செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்

7 minutes read

இது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய மரம். யுத்த காலத்தில் ஷெல் அடிகளால் கிளைகளை இழந்து, காயம் பட்ட போதும், இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

*******************************************************

எல்லோரும் நித்திரை விட்டு எழுந்தனர். காட்டுக்குள் சென்று காலைக் கடன் கழித்து விட்டு வந்து நீர்நிலையில் கால், கை கழுவிக் கொண்டனர். வேப்பம் தடிகளை முறித்து பற்களை விளக்கிக் கொண்டனர். வாய் கொப்பளித்து, முகம் கழுவி புத்துணர்ச்சியுடன் வந்தனர்.

காட்டுச் சேவல்கள் கூவிய சத்தத்திலும் கௌதாரிகள் கத்திய சத்தத்திலும் முதலே எழுந்து விட்ட முத்தர் ஏனையவர்கள் தயாராகி வரும் போது கஞ்சி காய்ச்சி முடித்து விட்டார். எல்லோரும் தமது அழகாக செருக்கப்பட்ட சிரட்டைகளில் கஞ்சியை வார்த்து ஊதி ஊதி குடித்தனர்.

தம்பையர் சிறு வயதில் தந்தையாருடன் பொறிக்கடவை அம்மன் கோவிலுக்கு வரும் போதெல்லாம் செழிப்பான குஞ்சுப்பரந்தன் வயல்களையும் தென்னஞ்சோலைகளையும் பார்த்து மகிழ்வார். அந்த மக்கள் மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், சங்கத்தானை போன்ற இடங்களில் மிகவும் வசதியாக வாழ்வதை அவர் அவதானித்திருக்கின்றார்.

நீலனாறு, கொல்லனாறு என்பவற்றிற்கிடையே இருக்கும் காட்டையும் பார்த்திருக்கின்றார். இந்தக் காட்டை வெட்டி கழனியாக்கி பெரிய பரந்தன் என்று பெயரும் சூட்டி, தாமும் தனது நெருங்கிய உறவுகளும் செல்வத்துடனும் செல்வாக்காகவும்  ஏன் வாழ முடியாது? என்ற எண்ணம் அடிக்கடி வரும். முதலில் இருந்தது குஞ்சுப் பரந்தன் என்பதால் பிறகு வருவதை பெரிய பரந்தன் என்று அழைக்கும் முடிவை நண்பர்கள் எடுத்திருந்தனர்.

தனது நெருக்கமான நண்பர்களான முத்தருடனும் ஆறுமுகத்துடனும் இது பற்றி அடிக்கடி கதைப்பார். முத்தரும் தம்பையர் போல மட்டுவில் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சிறுவயதில் படித்தவர். ஆறுமுகம் அதிகம் படிக்காதவராயிருந்தாலும் அனுபவ அறிவு நிரம்ப பெற்றவர். தம்பையரின் கனவு அவர்களையும் தொற்றிக் கொண்டது.

தம்பையர் ஒருமுறை தனது தந்தையாராகிய தியாகருடன் காட்டைச் சுற்றிப் பார்க்கும் போது ஒரு மேட்டுக் காணியையும் அதனருகில் பள்ளக்காணியையும் அவதானித்தார். இப்போது காட்டை சுற்றிப் பார்த்த போது, அது தான் சிறுவயதில் தந்தையாருடன் வந்து பார்த்த இடம் என்பதை புரிந்துகொண்டார். அந்தக் காணியை அவர் தனக்கென தெரிவு செய்து கொண்டார். ஏனையவர்களும் தமக்கு விருப்பமான பகுதியை தெரிந்தெடுத்துக் கொண்டனர்.

தம்பையருடைய காணியை துப்பரவு செய்து, தாங்கள் யாவரும் தங்கியிருக்க கூடிய ஒரு பெரிய கொட்டில் போடுவது என்பது ஊரில் இருந்து வரும் போதே தீர்மானித்த விடயம். எனவே மூன்று பேர் கொட்டில் போடும் காணியை துப்பரவு செய்ய, ஏனையவர்கள் வடக்கு காட்டில் கப்புக்கள், வளைத்தடிகள், பாய்ச்சுத்தடிகள் வெட்ட சென்றனர். முத்தர் ஓரளவு தச்சு வேலை தெரிந்தவர் என்பதால் அவர் காட்டிற்கு சென்றவர்களுடன் சேர்ந்து சென்றார்.

தம்பையரும் ஆறுமுகமும் இன்னொருவரும் தம்பையருடைய காணியை துப்பரவு செய்ய சென்றனர். ஆறுமுகத்தாருக்கு இவர்கள் எல்லோருக்கும் சமைக்கும் பொறுப்பும் அன்று வழங்கப்பட்டது. சுழற்சி முறையில் ஒவ்வொருவரும் சமைப்பது என்பதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் தான்.

ஆறுமுகம் அன்று சற்று முன்னரே சமைக்கச் சென்று விட்டார். அவர் போகும் வழியில் தான் முன்னரே பார்த்து வைத்த, பற்றைகளின் மேல் படர்ந்திருந்த தூதுவளைச் செடியில் சில இலைகளையும் பறித்துச் சென்றார். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பருப்புக்கறியும் தூதுவளைச் சம்பலும், ஏனையவர்களுக்கு மேலதிகமாக கருவாட்டுக் கறியும் வைத்தார். மத்தியான வேளை தம்பையரும் மற்றவரும் வந்ததும் அவர்களை சாப்பிடும்படி கூறிவிட்டு, ஆறுமுகம் தனது நாயை துணையாக வைத்துக் கொண்டு ஏனையவர்களுக்கான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வடக்கு காட்டிற்குள் சென்றார்.

வேறு யாரும் அந்த பகுதியில் இல்லாத படியால் நாய்களின் குரைக்கும் சத்தத்தை வைத்து மற்றவர்களை கண்டு பிடிக்கலாம் என்றும், தவறினாலும் தனது நாய் தன்னை அவர்களிருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதும் ஆறுமுகத்தாருக்கு தெரியும். அந்த நாளில் நாய்கள் தான் மனிதனுக்கு தோழனாக, இருந்து பல தடவைகள் உதவியிருக்கின்றன. சிறிது தூரம் சென்றதும் ஆறுமுகம் கையை வாயில் வைத்து சத்தமாக விசிலடித்தார். உடனே நாய்கள் குரைக்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து அவர்களில் யாரோ ஒருவர் பதிலுக்கு சீக்காயடிக்கும் சத்தமும் கேட்டன.

வெட்டிய மரங்களையும் தடிகளையும் ஓரிடத்தில் வைத்துவிட்டு, அருகே காணப்பட்ட நீர்நிலையில் மேல் கழுவி ஆறி இருந்தவர்களுக்கு ஆறுமுகத்தின் சாப்பாடு அமிர்தம் போன்று இருந்தது. ஆறுமுகமும் அவர்களோடு சாப்பிட்டார். எல்லோரும் முதல் நாளின் உடும்புக்கறியைப் பற்றி ஆர்வத்துடன் கதைத்தனர். மரங்களையும் தடிகளையும் வெட்ட இன்னும் ஒருநாள் தேவைப்படும் என்று கணித்த ஆறுமுகம் மறுநாள் அவர்களுக்கு ஏதாவது சுவையான கறி வழங்க வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார்.

சாப்பாடு கொண்டு செல்லும் போது பாதுகாப்புக்கு ஒரு நன்கு கூராக்கப்பட்ட கத்தியை ஆறுமுகம் கொண்டு சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில் கட்டுவதற்கு ஏற்ற கொடிகளை வெட்டி எடுத்துக் கொண்டார்.

 நான்கு அடி நீளமான தடிகள் சிலவற்றையும் வெட்டித் தூக்கிக் கொண்டார். அன்று இரண்டு “டார்” அமைப்பதென்று முடிவெடுத்து விட்டார்.

டார் அமைத்தல்

ஆறுமுகம் நான்கு தடிகளைச் சதுரமாக தான் கொண்டு சென்ற தாவரத்தின் கொடியினால் கட்டினார். குறுக்காக அரை அடி இடைவெளியில் தடிகளைக் கட்டினார். பின் அவற்றிற்கு செங்குத்தாக அரை அடி இடைவெளியில் தடிகளைக் கட்டினார். இதே போன்று இன்னொரு சதுர அமைப்பையும் கட்டிக்கொண்டார். கொடிகள் மிகவும் பலம் மிக்கவை. இரண்டு மூன்று கொடிகளை திரித்துவிட்டால் மாடுகளையும் கட்டி வைக்க கூடிய இன்னும் பலமான கயிறு கிடைத்து விடும்.

கௌதாரிகளும் காட்டுக் கோழிகளும் வரக்கூடிய இரண்டு இடத்தை தேர்ந்தெடுத்தார். சதுரமாக கட்டிய அமைப்பை இரண்டு இடத்திலும் ஒவ்வொன்றாக கொண்டு சென்று வைத்தார். குழைகளை வெட்டி அந்த சதுரத்தின் மேல் பரப்பி கட்டினார். பின் ஈரமான களி மண்ணை குழைகளின் மேல் போட்டு மெழுகி விட்டார்.

இப்போது “டார்” தயார். இனி அதனை பொறிவாக கட்டுவதிலே தான் நுட்பம் உண்டு. ஒரு தடியை சற்றே வெளிப்புறம் சாய்வாக, தட்டி விட்டவுடன் வெளியே விழத்தக்கதாக நட வேண்டும். டாரின் ஒரு பக்கத்தை நிலத்தில் வைத்து எதிர்ப் பக்கத்தின் நடுப்பகுதியை முன்னரே நட்ட தடியுடன் கட்ட வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கப்பலில் பாயை கம்பத்துடன் கட்டுவது போல.

ஆறுமுகம் தான் அமைத்த டாரை தடியில் கட்டி விட்டார்.

ஆறுமுகம் ஏற்கனவே சிறிது அரிசியை மடியில் கட்டி வந்திருந்தார். அவற்றை இரண்டு பகுதியாக பிரித்து இரண்டு டார்களின் கீழும் தூவி விட்டார். இனி வாய்ப்பைப் பொறுத்தது. கால்களால் கௌதாரிகளோ, காட்டு கோழிகளோ நிலத்தைக் கீறி மேயும் போது அந்த அதிர்வில் தடி வெளிப் புறம் விழ, டார்  அவற்றின் மீது  விழுந்து விடும்.

ஆறுமுகத்தார் சற்று தாமதித்தே வந்ததை அவதானித்த தம்பையர் அவர் மரம் வெட்டுபவர்களுக்கு உதவி விட்டு வருகிறார் என்று எண்ணிக் கொண்டார். காட்டிலுள்ளவர்களோ ஆறுமுகம் உடனே திரும்பி தம்பையருக்கு உதவப் போயிருப்பார் என நினைத்துக் கொண்டனர். ஆறுமுகம் “டார்” பொறி வைத்ததை ஒருவருக்கும் கூறவில்லை.

அடுத்தநாள் காலை கஞ்சி குடித்துவிட்டு காட்டுக்கு போபவர்கள் போய் விட்டார்கள். ஆறுமுகம் தம்பையரிடம் தான் நீர்நிலையின் அருகே வல்லாரைக் கீரை படர்ந்திருக்கக் கண்டதாகவும் அவற்றுடன், முடக்கொத்தான் இலைகளையும் பிடுங்கி வந்தால் இரவில் இரசம் வைத்துக் கொடுக்கலாம் என்றும் வேலை செய்பவர்களின் உடல் உழைவுகள் பறந்தோடி விடும் என்றும் கூறி விட்டு காட்டுக்குள் சென்றார். தான் சொன்னது போல வல்லாரை இலைகளையும் முடக்கொத்தான் இலைகளையும் சேகரித்துக் கொண்டார்.

ஆறுமுகம் சற்று பதற்றத்துடனேயே முதலாவது டார் இருக்கும் இடத்தை அடைந்தார். டார் விழுந்திருந்தது. காற்றிற்கும் விழுந்திருக்கும். விசப் பாம்புகள் நடமாடியும் விழுந்திருக்கலாம். பறவைகளாலும் விழுந்திருக்கலாம்.

பறவைகளாயிருந்தால் டாரை தூக்க உயிருடன் இருப்பவை ஓடிவிடக் கூடும். விச ஜந்துக்களாய் இருந்தால் கையை விட்டுப் பார்க்க கடித்து விடக் கூடும்.

ஆறுமுகத்தார் டாரின் மேலேறி நின்று நன்கு மிதித்தார். ஆறுமுகம் உயரம் பெருப்பமான மனிதர். அவரின் மிதியில் எந்த விலங்கும் இறந்து விடும். ஆறுமுகம் டாரைத் தூக்கினார். அங்கே மூன்று கௌதாரிகள் விழுந்திருந்தன. அடுத்த டாரிலும் இரண்டு கௌதாரிகள் விழுந்திருந்தன. மதியம் வந்து டாரை திருத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

விறு விறுவென்று நடந்து தம்பையர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று நடந்ததைக் கூறி, தான் விரைவில் சென்று சமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, இலைகளையும் கௌதாரிகளையும் பத்திரமாக வைத்துவிட்டு பற்றைகளை வெட்டத் தொடங்கினார். தம்பையரோ ஆறுமுகம் கூறியதைக் கேட்டு புன்முறுவலுடன் தலையை ஆட்டினார். தம்பையர் கண்டபடி கதைக்க மாட்டார்.

ஆனால் அவர் ஒரு விடயத்தைச் சொன்னால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆறுமுகம் வேளையுடன் சென்று கௌதாரிகளை துப்பரவு செய்து கறி காய்ச்சி, வல்லாரைச் சம்பல் அரைத்து, ஈரச்சேலையில் சுற்றி வைத்திருந்த முருக்கங்காயை சைவர்களுக்காக காய்ச்சி முடிய தம்பையரின் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அவர்களைச் சாப்பிடச் சொல்லிவிட்டு, ஆறுமுகம் முதல் நாளைப் போலவே காட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாடு கொண்டு போனார். இன்று கௌதாரிக் கறி என்று அறிந்ததும் அவர்கள் துள்ளிக் குதித்தார்கள். தாங்களும் வந்து உதவி செய்து இன்னும் மூன்று டார்களை அமைப்போம் என்று உற்சாகமாக கூறினார்கள்.

தொடரும்..

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More