மூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை “தியாகர் வயல்” என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.
உடனே இன்னொருவர் “குழந்தையன் மோட்டை” என்று தனது மூதாதையரின் பெயரையும் தனது காணியில் இருந்த நீர் நிலையையும் இணைத்து பெயரிடப் போவாக சொன்னார். மற்றொருவர் “பொந்து மருதோடை” என்று தனது காணியில் நின்ற பொந்துள்ள பெரிய மருத மரத்தையும் தனது காணிக்கு அருகே ஓடிய ஓடையையும் சேர்த்து அழைக்க விரும்பினார்.
இப்போது இரவில் இவ்வாறு பெயர் வைப்பதுடன் தமது காணியை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்ற சிந்தனை ஏற்படக்கூடியதாக தம்பையர் ஏதாவது கூறி உற்சாகப் படுத்தி கொண்டேயிருந்தார்.
அடுத்த நாள் மூவர் குறிப்பம் புளிக்கு அருகே இருந்த பனங்கூடலில் சில பனை மரங்களில் ஏறி ஓலைகளை வெட்டிப் போட கீழே நின்ற மற்றவர்கள் அவற்றை பாடாக மிதித்து அடுக்கி வைத்தனர். பனை ஓலைகள் கொட்டில்களை வேய்வதற்கு பயன் படும். இன்று சமையல் பொறுப்பு சைவ உணவு உண்பவருக்கு வந்தது.
அவர் சுட்டதீவிலிருந்து நடந்து வந்த போது வழியில் காட்டில் விளையும் வட்டுக் கத்தரிக்காய்களையும் குருவித் தலைப் பாகற்காய்களையும் கண்டிருந்தார். பாகற்காய் சிறிதாக குருவியின் தலை போன்றிருந்தபடியால் அந்தப் பெயர். அவர் பாகற்காய் குழம்பையும், வட்டுக்கத்தரிக்காயை அடித்து விதைகளை அகற்றி, பின் தேங்காய் எண்ணெயில் பொரித்தும், காட்டில் பறித்த மொசுமொசுக்கை வறையும் ஆக்கியிருந்தார். எல்லோரும் ரசித்து உண்டனர்.
இப்போது காடு பற்றிய பயம் அவர்களுக்கு போய் விட்டது. இடைக்கிடை சிறுத்தைகள் உறுமிய சத்தம் தூரத்தில் கேட்கத் தான் செய்தது. யானைகளும் மனித வாடையை நுகர்ந்து விலகி விட்டன. காடு, தன்னை அறிந்த மக்களுக்கு நீர், உணவு வழங்கி காப்பாற்றும் என்பதையும் உணர்ந்து விட்டனர்.
செருக்கன் மக்களும் தாம் வாக்களித்த படி உதவ முன் வந்தனர். இவர்களின் கோரிக்கைப்படி மூன்று மாட்டு வண்டில்களைக் கொண்டு வந்தனர். வரும்போது அன்று பிடிபட்ட உடன் மீன்களுடன் வந்திருந்தனர். இருவர் அவர்களுக்கும் தங்களுக்கும் சேர்த்து சமையல் செய்ய ஆரம்பித்தனர்.
ஏனைய ஆறு பேரும் கப்புக்கள், வளைகள், பாய்ச்சுத்தடிகள், பனை ஓலைகள் முதலியவற்றை ஏற்றி தம்பையரின் காணிக்கு கொண்டு வந்தனர். மத்தியானம் சாப்பிடும் போது தான் சற்று ஓய்வு. முழுவதையும் ஏற்றி முடிய பொழுதும் சாய்ந்தது. செருக்கன் உறவுகளை நன்றி கூறி அனுப்பி வைத்தனர்.
வெட்டி ஏற்றிவந்த கப்புகள், வளைகள், பாய்ச்சுத்தடிகள் தம்பையரது காணியில் கொட்டில்களை போட்டு, மிகுதியில் இன்னும் மூவரின் காணிகளில் கொட்டில்களை போடப் போதுமானவை. அடுத்த நான்கு நாட்களும் தம்பையரின் காணியில் யாவரும் படுத்து உறங்கக் கூடிய பெரிய கொட்டில் ஒன்றும், சமைப்பதற்கான கொட்டில் ஒன்றும் போடத் தேவைப்பட்டது.
கொட்டில் போட்டு, வேய்ந்து, உள்ளே மண் போட்டு சமன்படுத்தி அடித்து இறுக்கி, மெழுகி முடித்தார்கள். அன்றிரவு அவர்களின் பொருட்கள் எல்லாம் கொட்டிலுக்கு வந்து சேர்ந்தன. இப்போது ஒரு வீட்டில் வாழுகின்ற பாதுகாப்பு உணர்வு ஏற்பட யாவரும் நிம்மதி அடைந்தனர்.
இப்போது தான் தாங்கள் வெளியில் படுத்த பொழுது பயந்த கதைகளை ஒவ்வொருவரும் கூறினர். இரவில் சரசரத்த சத்தத்தைக் கேட்டு பாம்பு தான் கடிக்க வருகுது என்று ஒருவர் பயந்திருந்தார். கரடி வந்து கண்களைத் தோண்டி எடுத்து விடுமோ என்று இன்னொருவர் பயந்திருந்தார். தாங்கள் பயந்து நடுங்கியதை வெளிக் காட்டாது தாம் பயப்படவே இல்லை என்று வீரம் பேசியவர்களும் இருந்தார்கள்.
எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. காலை கை, கால், முகம் கழுவி திருநீறு பூசும் போது தாங்கள் கோவிலுக்கு போய்க் கனநாளாகின்றது என்று சிலர் முணுமுணுத்தார்கள். இத்தக் குறை அவர்கள் மனதில் வந்து விடக்கூடாது என்பதில் தம்பையரும், முத்தரும், ஆறுமுகத்தாரும் கவனமாக இருந்தார்கள். முத்தர், பிள்ளையார் கோவிலுக்கு என்று ஒரு இடமும் காளி அம்மன் கோவிலுக்கு என்று ஒரு இடமும் தனது காணிக்கு அருகே பார்த்து வைத்திருந்தார்.
அடுத்த நாள் தம்பையர் தான் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, கோயில்களுக்கு பார்த்து வைத்த இரு இடங்களையும் பற்றைகளை வெட்டி, செருக்கி துப்பரவாக்க அனுப்பி வைத்தார். அவர்கள் யாவரும் உற்சாகமாக அன்று முழுவதும் அந்த வேலையைச் செய்து முடித்தார்கள்.
ஆற்றிலே ஆண்டாண்டு காலமாக கிடந்து ஆற்று நீரினால் உருமாறி முக்கோண வடிவில் இருந்த ஒரு பெரிய கல்லை ஆறுமுகத்தின் தோளில் தூக்கி வைத்து தம்பையரும் முத்தரும் பிள்ளையாருக்கென ஒதுக்கிய காணிக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு பெரிய பாலை மரத்தின் கீழ் முத்தர் அதனை நாட்டி வைத்தார். வணங்குவதற்காக பிள்ளையார் கோவில் உருவாயிற்று.
இளைஞர்களில் இருவர் திருமணம் செய்யாதவர்கள். ஒருவருக்கு திருமணம் முற்றாகி இருந்தது இன்னும் மூன்று மாதங்களில் திருமணம். மற்றவர் தனக்கு என்று ஒரு காணியை வெட்டி, வாழ்வதற்கு அந்த காணியில் ஒரு கொட்டிலையும் போட்ட பின்னர் தான் அதைப் பற்றி யோசிக்கப் போவதாக கூறினார். தம்பையருக்கு விசாலாட்சியுடன் திருமணமாகி கணபதிப்பிள்ளை என்ற ஒரு மகனும் இருக்கின்றான். ஆறுமுகத்தார் திருமணம் செய்து இரண்டு வருட வாழ்க்கை நிறைவு பெற முன், அவர் மனைவி காய்ச்சலில் மூன்று நாள் தவித்து பரியாரியாரின் வைத்தியம் பலனின்றி இறந்து விட்டா. அவருக்கு இன்னும் அந்த துக்கம் மறையவில்லை. சகோதரிகளுக்காக மனதைத் தேற்றிக் கொண்டு நடமாடுகிறார்.
முத்தரின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். பிள்ளைப் பேறுக்கான நாளும் நெருங்கி விட்டது. முத்தர் ஒரு முறை ஊருக்குப் போய் வரத் தீர்மானித்தார். தம்பையர் அவருடன் திருமணமான மற்ற மூவரையும் போய் வருமாறு கூறினார். உணவுப் பொருட்களும் முடிந்து விட்டன. அவற்றையும் எடுத்து வருமாறு கூறினார். திருமணம் முற்றாக்கப்பட்ட இளைஞன் தானும், போய் தாய் தகப்பனைப் பார்த்து வருவதாகக் கூறினான். மற்ற இளைஞன், அவன் தனக்கு முற்றாக்கி வைத்த பெண்ணைப் பார்க்கத் தான் அவசரப்படுகிறான் என்று கேலி செய்தான். தம்பையர் வழமை போல ஒரு புன்முறுவலுடன் அவனையும் போகுமாறு கூறினார்.
தம்பையரும் ஆறுமுகமும் இளைஞனுமாக மற்ற ஐவரையும் வழி அனுப்பி வைத்தனர். ஏற்கனவே செருக்கன் நண்பர்களிடம் சொல்லி வைத்ததால், அவர்களை சுட்டதீவு துறையிலிருந்து கச்சாய் துறைக்கு அழைத்துப் போக தோணிகள் காத்திருக்கும்.
தம்பையரும் குழுவினரும் காடழிப்பதற்கு உடலுழைப்புடன், அக்கினி பகவானையும் பயன் படுத்த தீர்மானித்திருந்தனர். வெட்டிய பற்றைகளையும் மரங்களையும் பெரிய பற்றைகளின் மேல் படினமாக போட்டு வைத்தனர். அவை காய்ந்த பின்னர் நெருப்பு வைத்தால் வெட்டிப் போட்ட பற்றைகளுடன் பெரிய பற்றைகளும் சேர்ந்து விளாசி எரியும். காடு வெட்டுவதன் அரைவாசி வேலையை தீ செய்துவிடும்.
தம்பையரும் ஆறுமுகமும் இளைஞனும் நன்கு காய்ந்திருந்த பற்றைகளை எரிக்கத் தொடங்கினர். அவை விளாசி எரியத்தொடங்கின. எங்கும் தீ. ஒரே புகை மண்டலம். பற்றைகளில் மறந்திருந்த முயல்கள், உடும்புகள், அணில்கள், கௌதாரிகள், கானாங்குருவிகள் முதலிய விலங்குகள் பதறியடித்துக் கொண்டு உயிரைத் காப்பாற்ற ஓடின.
ஐந்தாம் நாள் போனவர்களில் மூன்று பேர் மட்டும் திரும்பி வந்தனர். அவர்களுடன் போன ஐவரும் கூறிய புதினங்களால் துணிச்சல் பெற்ற, மேலும் நான்கு புதியவர்களும் வந்திருந்தனர். முத்தரின் மனைவிக்கு ஆண் குழந்தை கிடைத்துவிட்டது. வைத்திய சாலை நிர்வாகம் உடனே பெயர் வைக்குமாறு கூறியதால், முத்தர் தன்மகனுக்கும் கணபதிப்பிள்ளை என்ற தம்பையரின் மகனது பெயரையே வைத்தார்.
அவர்களது நட்பு அவ்வளவு இறுக்கமானது. முத்தர் சில நாட்கள் கழித்து வருவார். மற்றவரின் குழந்தைக்கு சுகயீனம். பிள்ளைக்கு ஓரளவு சுகமாக முத்தருடன் தானும் வருவதாக கூறி நின்று விட்டார்.
ஏற்கனவே தங்கியிருந்த மூவருடன் இப்போது வந்த ஏழு பேரும் சேர்ந்து பத்துப் பேரும் முதலில் வந்து காடு வெட்டிய எட்டுப் பேரின் காணிகளை நோக்கினர். அவை பெரும்பாலும் துப்பரவாக்கப்பட்டு வெளியாக தெரிந்தன. புதிதாக வந்த நால்வரும் தாங்களும் தொடக்கத்திலேயே வந்திருக்கலாமே என்று ஆவலுடன் பார்த்தனர்.
தொடரும்..
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/