சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அமைப்பு ஆனது தசாப்தங்களுக்கான (10 ஆண்டுகளுக்கான) ஆடவர் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்த பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய வீரர்கள் தவிர்த்து இந்த அணியில், உலக அளவிலான கிரிக்கெட் அணிகளின் வீரர்களான கிறிஸ் கெய்ல், ஏபி டீ வில்லியர்ஸ், ஆரோன் பின்ச் மற்றும் லசித் மலிங்கா உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
ரோகித் மற்றும் கெய்ல் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 3வது இடத்தில் பின்ச் மற்றும் 4வது இடத்தில் விராட் கோலியும், 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே வில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். விக்கெட் கீப்பராகவும் தோனி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று 3 நிலைகளிலான ஆட்டத்தில் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.
எனினும், ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து 3 நிலைகளிலான போட்டிகள் எதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ஐ.சி.சி.யின் 10 ஆண்டுகளுக்கான கனவு அணியின் வீரர்கள் அடங்கிய பட்டியலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.சி.சி.க்கு, பாகிஸ்தானும் ஓர் உறுப்பினர் என்பது மறந்து விட்டது என்று நான் நினைக்கிறேன். ஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தானின் நடப்பு கேப்டன் பாபர் அசாம் உள்ளார்.
ஆனால், பாகிஸ்தான் அணியில் ஒருவரை கூட அவர்கள் எடுத்து கொள்ளவில்லை. உங்களது தசாப்தத்திற்கான சர்வதேச இருபது ஓவர் அணி எங்களுக்கு தேவையில்லை என ஐ.சி.சி.யை நேரடியாக சாடியுள்ளார். ஐ.சி.சி., பணத்திற்காக கிரிக்கெட் விளையாட்டை அழித்து வருகிறது என சோயப் அக்தர் வெளிப்படையாகவே காட்டமுடன் பேசியுள்ளார்.
நீங்கள் உலக கிரிக்கெட் அணி பற்றி அறிவிக்கவில்லை. நீங்கள் அறிவித்திருப்பது இந்தியன் பிரீமியர் லீக் லெவன் அணி என கூறியுள்ள அக்தர், பணம், விளம்பரதாரர்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ஆகியவற்றை பற்றி மட்டுமே ஐ.சி.சி. நினைக்கிறது.
அவர்கள் ஒரு நாள் போட்டியில், 2 புதிய பந்துகளையும் மற்றும் 3 பவர்பிளேக்களையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்சன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் 5 திறமையான வீரர்கள், வாசிம் அக்ரம் மற்றும் வாக்கர் யூனிஸ் எல்லாம் என்ன ஆனார்கள்?
உலகின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் எங்கே இருக்கின்றனர்? அவர்கள் எல்லாம் அணியில் இல்லை. ஏனெனில், கிரிக்கெட் விளையாட்டை ஐ.சி.சி. வர்த்தக ரீதியாக மாற்றி வைத்திருக்கிறது. இன்னும் வருவாய் வேண்டும் என்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என கூறியுள்ளார்.