும் இன்னொருவரும் மச்சம் சாப்பிடுவதில்லை. மற்றொருவர் உடும்பு இறைச்சி மட்டும் சாப்பிடுவதில்லை. அவர்களுக்கு பருப்புக்கறி மட்டும் தான் இன்று. ஏனைய ஐந்து பேருக்கும் பொதிகளை சுமந்து நடந்த களைக்கு முறையான சாப்பாடு காத்திருந்தது.
சூரியன் உச்சத்தில் வரவும் குழுவினர் குறிப்பம் புளியை அடைந்தனர். புளிக்கு அண்மையாக ஒரு நீர்நிலை நீர்நிறைந்து காணப்பட்டது. அருங்கோடைக்கு காட்டு விலங்குகளும் அங்குதான் நீர் அருந்த வரும் என்பதை குழுவினர் புரிந்து கொண்டனர். நீர் நிலைக்கு கிட்டிய தூரத்தில் காணப்பட்ட காய்ந்த யானை லத்திகள் அது உண்மை தான் என பறை சாற்றின. குறிப்பம் புளிக்கும் நீர்நிலைக்கும் இடையில் காணப்பட்ட ஒரு வெளியான இடத்தில் பொதிகளை வைத்து விட்டு அந்த இடத்தில இருந்த புற்களை செருக்கியும் சிறு பற்றைகளை வெட்டியும் துப்பரவாக்கத் தொடங்கினர். ஆறுமுகம் உடும்பை உரித்து துப்பரவு செய்தான். தம்பையர் மண்ணிலே இரண்டு அடுப்புக்களை எவ்வாறு வெட்டுவது என்று ஒருவருக்கு காட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவர் நீர்நிலைக்கு அருகே ஒரு சிறிய பூவல் வெட்டினார். அதில் நீர் ஊறி சிறிது நேரத்தில் பூவல் நிரம்பிவிட்டது.
ஆறுமுகம் பூவலிலிருந்து நீர் கொண்டுவந்து உடும்புக்கறியைக் காய்ச்ச, முத்தர் ஒரு பானையில் சோறும் ஒரு சிறிய சட்டியில் பருப்புக் கறியையும் காய்ச்சி விட்டார். ஒருவர் காவலிருக்க ஏனையவர்கள் நீர்நிலைக்குச் சென்று தம்மை சுத்தம் செய்து கொண்டு வந்தனர். காவல் இருந்தவர் போய் சுத்தம் செய்து வரும் வரை எல்லோரும் வட்டமாக இருந்து மறு நாள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டனர். சாப்பிட்டபின் எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தனர், ஒரே காடு தான் தென்பட்டது. பின் இருவர் மூவராக பெரியபரந்தன் காட்டை சுற்றி பார்க்க சென்றனர். எசமான்கள் கொடுத்த சாப்பாட்டை உண்ட நாய்களும் அவர்களுக்கு துணையாக சென்றன. முயல்கள், நரிகளைக் கண்ட நாய்கள் குரைத்த சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.
இரவு வந்ததும் தாம் துப்பரவு செய்த வெளியின் நான்கு பக்கமும் பட்ட காட்டு மரங்களைக் போட்டு நெருப்பு எரித்தனர். நெருப்பு வெளிச்சத்திற்கும் சூட்டிற்கும் பயந்து காட்டு விலங்குகள் வரமாட்டா என்பதை குழுவினர் அறிந்து வைத்திருந்தனர். இரவு வந்ததும், மதியம் எஞ்சியிருந்த சோறு கறியைக் குழைத்து தாமும் பகிர்ந்து உண்டு நாய்களுக்கும் வைத்தனர். பிரயாணக் களைப்பு, நடந்த களைப்பு, பொதிகளை சுமந்த களைப்பு, வெளியைத் துப்பரவாக்கிய களைப்பு எல்லாம் சேர பொதிகளைச் சுற்றி வைத்து நாய்களையும் காவல் வைத்து வெளியின் நடுவிலே எல்லோரும் படுத்து உறங்கினர். நாய்கள் சுற்றி சுற்றி வந்து காவல் காத்தன. சிறுத்தைகள் தூரத்தில் உறுமிய சத்தமோ, யானைகள் பிளிறிய சத்தமோ, ஆந்தைகள் அலறிய சத்தமோ, ஏனைய விலங்குகளும் பறவைகளும் போட்ட சத்தமோ அவர்களின் காதுகளில் விழவில்லை. வானமே கூரையாக எல்லோரும் உலகத்தை மறந்து தூங்கினார்கள். முதல் நாள் பொழுது இவ்வாறு கழிந்தது.
(பெரிய பரந்தன் உருவாகிய வரலாறு கதை வடிவில் தொடரும்)
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்