கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிகள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும், காட்டாறுகளின் நீரும் தாராளமாக கிடைத்தது.
சிறு போகத்தின் போது சில வேளைகளில் பாய்ந்து ஓடி வரும் நீர், சில சமயம் ஊர்ந்தும் வரும். ஆனபடியால் ஒரு பகுதி வயலில் தான் சிறுபோகம் செய்ய முடிந்தது. இரணைமடு குளத்திலிருந்து வரும் நீரை பாய்ச்சுவதாயின் இது வரை வெட்டப்படாதிருந்த எட்டாம் வாய்க்காலை இவர்கள் வெட்டித் துப்பரவு செய்ய வேண்டும்.
எட்டாம் வாய்க்கால் திருத்தப்பட்டால் முழுக் காணிகளிலும் சிறு போக வேளாண்மை செய்ய முடியும். மாரி காலத்தில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடி காட்டினூடாகப் பாய்ந்து கடலில் சேரும்.
தம்பையரும் முத்தரும் சில காலம், மட்டுவிலில் உள்ள ஒரு ஆசிரியரிடம் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஒன்றாக கற்றவர்கள். இவர்களின் இளமைக் காலத்தில் தமிழ் பாடசாலைகள் தோன்றவில்லை. கற்றவர்கள் தமது வீட்டுத் திண்ணைகளில் வைத்து சில பிள்ளைகளுக்கு கற்பிப்பார்கள். அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்று அழைக்கப்பட்டன. அக்காலக் கல்வி முறையை ஓரளவு அறிய, இவர்களுக்கு முற்பட்டவரான ஆறுமுகநாவலர் கற்ற முறையை உங்களுக்கு தருகின்றேன்.
ஆறுமுக நாவலர் 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி நல்லூரில் பிறந்தார். 1879 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 05 ஆம் திகதி இவ்வுலகை விட்டு மறைந்தார். தனது 57 வருட வாழ்கையில் அவர் தமிழையும் சைவத்தையும் வளர்க்க செய்தவைகள் ஏராளம்.
நாவலர் தனது ஐந்தாம் வயதில் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் தமிழையும் நீதி நூல்களையும் கற்றார். ஒன்பது வயதில் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும், பின்னர் அவரது குருவான சேனாதிராச முதலியாரிடமும் உயர் கல்வி கற்றார். பன்னிரண்டு வயதில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று தேர்ச்சி பெற்றார்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த “வெஸ்லியன்” ஆங்கிலப்பட பாடசாலையில் ஆங்கிலம் கற்று, தனது இருபதாவது வயதில் அதே “வெஸ்லியன்” ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராக கடமைக்குச் சேர்ந்தார். அப்பாடசாலை தான் தற்போது “யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி” (Jaffna Central College) என்று அழைக்கப்படுகிறது.
தம்பையரும், முத்தரும், ஆறுமுகத்தாரும் உறவினர்கள். மீசாலையிலேயே ஒன்றாக வளர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் நல்ல நண்பர்களும் கூட. தம்பையர் பெரியபரந்தன் கிராமக் கனவு பற்றி கதைக்கும் போது, அவரது மனைவி விசாலாட்சியும் சம்பாசனையில் அவர்களுடன் பங்கு பற்றுவார். தம்பையர் விசாலாட்சியின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நேரில் போய் பார்க்காவிட்டாலும் இவர்கள் மூவரும் கதைக்கும் விடயங்களிலிருந்து பெரிய பரந்தன் பற்றிய ஒரு படம் விசாலாட்சியின் மனதில் விழுந்து விட்டது.
பெரிய பரந்தன் பூரண வசதி அடைந்து விட்டது. பலர் வண்டிலும் எருதுகளும் வாங்கி விட்டனர். மீசாலையில் புல்லும் வைக்கலும் இன்றி மெலிந்ததிருந்த பசுமாடுகளை இங்கு கொண்டு வந்து விட்டார்கள். பெரிய பரந்தனுக்கு காணி வெட்ட வராத உறவினர்களும், தங்கள் பசுக்களையும் நாம்பன்களையும் கொண்டு வந்து தங்களுக்கு பொருத்தமான உறவினர்களிடம் வளர்ப்பிற்காக ஒப்படைத்தனர். குறி சுடும் காலத்தில் இங்கு வருவார்கள். ஈன்று இருக்கும் கன்றுகளில் அரைவாசிக்கு உரிமையாளரின் குறியும் மிகுதி அரைவாசிக்கு வளர்ப்பவர்களின் குறியும் இடப்படும்.
மாடுகளிற்கு குறிசுடுதல் என்பது மிகவும் கொடுமையான செயற்பாடு. மனிதன் ஐந்தறிவு மிருகங்களை தனது என்று உரிமை கொண்டாடுவதற்காக இந்த பாவத்தை செய்தான். குறி சுடாமல் விட்டாலும் பிரச்சினையே. ஒரே மாட்டிற்கு பலர் உரிமை கொண்டாட, அது பெரிய சண்டையாக போய் விடும்.
சிலர் பூனகரியிலும் சில பசுக்களை வாங்கிக் கொண்டனர். வலிமை உள்ள இளைஞர்கள் தடம் போட்டு குழுவன் மாடுகளை பிடித்து விடுவார்கள். அவற்றிற்கு குறிசுட்டு விட்டு தமது பட்டியிலிலுள்ள வலிமையான மாடுகளுடன் பிணைத்து விடுவார்கள். சில நாட்களில் அவை நன்கு பழகிவிடும்.
அந்தக் காலத்தில் காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த மாடுகளை பிடிப்பது குற்றமல்ல. இன்னும் சொல்லப் போனால் ஆதியில் காட்டில் சுதந்திரமாக திரிந்த மாடுகள், ஆடுகள், எருமைகளை பிடித்து ஆதி மனிதன் பழக்கி வளர்த்தவற்றின் வழி வந்தவையே இன்றைய வீட்டு விலங்குகள். மாடுகளை காட்டில், ‘காலைகள்’ அமைத்து இராப்பொழுதுகளில் பாதுகாப்பின் நிமித்தம் அடைத்து வைத்தார்கள்.
பெரியபரந்தனில் மோட்டைகள், பள்ளங்கள், நீர்நிலைகள், சிறு குளங்கள் காணப்பட்டன. அதனால் சிலர் எருமைகளையும் வாங்கி வளர்த்தார்கள். எருமைகள் நீர் நிலைகளில் விரும்பி வாழும் இயல்புடையவை. இந்த எருமைகளை உழவுக்கும், பிரதானமாக சூடு அடிக்கவும் பயன் படுத்தினார்கள். சிலர் எருமைப் பாலையும் கறந்து பயன்படுத்தினார்கள். எருமைத் தயிருக்கு பனங்கட்டி கலந்து சாப்பிட்டவர் அந்த சுவையை வாழ்நாளில் மறக்க மாட்டார்.
சூடு அடிக்க மதுரையில் யானைகளைப் பயன்படுத்தியதாக வரலாறு உண்டு.” மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த மாமதுரை” என்று தொடங்கும் பாடல் பழம் தமிழ் இலக்கியத்தில் உண்டு. உழவுக்கு ஆண் எருமைகளை மட்டும் பயன் படுத்தினர். உழவு இயந்திரம் வந்து சேரும் வரை பெரிய பரந்தன் மக்கள் மாடு கட்டியே போரடித்தனர். போர் என்பது சூடு. வெட்டிய நெற்பயிரிலிருந்து நெல்லை பிரித்தெடுக்கும் வரை மழையில் நனையா வண்ணம் குவித்து வைப்பதையே சூடு என்பார்கள்.
குஞ்சுப் பரந்தனுக்கு பெண்கள், நெல் விதைக்கும் போதும், அரிவி வெட்டி சூடு அடிக்கும் போதும், பொறிக்கடவை அம்மன் பொங்கல், திருவிழாவின் போதும் மட்டும் பிள்ளைகளுடன் வந்து நின்று விட்டு போய் விடுவார்கள். செருக்கனில் இளம் குடும்பங்களிலும், பிள்ளைகள் படிக்கும் வயதை தாண்டி விட்ட குடும்பங்களிலும் தான் பெண்கள் வந்திருந்தார்கள்.
ஏனைய குடும்பங்களின் பெண்கள், பிள்ளைகளின் படிப்பிற்காக ஊரிலேயே தங்கி விடுவார்கள். அவ்வாறில்லாமல் ஆண்டு முழுவதும் பெண்களையும் பெரிய பரந்தனிலேயே தங்கி வாழச் செய்ய வேண்டும் என்பது தம்பையரினதும் நண்பர்களினதும் கனவாக இருந்தது. இதனை நன்கறிந்திருந்த விசாலாட்சி தானும் முழு விருப்பத்துடன் தயாராக இருந்தாள்.
ஏனையவை யாவும் திட்டமிட்டது போல நடந்து விட்டன. மனைவியை அழைத்து வந்து பெரிய பரந்தனில் வாழ்வது என்ற தம்பையரின் எண்ணம் நிறைவேற முன்னர் ‘காய்ச்சல்’ என்ற பெயரில் இயமன் தம்பையரின் உயிரைக் கவர்ந்து சென்று விட்டான். தம்பையருக்கு காய்ச்சல் என்றதும் ஆறுமுகம், முத்தர் மற்றும் உறவினர்கள் உடன் அவரை ஊருக்கு அழைத்துச் சென்று, பரியாரியார் வீட்டில் விட்டு, தாமும் நின்று வைத்தியம் பார்த்தனர். பரியாரியாரும் மூன்று வேளையும் மருந்து கொடுத்து கவனமாக வைத்தியம் செய்தார்.
விசாலாட்சியும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் பரியாரியார் சொன்னபடி பத்திய உணவு சமைத்து எடுத்து வந்து தம்பையருக்கு ஊட்டி விடுவாள். பரியாரியார் கைராசியானவர். எந்த காய்ச்சலையும் தனது மூலிகை வைத்தியத்தினால் குணப்படுத்தி விடுவார். ஆனால் எல்லோரையும் ஏமாற்றி விட்டு காலன் அவரது உயிரைக் கவர்ந்து சென்று விட்டான்.
எல்லோரும் திகைத்து விட்டனர். விசாலாட்சி தனது உலகமே அழிந்து விட்டதனால் பெருங்குரல் எடுத்து அழுதாள், கதறினாள். ஆறுமுகத்தாரும் முத்தரும் அழுதனர். ஏனையவர்களும் அழுதனர். யார் அழுதென்ன? மாண்டார் மீண்டு வருவாரோ?
ஆறுமுகத்தாரும் முத்தரும் முன்னின்று செத்தவீட்டு ஒழுங்குகளைச் செய்தனர். தம்பையரை வருத்தம் பார்க்க வந்தவர்களில் சிலர் சென்று, பெரிய பரந்தன் உறவுகள் யாவரினதும் பொருட்களுக்கு காவல் நிற்க, ஏனையவர்கள் யாவரும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டனர்.
விசாலாட்சி கதறி அழுதபடியே இருந்தாள். தாய் அழுவதைக் கண்ட ஏழு வயதே நிரம்பிய மகன் கணபதிப்பிள்ளை என்ன நடக்கிறது என்று தெரியாது திகைத்துப் போய் இருந்தான். தம்பையரைத் தூக்கிச் செல்ல, துயர் தாங்கமுடியாத விசாலாட்சி மயங்கி விழுந்து விட்டாள்.
தனது தலையை ஏன் மொட்டை அடிக்கிறார்கள், தகப்பனுடன் கூட்டிச்சென்று ஏன் கொள்ளிக்குடம் தூக்க வைக்கிறார்கள், ஏன் கொள்ளி வைக்கச் செய்கிறார்கள் என்பது தெரியாமலேயே கணபதி பெரியவர்கள் சொன்னபடி எல்லாம் செய்தான். தம்பையர் நெருப்புக்கு இரையாவதை பார்க்க சகிக்காத ஆறுமுகம், கணபதியைத் தூக்கி தோளில் வைத்தபடி வீடு நோக்கி நடந்தான்.
.
தொடரும்..
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/