செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

9 minutes read

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி கண்ட கனவுகளை நினைத்துப் பார்த்தாள். அவனுக்காக தன் மனதை தேற்றிக் கொண்டு செயற்படத் தீர்மானித்தாள்.

ஒருவரின் மரணத்துடன் வாழ்வு முடிவதில்லை. எட்டுச் செலவு வரை முத்தரும் ஆறுமுகமும் நின்று எல்லா ஒழுங்குகளையும் முடித்துவிட்டு பெரிய பரந்தனை நோக்கிச் சென்றனர். பெரிய பரந்தனில் எல்லோரும் தம்பையரை தமது வழிகாட்டியாகவும், தலைவனாகவும், பிரச்சனைகள் வந்த போது தோழனாகவும் நினைத்து அவர் காட்டிய வழியிலேயே நடந்தவர்கள்.

அவரது இழப்பு அவர்களை சோர்வு அடையச் செய்தது. தம்பையரின் இடத்தை நிரப்பி பழையபடி எல்லோரையும் இயங்கச் செய்ய முத்தரினதும் ஆறுமுகத்தாரினதும் கூட்டுத் தலைமை தேவைப்பட்டது. தமது கவலையை வெளிக்காட்டாமல் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

விசாலாட்சி ஒரு நிரந்தர முடிவு எடுக்கும் வரை வண்டிலையும் எருதுகளையும் பராமரிக்கும் பொறுப்பை முத்தர் எடுத்துக் கொண்டார். பசுமாட்டு மந்தையை தான் பார்த்துக் கொள்வதாக ஆறுமுகம் விசாலாட்சியிடம் கூறினார். காணியையும்  விதைத்து இலாபத்தை கொடுப்பதற்கு இருவரும் தயாராக இருந்தனர். ஆனால் அதை அவர்கள் விசாலாட்சியிடம் கூறவில்லை. அதை அவளின் தீர்மானத்திற்கு விட்டு விட்டனர்.

விசாலாட்சி, முத்தரும் ஆறுமுகத்தாரும் உதவி செய்வார்கள் என்பதை அறிவாள். ஆனால் அவர்களிடம் அளவிற்கதிகமாக கடமைப்படுவதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவளது தம்பி முறையான இருவர் அவளிடம் வந்தனர்.

தாங்களும் பெரியபரந்தனில் காணி வெட்டப் போவதாகவும், அது வரை அத்தான் தம்பையரின் தியாகர் வயலில் தங்கியிருந்து, அந்தக் காணியையும் செய்து குத்தகை தருவதாகவும் கூறினர். விசாலாட்சிக்கும் இது நல்ல ஏற்பாடாகப் பட்டது. முத்தரையும் ஆறுமுகத்தையும் கஷ்டப்படுத்தும் தேவை இல்லை. தம்பிமாருக்கு உதவியதாகவும் இருக்கும்.

ஆகவே விசாலாட்சி அதற்கு சம்மதித்தாள். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெரியபரந்தன் புறப்பட்டுச் சென்றனர். இளங்கன்று பயமறியாது. அவர்களுக்கு கூட்டாக வேலை செய்வது, முத்தரினதும் ஆறுமுகத்தாரினதும் ஆலோசனைகளைப் பெறுவது எல்லாம் தேவையற்ற விடயமாக இருந்தது.

காடு கூட தன்னோடு இணைந்தவர்களுக்கு தான் ஒத்துழைக்கும். ஏனையவர்களைப் புறக்கணிக்கும். தம்பையர் குழுவினர் தமது தேவைக்கு மட்டுமே மரங்களை வெட்டினர். உண்பதற்காக மட்டுமே விலங்குகளைக் கொன்றனர்.

காலபோக வேளாண்மை வெற்றியடைய வேண்டும் என்றால் மழை நீரின் முகாமைத்துவம் நன்கு  தெரிந்திருக்க வேண்டும். இளைஞர்கள் காணி விதைப்பதற்கும் காடு வெட்டுவதற்கும் சம்பளம் பேசி, தமது நண்பர்களான மூன்று பேரை அழைத்துச் சென்றனர். அந்த நண்பர்களும் கமச் செய்கையில் அனுபவமற்றவர்கள். இவர்கள் வரும் வரை முத்தரும் ஆறுமுகமும்  தியாகர் வயலிலேயே சமைத்து, உண்டு, இரவு படுத்தும் உறங்கினர். தம்பையரின் வீடு கேட்பாரற்று போய் விடக்கூடாது என்று கருதியிருந்தனர்.

இளைஞர்கள் வந்த அன்றே அவர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு, தமது வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆம், இப்போது வீடு என்று சொல்லக் கூடியதாக எல்லோர் காணிகளிலும் சமையலுக்கு ஒரு சிறிய கொட்டில், மண்சுவர் வைத்து மேலே தட்டி கட்டிய பெரிய வீடு, வருபவர்கள் படுத்து எழும்ப ஒரு பெரிய தலைவாசல் என்பன வந்து விட்டன.

தம்பையர் உயிருடன் இருந்த பொழுதே, பிள்ளையார் மழை வெய்யிலில் பாதிக்கப்படாது இருக்க ஒரு கொட்டிலும், காளிக்கு மூன்று பிரிவாக பிரிக்கப் பட்ட ஒரு மண்டபமும் அமைத்து விட்டனர். பனை ஓலைக் கூரை தான். ஒரு வருட மழையை பனை ஓலைகள் தாங்கின. பின்னர் பனை ஓலையின் மேல் வைக்கலை படினமாக அடுக்கி வேய்ந்து விடுவர். அது மேலும் இரண்டு மழைகளைத் தாங்கும்.

காளியின் முதலாவது சிறிய அடைப்பில் பிள்ளையாருக்காக ஒரு முக்கோண வடிவக் கல் வைக்கப் பட்டது. இறுதியாக உள்ள சிறிய அடைப்பில் காளிதேவியின் கையிலுள்ள சூலத்தைக் குறிக்க ஒரு பெரிய சூலம் நடப்பட்டது. நடுவிலுள்ள பெரிய இடைவெளியில் கிராம மக்கள் வணங்கிய தெய்வங்கள் பலவற்றைக் குறிக்க கற்களும் சிறிய சூலங்களும் நடப்பட்டன. முத்தர் பிரதான பூசாரி. ஆறுமுகம் உதவிப் பூசாரி.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிள்ளையாருக்கு பொங்கல் வைக்கப்படும். காளி அம்மனுக்கு விளக்கு வைக்கப்படும். சுட்டிகளில் திரிகள் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபங்கள் ஏற்றப்படும். ஒவ்வொரு தெய்வத்தின் முன்பும்  சுட்டிகள் வைத்து கற்புரமும் கொழுத்தப் படும். அப்போது முத்தர் கலை வந்து ஆடுவார். பெரிய பரந்தனிலுள்ள அனைவரும் கோவிலுக்கு வருவார்கள். செருக்கனிலிருந்தும் சிலர் வருவார்கள். அவர்களில் சிலர் நன்கு உடுக்கு (மேளம் போன்ற ஒரு சிறிய தோல் கருவி) அடிப்பார்கள். உடுக்கு அடிக்க அடிக்க முத்தர் வேகம் கொண்டு ஆடுவார்.

காளி கோவில் கொல்லன் ஆற்றங்கரையில் இருந்தது. காளி கோவிலின் அருகே கிழக்குப் பக்கத்தில் ஒரு மேடான பகுதி இருந்தது. தம்பையரின் ஆலோசனைப்படி வண்டில்களில் மண் ஏற்றிப் பறித்து  ஒரு மேடை போல அமைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் இருக்கும் பகுதி “கூத்து வெட்டை” என்று அழைக்கப்பட்டது.

பெரிய பரந்தனில் அரிவி வெட்டி முடிய, சிறு போகத்திற்கு இடையில் வரும் இடை நாட்களில் பளையிலிருந்து ஒரு அண்ணாவியார் வந்து தங்கியிருந்து கூத்து பழக்குவார். பெரிய பரந்தன், செருக்கன் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அண்ணாவியாரிடம் கூத்து பழகுவார்கள். அண்ணாவியார் சம்பளமாக நெல்லை வாங்கி செல்லுவார்.

விசாலாட்சியின் தம்பிமார் தமக்கென்று காணியைத் தெரிந்தெடுத்து வெட்டினர். அவர்களால் அக்கினி பகவானின் உதவியைப் பெற முடியவில்லை. தம்பையர் குழுவினரைப் போல அரைவாசியை வெட்டி மிகுதிப் பற்றைகள் மேல்  பரவி எரிக்க முடியவில்லை. அவர்கள் வெட்டிக் கொண்டிருக்கும் காணியின் மூன்று பக்கமும் முன்னர் வந்தவர்களின் காணிகள் இருந்தன. அவர்கள் சூடு அடித்த பின்னர் வைக்கலை சூடு போல குவித்து வைத்திருந்தனர்.

புற்கள் இல்லாத பொழுது மாடுகளுக்கு வைக்கல் தான் உணவு. ஒவ்வொரு சூடும் சிறு மலைகள் போல காட்சியளிக்கும். அது மட்டும் அல்ல, அடுத்த போகத்திற்குரிய விதை நெல்லையும் சூடு அடிக்காது சிறு குன்றுகள் போல மழை போகாத வண்ணம் சூடாக  வைத்திருப்பார்கள். இந்த சூடுகள் அடியில் பெரிய வட்ட வடிவமாகவும், மேலே செல்லச் செல்ல குறுகிச் சென்று முடி கூரானதாகவும் இருக்கும்.

சூடு வைப்பதும் ஒரு கலை தான். நீர் உள்ளே செல்லாதவாறு இந்த சூடுகள் அமைக்கப்பட வேண்டும். உள்ளே நீர் சென்றால் விதைநெல் மடிநெல் ஆகி விடும். மடிநெல் கறுத்து இருக்கும். சாப்பிடவும் முடியாது. விதைக்கவும் முடியாது. நெல்லை வெட்டிய உடன் விதைக்கக் கூடாது. அதற்கு ஒரு உறங்கு காலம் உண்டு. உறங்கு காலம் கழிந்த பின்னரே எந்த தானியத்தையும் விதைக்க வேண்டும்.

வெளியே மழை பெய்தாலும் சூட்டின் உள்ளே எப்போதும் வெப்பம் சீராக இருக்கும். முதலே சூடு அடித்து சாக்கில் போட்டு வைக்கும் நெல்லின் வெப்ப நிலை மாறுபடும். எனவே முளைதிறன் குறைந்து விடும். சூடு வைத்து தேவை ஏற்படும் போது அடித்து எடுத்து விதைத்த நெல்மணிகள் யாவும் ஒத்தபடி முளைத்து விடும்.

இளைஞர்களுக்கு பிரச்சினை இது தான். அரைவாசி பற்றைகளை, வெட்டாத பற்றைகள் மேல் போட்டு காய்ந்த பின்னர் எரித்தால் அவை விளாசி எரிய, நெருப்புப் பொறி அயலவர்களின் சூடுகளின் மேல் விழுந்தால் அவையும் பற்றி எரிந்து விடும். அதனால் சிறு சிறு குவியலாக குவித்து, அவதானமாக கொஞ்சம் கொஞ்சமாகவே எரிக்க முடிந்தது. ஆகவே காணி வெட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

மழையும் வந்தது. பள்ளப் பக்கமாக முதலில் விதைக்க வேண்டும், பிறகு மேடான காணியை விதைக்கலாம் என்று முத்தர் முதலியோர்  சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒரு பக்கத்தில் தொடங்கி ஒழுங்காக விதைத்து வந்தனர். அவ்வாறு விதைத்து வந்து, பள்ளக்காணியை அடைந்த போது மழை நீரால் பள்ளங்கள் நிரம்பி விட்டன. இப்போது மழை நீரை வாய்க்கால் வெட்டி கடத்தும் வேலை மேலதிகமாக வந்து சேர்ந்தது. முத்தர் சொன்னபோது பள்ளக் காணியை விதைத்திருந்தால் அங்கு பயிர்கள் முளைத்து நீர் மட்டம் உயர உயர நெற்பயிர்களும் உயர்ந்து வளர்ந்திருக்கும்.

“வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயர்வான்” என்று ஔவையார் சொன்னதையும் இளைஞர்கள் ஞாபகம் வைத்திருக்கவில்லை.

மழை பெய்யப் பெய்ய நீரை கடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பயிர்கள் முளைத்து நீரின் மேல் நீட்டிக் கொண்டிருக்கும் வரை நீரைக் கடத்த வேண்டும். இனி இரவு ஆரம்பிக்கும் பொழுதும் அதி காலையிலும் ஆமைகள் பயிரை வெட்டும். அப்போது மின் விளக்கு (Torch Light) இல்லை. இலாந்தர் வெளிச்சத்தில் ஆமைகளைக் காண முடியாது. அனுபவம் மிக்கவர்கள் ஊரில் இருந்து வரும் போது தென்னம் பாளைகளை கட்டி எடுத்து வருவார்கள்.

ஓய்வாக இருக்கும் போது, சிறிய கீலம் கீலமாக நுனியிலிருந்து அடி வரை வெட்டுவார்கள். பின்னர் நுனியிலிருந்து ஒவ்வொரு அங்குல இடைவெளியில் இறுக்கி கட்டி விடுவார்கள். இவை நன்கு காய்ந்த பின்னர் நுனியில் நெருப்பு வைத்தால் பிரகாசமாக எரியும். இதனைச் சூழ் (torch) என்று கூறுவார்கள்.

கடலில் மீன் பிடிக்கவும் இத்தகைய சூழ்களைக் கொண்டு செல்வார்கள். சூழ் வெளிச்சத்தில் ஆமைகளை இனங்கண்டு பிடிக்கலாம். பயிரை வெட்ட இரண்டு விதமான ஆமைகள் வரும். ஒரு ஆமை பிடித்ததும் எதிரியிடமிருந்து தப்ப ஒரு வித கெட்ட நாற்றமுள்ள வாயுவை வெளிவிடும். அது சிராய் ஆமை. உடனே வெட்டி வரம்பில் தாட்டு விடுவார்கள். மற்ற ஆமை, பாலாமை எனப்படும். சிலர் அதை உண்பார்கள். ஆனால் பெரிய பரந்தன் மக்கள் சாப்பிடுவதில்லை. அதனையும் வெட்டி தாட்டு விடுவார்கள்.

தொடர்ந்து பல விலங்குகள் பயிர்களை அழிக்கவும் வரும். நெற் கதிர்களைச் சாப்பிடவும் வரும். பெரிய பரந்தன் மக்கள் குழுக்களாக பிரிந்து இரவுக்கு காவல் காப்பார்கள். காட்டோரம் உள்ள எல்லைக் காணிகளின் வேலியின்  வெளியே பட்டமரக் குற்றிகளைப்  போட்டு நெருப்பு வைப்பார்கள். விலங்குகள் வருகின்ற போது, சத்தமிட்டும், தாரை தப்பட்டை அடித்தும் அவற்றை விரட்டுவார்கள்.

எல்லோருடனும் இணைந்து விலங்குகளை விரட்ட இளைஞர்கள் பழக வேண்டும். அவ்வாறு இல்லாது இளைஞர்கள் நித்திரை கொண்ட ஓரிரவு பன்றிகள் வந்து அவர்களின் பயிரின் ஒரு பகுதியை உழக்கி அழித்து விட்டன. பன்றிகள் மக்கள்  சத்தமிடாத  ஆற்றங்கரையால் வந்துவிட்டன. எல்லோருடனும் சேர்ந்து காவல் காத்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம். யானைகளும் பன்றிகளும் எப்போதும் கூட்டமாகவே வரும். கூட்டமாக வரும் அவை உண்பதை விட உழக்கி அழிப்பது அதிகம்.

“சிறுபிள்ளை வேளாண்மை விளையும் வீடு வந்து சேராது” என்ற பழமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் பெரும் நட்டம் அடைந்தனர். அவர்களால் விசாலாட்சிக்கும் குத்தகை நெல் கொடுக்க முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு போகத்திலும் ஒவ்வொரு விதமான அழிவு. விசாலாட்சியிடம் தம்பையர் கொண்டு வந்து வைத்திருந்த நெல் மணிகளும் முடிந்து விட்டன. விசாலாட்சி தம்பையர் இருந்த போதும், அவர் பெரிய பரந்தனுக்கு போய்விட கேணியிலிருந்து இரு கைகளிலும் பட்டைகளில் நீர் சுமந்து வந்து மரவள்ளி, கத்தரி, பயிற்றை, பாகல் முதலிய பயிர்களைச் செய்கை பண்ணுவாள்.  ஆழமான கேணியிலிருந்து இரண்டு கைகளிலும், பனை ஓலையினால் ஆன பட்டைகளில் நீர் நிரப்பி அவள் சுமந்து வரும் அழகே தனி தான். இப்போது தோட்டத்தினால் வரும் வருமானமே அவளுக்கு பிரதானமான வருமானமாகிவிட்டது.

அவ்வப்போது தேங்காய், மாம்பழம், பலாப்பழம் விற்றும் சிறு வருமானம் வந்தது. அவற்றை வைத்துக் கொண்டு கணபதியை மட்டுவில் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். முத்தரும் ஆறுமுகமும் தம்பிமாருக்கு வேளாண்மை சரிவராது என்று தெரிந்து விசாலாட்சியை நினைத்து கவலை கொண்டனர். ஆனால் தாங்கள் ஏதாவது சொல்லப் போக குடும்பத்திற்குள் பிரச்சினை வந்துவிடும் என்று பயந்தனர். மற்ற நண்பர்கள், தம்பிமாரின் பொறுப்பற்ற தன்மையை விசாலாட்சியிடம் வந்து கூறி விட்டனர். தம்பையர் காலத்தில் பொன் விளைந்த பூமியை அவர்கள் சீரழிப்பதாக முறையிட்டனர்.

விசாலாட்சி, ஆறுமுகத்தாரையும் முத்தரையும் அழைத்து விசாரித்தாள். அவர்களும் ஏனையவர்கள் சொல்வது உண்மை தான் என்று கூறினர். இப்போது விசாலாட்சி தம்பிமாரை எவ்வாறு காணியிலிருந்து அகற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினாள்.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More