செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

8 minutes read

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின் இறைச்சி. அந்த காலத்தில் அரிய உயிரினங்களை பாதுகாக்கும் சட்டம் கடுமையாக இல்லை.

தாவர உணவு உண்போருக்கு குருவித்தலைப் பாகற்காய், வட்டுக் கத்தரிக்காய், பிரண்டைத் தண்டு, மொசுமொசுக்கை இலை, தூதுவளை, வல்லாரை, முடக்கொத்தான் இலை முதலியன. பழ வகைகளுக்கு பாலைப் பழம், ஈச்சம் பழம், கருப்பம் பழம், விளாம்பழம், நாவற் பழம், துவரம் பழம், புளியம் பழம் முதலியன. சுட்ட தீவு கடற்கரையில் தானாக விளைந்த, வைரம் போல ஒளிரும் உப்பு.

சுட்டதீவிற்கும் குறிப்பம் புளிக்குமிடையில் உள்ள காட்டில் நிறைய புளியமரங்கள் காணப்பட்டன. தம்பையரும் குழுவினரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் புளியம்பழங்களை பிடுங்கினர். இரவு நேரங்களில் கோதை உடைத்தனர். கொட்டைகளை அகற்றினர். சிறிது உப்புத்தூளை கலந்து உருண்டையாக்கினர். ஒரு வெய்யிலில் காய வைத்து எடுத்தனர். ஊர் போகும் போது எல்லாம்  கொண்டு சென்று உறவினர்களுக்கு கொடுத்தனர். இயற்கை உப்பளத்தில் அள்ளிய உப்பையும் கொண்டு சென்றனர். தேனைக் கொண்டு சென்று, தேவை போக மிகுதியை சாவகச்சேரிக்கு கொண்டு சென்று விற்றனர்.

மயில் இறகு, மான் தோல், சிறுத்தைப் புலியின் தோல், பற்கள், நகங்கள் நல்ல விலை போயின. உறவினர்களுக்கு இறைச்சி வத்தல்களை கொண்டு சென்று கொடுத்தனர்.

மனைவியின் பிள்ளைப் பேற்றிற்காக சென்றிருந்த முத்தர் முப்பத்தொரு நாட்களின் பின்னர் மற்ற தோழருடனும், சில புதிய உறவினர்களுடனும், இரண்டு வண்டில்களில் பழைய கண்டி வீதியால் பெரிய பரந்தன் வந்து சேர்ந்தார். இப்போதைய A9 வீதியால் அல்ல. பழைய கண்டி வீதி என்பது இயக்கச்சியால் வேளர் மோட்டை, பிள்ளை மடம், வெளிறு வெட்டி, அடையன் வாய்க்கால், பாணுக்காடு, ஊரியான், முரசு மோட்டை, பழைய வட்டக்கச்சி, கல்மடு, கொக்காவில் என்று தொடர்ந்து செல்லும். முத்தர் முரசுமோட்டையிலிருந்து குறுக்கு வழியால் வந்தார்.

யாழ்ப்பாண வீதி இயக்கச்சியில் தென்திசையில் திரும்பி பின் ஆனையிறவு சந்தை ஊடாக வேளார் மோட்டை சென்று முரசுமோட்டை செல்லும் பழைய கண்டி வீதி இது. இப்போதைய A9 வீதி அல்ல.

முத்தர் வரும் போது சில மண் வெட்டிகளை வாங்கி வந்து இல்லாதவர்களுக்கு கொடுத்தார். மண் வெட்டிப் பிடியை அவரவர் காட்டில் வெட்டி போட்டுக் கொண்டனர். புதியவர்கள் தாம் தேர்ந்தெடுத்த காணியில் காடு வெட்டி எரித்தனர். மழைக்கு சில நாட்கள் இருந்த படியால் முதல் வந்தவர்கள் வேறு காணிகளையும் வெட்டிக் கொண்டனர்.

முதல் மழையும் வந்தது. எரித்த சாம்பலுடன் புதிய மண் மழை ஈரத்திற்கு வாசனை வீசியது. இதனைத்தான் மண்வாசனை என்று சொல்வார்களோ. கட்டை பிடுங்காத காணி, மாடுகளில் கலப்பை பூட்டி உழ முடியாது. எல்லோர் காணிகளிலும் ஒரு சிறிய பகுதியை விட்டு விட்டு, நெல் விதைத்து மண் வெட்டியால் கொத்தினார்கள். எல்லோருக்கும் எல்லோரும் கூட்டாகவே விதைப்பு நடந்தது. இனி களை எடுத்தலும், அருவி வெட்டலும், சூடு வைத்தலும், சூடு அடித்தலும் கூட்டாகவே நடக்கும். உழவு இயந்திரம் வந்து சேரும் வரை இந்த ஒற்றுமை உணர்வும், கூட்டாக வேலை செய்தலும் தொடர்ந்தது.

பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்தன. இனித்தான் தம்பையர் குழுவிற்கு பிரதான வேலை இருந்தது. பச்சைப் பசேலென்று பயிர்கள் காட்சியளித்த படியால் அவற்றை மேய்வதற்கு மான்கள், மரைகள், குழுவன் மாடுகள் என்பன வரும். அவற்றை விரட்டி காவல் காக்க  வேண்டும். நெற் கதிர் பால் பிடிக்கும் போது அதனைக் குடிக்க கிளிகள் வரும். கதிர் முற்றிச் சாயும் போது யானை, பன்றி, கௌதாரி, மயில், காட்டுக் கோழி என்பன வரும். அவற்றையும் விரட்ட வேண்டும். சுழற்சி முறையில் காவல் காப்பார்கள். இப்போது தான் நாய்களின் உதவி அவசியமாகும்.

அந்த முறை எல்லோருக்கும் நல்ல வேளாண்மை. நெல்மூட்டைகள் நிரம்பிய வண்டில்கள் அடிக்கடி சுட்டதீவு கடற்கரையை அடைந்தன. அங்கிருந்து தோணிகள் கச்சாய் துறைக்கு ஏற்றிச் சென்றன. தம்பையர் குழுவினர் வீடுகளில் செல்வம் கொழித்தது. கடன்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.

தம்பையரின் மகன் கணபதிப்பிள்ளை, மட்டுவிலிலிருந்த பண்டிதரின் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு கல்வி கற்க செல்வதற்கு ஒரு கிழவனாரின் வண்டி ஒழுங்கு படுத்தப்பட்டது. அந்த வண்டியில் தம்பையரின் உறவினர்களின் பிள்ளைகளும் சென்றனர். காலை செல்லும் பிள்ளைகளை மாலை வரை நின்று, அந்த ஐயா பொறுப்புடன் கூட்டி வருவார். பிள்ளைகள் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் சென்றனர். தம்பையரின் கனவு பலிக்கத் தொடங்கியது.

விதைக்காது விட்ட காணியின் பகுதியில் இருந்த மரங்களின் அடிக்கட்டைகளை மாரி மழை பெய்யப் பெய்ய மண்வெட்டி, கோடரி பயன்படுத்தி அப்புறப் படுத்தி விட்டனர். அரிவி வெட்டிய கையோடு விதைத்த பகுதியிலும் அடிக்கட்டைகள் பிடுங்கப் பட்டன. இனி கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுது கொள்ளலாம்.

தம்பையரிடம் எருத்து மாடுகள் இல்லை. மன்னாருக்கு சென்று ஒரு சோடி எருதுகள் வாங்க முடிவு செய்தார். மாடுகள் இல்லாத இன்னும் சிலரும் தாங்களும் வேண்ட விரும்பி அவருடன் இணைந்து கொண்டனர். தட்சினாமருதமடு பகுதியில் உள்ள மாட்டுத் தரகரை தம்பையர் அறிவார். அவரிடம் போய் மாடுகளை, அவர் மூலம் வாங்க எண்ணினார்கள். தரகரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அவர் மூலம் எருதுகள் வாங்க வருபவர்களை பல பட்டிகளுக்கும் கூட்டிச் செல்வார். மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு கூட்டி வருவார். நன்கு கள்ளு வாங்கி குடிக்கப் பண்ணி விட்டு, இரவுச்சாப்பாட்டையும் கொடுத்து படுக்க விடுவார். பிரயாணக்களை, மாடு பார்க்க அலைந்த களை, கள்ளினால் உண்டான வெறி மயக்கம் எல்லாம் சேர வந்தவர்கள் மெய் மறந்து தூங்குவார்கள்.

தரகர் நடு இரவு போனவர்களில் ஒருவர் இருவரின் மடியைத் தடவி காசை எடுத்துவிடுவார். ஒருவரும் அவரை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் ஏனையவர்கள் யாவரின் பணமும் அப்படியே இருக்கும். வரும் வழியில் இந்த விடயத்தை தனது தோழர்களிடம் கூறி எச்சரிக்கை பண்ணி விட்டார். இரவு படுக்கப் போகும் போது, எல்லோரும் பற்றை  மறைவில் ஒதுங்கினர். எல்லோரும் தமது கோவணத்தைக் கழற்றி பணத்தை அதனால் சுற்றி பற்றைக்குள் மறைத்து வைத்தனர். பின் போய் படுத்து நிம்மதியாக படுத்து உறங்கினர்.

தம்பையர் மது அருந்தாதவர். என்ன நித்திரை என்றாலும் சிறு அசுமாத்தத்திற்கும் எழுந்து விடுவார்.  நடுச்சாமத்தில் யாரோ அவரது இடுப்பை தடவுவதனை உணர்ந்தார். நித்திரை போல பாசாங்கு செய்தார். தமக்குள் புன்னகை புரிந்து  கொண்டார். மற்றவர்கள் அருகேயும் நடமாட்டம் தெரிந்தது. சில நிமிடங்களில் நடமாட்டம் நின்று விட்டது.

அதிகாலை காலைக் கடன்கழிக்கச் சென்ற போது அவரவர் உள்ளங்கியையும் பணத்தையும் மீட்டுக் கொண்டனர். தரகர் குளித்து திருநீறு பூசிக் கொண்டு, இவர்களை அழைத்துக் கொண்டு பட்டிகளுக்கு சென்று இவர்கள் பார்த்த வைத்த எருதுகளை விதானையார் வீட்டிற்கு ஓட்டி வரும்படி உரிமையாளரிடம் கூறினார். அது தான் முறை.

விதானையார் முன்னிலையில் இன்ன குறியுள்ள, இன்ன நிற எருதுகளை, இவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு, இன்னாருக்கு முழுச் சம்மதத்துடன் விற்கின்றேன் என்று எழுதி ஒப்பமிட்டார். தரகர் சாட்சிக்கு கையெழுத்து இட்டார். விதானையார் அங்கீகரித்து ஒப்பமிட்டு தமது பதவி முத்திரையைப் பதித்தார். இந்தக் கடிதத்துடன் வாங்கியவர்கள் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் போகலாம். இவ்வாறான கடிதம் இல்லாதவிடத்து திருட்டு எருதுகள் என்று பொலிசாரால் கைது செய்யப்படும் அபாயம் உண்டு.

தம்பையரும் தோழர்களும் தரகரிடம் தரகுக் காசைக் கொடுத்து  விட்டு எருதுகளை ஓட்டிச் சென்றனர். போகும் போது சாமத்தில் நடந்ததைக் கூறி யாவரும் சிரித்தார்கள். தம்பையருக்கு தமது பணத்தைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.

சங்கத்தானையில் தச்சு வேலை செய்பவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு கலப்பைகளும் வந்து சேர்ந்தன.

இப்போது யாவரும் தம் தம் காணிகளில் கொட்டில்களை போட்டுக் கொண்டனர். அவரவர் காணிகளை வெட்டிய போதும் அவர்களுக்கு கப்புகள், தடிகள் கிடைத்தன. காணிகள் எரித்த பின் எஞ்சிய தடிகளையும் மரங்களையும் விறகுக்காக அடுக்கி வைத்திருந்தனர். இப்போது சிலர் தமது கொட்டிலில் சமைத்தார்கள். முத்தரும் ஆறுமுகமும் இன்றும் தம்பையருடன் தான் சமைத்தார்கள். சாப்பிட்டபின் தமது கொட்டில்களை கதவிற்காக கட்டி வைத்த தட்டிகளை கட்டிவிட்டு வந்து, தாய் மனையான தியாகர் வயல் கொட்டிலிலேயே படுத்துக் கொள்வார்கள். நித்திரை வரும்வரை ஆடு புலி ஆட்டம், தாயம் முதலிய விளையாட்டுக்களை விளையாடுவார்கள். சில வேளைகளில் நேரம் பிந்தியும் விளையாடுவார்கள். தம்பையர் அவர்களை அதட்டி படுக்க வைக்க வேண்டும்.

அடுத்த கால போகத்திற்கு அவர்கள் கலப்பைகளில் எருதுகளைப் பூட்டி உழுது விதைத்தார்கள். இம்முறையும் அவர்களுக்கு பொன் போல நெல் விளைந்தது. இப்போது காணிகளின் உயரம், பள்ளம் பார்த்து வரம்புகளும் கட்டினார்கள். வாய்க்கால்களும் அமைத்து விட்டார்கள். நீலனாறு, கொல்லனாறுகளை மறித்து வாய்க்கால்களில் நீர் பாய்ச்சுவார்கள்.

நீலனாறு, கொல்லனாறுகளை மட்டும் நம்பி சிறுபோக வேளாண்மையில் ஈடுபடுவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று தம்பையர் அடிக்கடி கூறுவார். எட்டாம் வாய்க்காலை நாங்களே வெட்டி, நீர் பாய்ச்ச அனுமதி பெற்று விட்டால் பின்னர் சிறுபோகத்தை தொடர்ந்து செய்யலாம் என்று தம்பையர் விளக்கினார். எட்டாம் வாய்க்காலை வெட்டி இரணைமடு குளத்திலிருந்து வரும் நீரை பாய்ச்சுவது என்று உறுதி கொண்டார்கள்.

தொடரும்..

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More