செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சாமிநாத ஐயருக்குப் பின்னர் ஓர் ‘ஐயர்’ | கலாநிதி சுதர்சன்

சாமிநாத ஐயருக்குப் பின்னர் ஓர் ‘ஐயர்’ | கலாநிதி சுதர்சன்

24 minutes read

நூல்களால் கட்டும் தேசம்  

கலாநிதி செல்லத்துரை சுதர்சன்

(தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) 

“தன் தந்தை கொல்லப்பட்டதைத் தனயன் மறந்துபோவான். ஆனால், தன் பூட்டனின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதை, அவன் ஒருபோதும் மறந்துபோகமாட்டான்.” 

    – மாக்கியவல்லி.

பண்பாட்டு விடுதலைக்கான தேசியப் போராட்டங்கள் உலகில் நடைபெறும்போதெல்லாம் பண்பாட்டழிப்பே ஆதிக்கவாதிகளின் ஒரேகுறியாக இருந்துவந்துள்ளது. அழிக்கப்பட்டதும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதுமான பண்பாட்டை மீள நிலைநிறுத்துவதற்காக உலகெங்கிலும் நிகழும் போராட்டங்கள் இருவகை. ஒன்று, ஆயுதத்தால் நிகழ்வது. மற்றையது, எழுத்தினால் நிகழ்வது. முன்னையதை ஆயுத அரசியல் என்றும் பின்னையதை எழுத்து அரசியல் என்றும் குறிக்கலாம். பண்பாட்டு அழிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஆயுத அரசியலைவிடவும் எழுத்து அரசியலுக்கு அதிக முதன்மை உள்ளது. எழுத்து என்பது அர்த்தம் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு இயக்கியாக, வலுவுள்ள பேசும் சாதனமாக, சுடுகுழலைவிடவும் வன்மையான ஆயுதமாக எல்லாம் விடுதலைக்காகப் போராடும் நிலத்தில் முக்கியமான பாத்திரமேற்றலை நிகழ்த்துகிறது. காலனித்துவம், பேரரசுவாதம் என்பவற்றுக்கெதிரான வரலாற்றுரீதியான பண்பாட்டுப் போராட்டங்கள் வெற்றிபெற்றனவோ, இல்லையோ அப்போராட்டங்களில் இடம்பெற்ற எழுத்து அரசியலுக்கு, அப்போராட்டங்களை இயக்கின என்பதிலும் பதிவாக்கின என்பதிலும் முக்கிய பங்குண்டு.

எழுத்து அரசியல் என்பது வெறுமனே மலினமானதும் பொதுவானதுமான கட்சி அரசியல் பற்றியதல்ல. அது ஓர் இனத்தின் அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் முதன்மைப்படுத்திய, கவிதையிலிருந்து விமர்சனம்வரையும், சடங்கிலிருந்து நவீன ஆற்றுகைக்கலைகள்வரையும், துண்டுப்பிரசுரத்திலிருந்து சுவரொட்டிவரையும், இனவரலாற்றிலிருந்து இலக்கிய வரலாறுவரையும், பதிப்பிலிருந்து விநியோகம்வரையும் நீண்டு விரிந்த அர்த்தப்பரப்பைக் கொண்டது. முக்கியமாக, காலந்தோறும் வரலாறு சுமந்த பண்பாட்டு ஆவணங்களைக்கொண்டு உரையாடுவதாக அது அமைந்திருக்கும். ஓர் இனத்தின் உரிமை, அழிவுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும்போது, அந்த இனம் தனது பண்பாட்டு முதுசொத்திலிருந்து தனக்கான அரசியலை வடிவமைத்துக்கொள்ளும்.

பண்பாட்டு அழிப்புக்கு எதிரான கலாசார எதிர்ப்புமுகமாக மட்டுமன்றி, புவியியல்சார் எல்லைகளால் வரையறுத்துக்கொள்ளப்படும் தேசத்துக்கு அப்பால் அரசியல், சமூக, பண்பாட்டுக் கருத்துநிலைகள் நிர்ணயிக்கும் தேசத்தை, அறிவுநிலையில் கட்டியெழுப்புவதும் நிலைநிறுத்துவதும் எழுத்து அரசியலே. ஆயுதப் போராட்ட அரசியல் வரலாற்றினை அதிகம் பேசியும் எழுதியும் விவாதித்தும்வரும் சூழலில், அதைவிடவும் முக்கியமான, ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையான, ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் வலிமையோடு விளங்குவதும் இயங்குவதுமான எழுத்துவழி நிகழ்ந்த பண்பாட்டழிப்புக்கு எதிரான போராட்டங்களைப் பேசுவதும் எழுதுவதும் விவாதிப்பதும் அரிது என்றே கூறலாம்.

உலகின் பொதுப்புத்தியைக் கேள்விக்குள்ளாக்கி, தேசத்தின் கருத்தியல் உறுதிபாட்டைக் கண்டம் தாண்டி அகலித்து உரைக்கும் ஆற்றல் கொண்ட எழுத்து அரசியலை நிகழ்த்தியவர்கள், போராடும் எல்லாச் சமூகங்களிலும் கவனிப்புக்கு உரியவர்கள். கவிஞர்கள், கதாசிரியர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் முதலிய அனைவருமே எழுத்து அரசியல்காரர்தாம் எனினும், இவர்களின் கருத்தியல் உலக இயக்கியாக, இவர்களைவிடவும் முக்கியமானவர்களாக இலக்கியச் செயற்பாட்டுக்காரரே விளங்குகின்றனர். பண்பாட்டு எதிரிகளை எதிர்ப்பதுதான் சிறந்த வழி என்பதை இலக்கியச் செயற்பாட்டுக்காரர் தெரிவு செய்கின்றனர். அதற்கான எழுத்து அரசியலை அவர்கள் இடைவிடாது முன்னெடுக்கின்றனர். இவ்வாறு, ஈழத்துத் தமிழ்ச் சூழலில், தொடர்ச்சியாக எழுத்தரசியலை முன்னெடுத்த, பத்மநாப ஐயரின் 75ஆவது அகவை நிறைவைக் குறித்து வெளியான, அவர் பற்றிய கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய அரிய நூலாக, விம்பம் மற்றும் காலச்சுவடு இணைவெளியீடாக வெளிவந்திருப்பதுதான் “நூலை ஆராதித்தல்”. கே.கிருஷ்ணராஜா, மு.நித்தியானந்தன் ஆகியோர் இதைச் செம்மையுறப் பதிப்பித்துள்ளார்கள். உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள், அறிஞர்கள், பதிப்பாளர்கள் பலரதும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஐயரது நேர்காணல் ஒன்றும் இயல் விருது ஏற்புரையும் ஐயர் வெளியிட்ட நூல்களில் உள்ள நூல்மதிப்புரைகளும் இதில் இடம்பெற்றுள்ளதுடன் ஆவணப்படங்கள், சாதனைகள், ஒளிப்படங்கள் முதலிய பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. நூலின் வடிவமைப்பு பிரமிக்கவைக்கிறது. கே.கே. ராஜா இந்த நூலை தனக்கேயுரித்தான எண்ணக்கருவுடன் சிறப்புற வடிவமைத்துள்ளார். இந்த நூலை வாசித்து முடிந்தவுடன,; மனதில் தோன்றிய எண்ணங்களைப் பதிவுசெய்ய எண்ணியதன் நோக்கமே இக் கட்டுரை.   

பத்மநாப ஐயர், 1941 ஆவணி 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணையில் இரத்தின ஐயர், யோகாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலை, வைத்தீஸ்வரா வித்தியாலயம், பண்டாரவளை புனித சூசையப்பர் கல்லூரி  ஆகியவற்றில் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகப் பௌதீக விஞ்ஞானப் பட்டதாரி. சிறிதுகாலம் மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தபின் காணி ஆணையாளர் திணைக்களத்தில் பிரதேச அலுவலராகப் (Divisional Officer) பணிபுரிந்தவர். இதற்கு அப்பால் இவரது இலக்கிய ஈடுபாடு, பாடசாலைக் காலத்தில் இவருக்குக் கிடைத்த இலக்கிய நண்பர்களாலும் தீவிர வாசிப்பினாலும் முளைகொண்டது என்பர். பாடசாலைக் காலத்தின் பின்னரும் இவரது விரிந்து பரந்த இலக்கிய நண்பர்கூட்டம், இலக்கியச் செயற்பாடுகள் முதலியனவும் இவரது இலக்கியப் பயணத்தை தமிழியல்சார் பணிநோக்கித் திசைதிருப்பின. எழுத்தாளர்களுடனான தொடர்பு, நூல்கள் மற்றும் சிற்றிதழ் வாசிப்பு முதலியவற்றில் ஆர்வத்துடன் செயற்பட்டுவந்த ஐயர், கணையாழி முதலிய இதழ்களுக்கு விமர்சனபூர்வமான வாசகர் கடிதங்கள் சிலவற்றை எழுதி அதற்காகப் பரிசில்களும் பாராட்டும் பெற்றுக்கொண்டவர். அறிவொளி எனும் விஞ்ஞானச் சஞ்சிகையில (1967); ‘இராமன் விளைவு’ எனும் கட்டுரை ஒன்றும், வீரகேசரியின் நவீன விஞ்ஞானி எனும் பெயரில் வெளிவந்த பத்திரிகையில் விஞ்ஞானிகள் தொடர்பான சில கட்டுரைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மேகம் இதழில் (ஜனவரி – பெப்ரவரி 1983) ‘இரந்து நிற்கும் இரவல் தாய்நாடு’ எனும் தலைப்பில் தரம்மிக்க விமர்சனக் கட்டுரை ஒன்றும் எழுதியவர். 

1965ஆம் ஆண்டு தமிழகத்தில் லஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடாத்திய வாசகர் வட்டத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டதுடன் ஈழத்து எழுத்தாளர் பலரையும் அதில் இணையச்செய்தார். இந்திய மொழிச் சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்பாக ‘மறுகதைகள்’ என்ற தொகுதியை வாசகர் வட்டம் வெளியிட்டபோது “ஈழத்துப் படைப்புக்கள் சிலவற்றைத் தொகுத்து அவ்வாறானதோர் தொகுப்பினைக் கொண்டுவந்தால் என்ன?” என்று லஷ்மி கிருஷ்ணமூர்த்திக்கு ஐயர் கடிதம் எழுதினார். 1968 மார்கழியில் ‘அக்கரை இலக்கியம்’ என்ற தொகுதியை வாசகர் வட்டம் வெளியிட்டது. 470 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் அரைவாசிக்கும் மேற்பட்ட பக்கங்களை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் பிடித்துக்கொண்டன. இதில் வெளிவந்த கதைகள் தொடர்பான தெரிவில் செ.யோகநாதனுடன் இணைந்து ஐயர் செயற்பட்டார். இதற்கு முக்கிய காரணராய் அமைந்தவர் ஐயர் என்பதை, “இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தொகுப்பதில் பேரார்வம்காட்டி பல கதைகள், கட்டுரைகளின் பிரதிகளை அனுப்பிவைத்த ஸ்ரீ. ஆர். பத்மநாபனுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக” எனும் அக்கரை இலக்கியம் தொகுப்பின் நூல் பதிப்புரைப் பகுதி காட்டிநிற்கிறது. பின்னர் ‘ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் குரலை உலகறியச் செய்யவேண்டும் எனும் நோக்கில்’ வெளிவந்த ‘திசை’ வாரப் பத்திரிகையுடன் இணைந்து செயற்பட்டார். அதன் பின்னர், ‘அலை’ சிற்றிதழ்சார்ந்து இயங்கி அதன் பரவலாக்கத்துக்கும் சிறப்பான வெளிவருகைக்கும் பணியாற்றினார். 

இவ்வாறு இயங்கிய ஒருவர், மாபெரும் இலக்கியச் செயற்பாட்டுக்காரராக மேலெழுவதற்கான பின்புலம்பற்றிய தேடல் மிகவும் சுவாரசியமானது. அது, நூல் மற்றும் நூலகப் பண்பாட்டுடனும் வாசிப்பு மற்றும் வாசிப்புப் பண்பாட்டுடனும் இணைவுபெற்றது. இவ் இரண்டு விடயங்களையும் சற்று நோக்குவது பயனுடையது.

ஈழத்து இனப்பிரச்சினை வரலாற்றில் தனிச் சிங்களச் சட்டம், பௌத்தம் அரச மதமாக்கப்படல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், அரச பயங்கரவாதம் முதலியனவும் அவற்றுடன் தொடர்பான பெருவிளைவுகளும் பேசப்படுகின்றன எனினும், யாழ் பொதுநூலக எரிப்பே, உலக அரங்கில் அறிவுசார் பண்பாட்டுக் கொலையாக வருணிக்கப்பட்டது. 1982இல் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் நுழைந்தபோது, அவர்களின் முதல் இலக்காகப் பலஸ்தீன மக்களது பண்பாடு மற்றும் வரலாற்றினைக் கொண்ட PLO ஆய்வு மையம், சுவடிகள் திணைக்களம் முதலியவை அமைந்தமையும், 1985இல் அமெரிக்கப் பொலிசார், Puerto ricoஇல் வங்கிக் கொள்ளைகளுக்கும் சர்வதேசச் சட்டங்களை மீறியமைக்கும் தண்டனைகள் வழங்கியது மட்டுமன்றி அவர்களுடைய சஞ்சிகையான Pensamiento Critico காரியாலயத்துள் நுழைந்து அச்சஞ்சிகையின் மூலங்களையும் உற்பத்திக் கருவிகளையும் கைப்பற்றிக் கொண்டமையுமான பல நிகழ்வுகளை வரலாறு முழுவதிலும் படிக்க முடிகிறது. இலங்கைப் பேரினவாத அரசு மேற்கொண்ட யாழ் பொதுநூலக எரிப்பும் இதுபோன்ற ஒன்றுதான். இச் செயல் அன்றைய அரசின் நாசகாரச் செயலாக (Vandalism) அமைந்தது. தொண்ணூற்று ஏழாயிரம் அரிய நூல்கள் மற்றும் பெருந்தொகையான வரலாற்று ஆவணங்களுடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே அரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் 01.06.1981இல் பேரினவாதிகளால் எரிக்கப்பட்டது. ஈழத் தமிழரின் அறிவுக் கேந்திரநிலையமான அந்த நூலகம் மட்டுமன்றி வடபகுதியின் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளின் நூலகங்களும், புத்தகக் கடைகளும்கூட இவ்வாறு எரியூட்டப்பட்டன. ‘நூலக எரிப்பு’ என்ற அரசியல் அபாய நிகழ்வைவிடவும் அதை எரிப்பதற்குப் பின்புலமாயமைந்த,  எரித்தவர்களின் உளவியல் அவதானிக்கப்படவேண்டிய ஒன்று.

பாரம்பரிய மரபுக்கல்வியிலும் மிஷெனறிகள் வளர்த்த மேலைக்கல்வி மரபிலும் யாழ்ப்பாணம் செழுமைபெற்றதற்கான அடையாளமே யாழ் நூலகம். யாழ்ப்பாணத்தவரின் கல்வியறிவுபற்றி, இலங்கைத்தீவில் உருவாகியிருந்த மேம்பட்ட ஒரு படிமமே, அந்த நூலகம்பற்றிய பிரேமைகளைப் பேரினவாதிகளிடம் உருவாக்கி, அதை அழிக்கும்நிலைவரை கொண்டுசென்றது.

எரிப்புப் பற்றிய வெளிப்படையான அரசியல் நிகழ்வுக்குப் பின்னாலான, எரித்தவரின் மன அமைப்பில் உள்ள ஆழ்ந்த உளவியல் இது. நூலகத்தை எரித்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் எனும் உளவியல் திருப்தி எரித்தவரிடம் இருந்தது எனினும், அதற்குப் பின்னரேயே, நூலை ஆராதித்து வழிபடுகின்ற தமிழ்ச் சமூகத்தில், நூல் மற்றும் நூலகம்பற்றிய உணர்கை மிகவும் அதிகரித்ததும் இன்றுவரையான புலமைசார் அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளானதும் ஆழநோக்கவேண்டிய அம்சங்கள். எரித்தவரின் அறிவு, பண்பாடு, மனப்பாங்கு பற்றிய கேள்விகளை உருவாக்கி, அவர்களுக்கு மிருகநிலைப் படிமத்தைப் பொதுஅரங்கில் உருவாக்கியதும்கூட அவதானிக்கத் தக்கது.

அந்த அழிப்பு (Destruction) ஒரு கட்டுமானத்துக்கு (Construction) வழிவகுத்தது. ஈழத் தமிழரிடம் நூல் மற்றும் நூலகம்பற்றிய பண்பாட்டுச் சிரத்தையை, பெருவளமிக்க பண்பாட்டு வலைப்பின்னலாகக் கட்டியெழுப்பியது. இந்த இடத்தில்தான் பண்பாட்டு மூலதனமாக, நூல் மற்றும் நூலகங்கள் மேலெழுந்தன. ஒருவிதத்தில் ஓர் இனக்குழுவின் புலமைசார் பண்பாட்டுக் களரியாக, அந்த இனத்தின் இன விடுதலைப் போராட்டத்தில், நூல் மற்றும் நூலகங்கள் ‘தற்கிழமை’ ஆகியன. அந்த ‘எரிப்பு நிகழ்வு’ வரலாற்றின் மனத்தில் இன்னும் இன்னும் பூதாகாரமாகிக் கடத்தப்படுவதாயும், அதுவே ஒரு அரசியல் கட்டுமானத்திற்கு உதவுவதாயும் அமைந்துவிட்டது. நூல்தொடர்பான செயற்பாட்டில் ஆர்வமுடையோருக்கு, இந்த நிகழ்வு, அரசியல் பண்பாட்டுத் தளத்தில், தீவிர இயங்குநிலைக்கான வெளியைத் திறந்தது. ஐயர், மாபெரும் இலக்கியச் செயற்பாட்டுக்காரராக மேலெழுவதற்கான காரணங்களில் இது முக்கியமான அடிப்படை.

இன்னொரு முக்கியமான அடிப்படை, வாசிப்பு மற்றும் வாசிப்புப் பண்பாடு சார்ந்தது. யுhழ் நூலகம் எரிவுற்ற காலத்தில், அரசுசார்புச் சிந்தனை நூல்களே வாசிப்புத்தளத்தில்  கோலோச்சின. 1980களில் ஈழத்தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணப் புத்திஜீவிகளினதும் கல்வியாளர்களதும் வாசிப்பு மனத்தினை அரச இயந்திரமே இயக்கக்கூடியதாக அமைவு பெற்றிருந்தது எனில் அது மிகையாகாது. ‘இலங்கைத் தேசியம்’ என்ற கருத்தியலை மாற்றுவழியே இல்லாத கருத்தியலாகப் பின்பற்றக்கூடிய அளவிற்கு, வாசிப்புப் பண்பாட்டின் அரசியல் இருந்தது. கைத்தொழில் வளர்ச்சியற்ற இலங்கைத் தீவில், கல்வியைத் துடுப்புச்சீட்டாகப் பயன்படுத்தி முன்னேறிய, அரசாங்கச்சார்பு உத்தியோகத்தர் வர்க்கமே, மேட்டுக்குடிச் சமூகமான மத்தியதர வர்க்கமாக அமைந்ததில் வியப்பெதுவும் இல்லை. இத்தகைய ஒரு சமூகத்தில், மாற்று அரசியலுக்கான கருத்தியல்சார் வாசிப்பு எவ்வாறு நிகழும் என்பதும் அவ்வாறு நிகழ்ந்தால் அதன் விளைவுகள் எங்கு சென்று முடியும் என்பதும் வர்க்க நலனை நாடிச் செயற்படுபவர்களுக்குப் புரிந்திருக்காத ஒன்றல்ல.

எனவே, இலங்கை அரசாலும் அரசசார்பு உத்தியோகத்தனத்தாலும் உருவாக்கிக் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் அமைந்த நூல்களை வாசிக்கும் பண்பாட்டை உடைத்துத் திசைமாற்றம் செய்யவேண்டிய தேவை அவசியமானதாகக் கருதப்பட்டது. ஒருவிதத்தில், ஆக்கிரமிப்புச் செய்யும் அரச யந்திரத்திற்குச் சார்பாகச் சிந்தித்தவர்களை, அதற்கு எதிராகச் சிந்திக்க வைப்பதற்கான, மாற்றுச் சிந்தனைக்கான வாசிப்புத் தளத்தை உருவாக்க வேண்டும் எனச் சிந்திப்பதும் சிறுபான்மையினத்தின் எழுத்தரசியலின்பாற்பட்ட ஆரோக்கியமான சிந்தனைதான். 

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, மிகச் சிறியளவு எல்லைகொண்ட இலங்கைத் தமிழ் வாசகப்பரப்பை ஆக்கிரமித்திருந்த, இலங்கையின் சிங்கள மேலாதிக்கத் தேசியவாதக் கருத்தியல் உலகை உடைக்கவும் அதன்வழி சிறுபான்மை இனம் ஒன்றிற்கே உரித்தான அரசியல் மற்றும் பண்பாட்டுக் கருத்துலகை உருவாக்கவும் வேண்டிய தேவை அவசியமாக உணரப்பட்டது. நூலக எரிப்பைத் தொடர்ந்து உருவாகவேண்டிய, தமிழரின் வாசிப்புத்தள மாற்றமாகவும் இன்னும் வரலாற்றின் தேவையாகவும்கூட இது இருந்தது. 

தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கருத்தியலைப் பிற்போக்கு எனத் தேசியவாதத்தை ஆதரித்த இடதுசாரிகள் வலுவாக நம்பிய நிலையிலும், அரசுசார்பு மத்தியதரவர்க்கம் தனது நலனுக்காகத் தமிழ்த்தேசிய எதிர்ப்பை ஒரு கவசமாகக் கொண்ட நிலையிலும் ஏற்கனவே இறுகிப்போயிருந்த வாசிப்புத் தளத்தை உடைப்பதென்பது எவ்வளவு கடினமான செயல் என்பதை உணர்ந்துகொள்ள அதிக விளக்கம் தேவையில்லை.

தமிழ்த்தேசியவாதத்தையும் அதன்வழியான சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்ளாமல் இலங்கைத் தீவில் முற்போக்கான பாத்திரத்தை வகிக்கமுடியாத சூழ்நிலைக்கு, ஈழத்தமிழ் எழுத்தரசியற்காரர் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இங்குதான், அடக்குமுறைக்கு உள்ளாகும் இனமொன்றிலிருந்து, அந்த இனத்திற்குரிய உரிமையைப் பேணும், வலியுறுத்தும் எழுத்தரசியற்காரரின் மேலெழுகை அதிகம் உணரப்படுகிறது. ஈழத்தமிழ்ச் சூழலில் எழுத்தரசியல் என்பது அரசயந்திரம் கட்டமைத்ததும் அதற்குச் சார்பானவர்கள் பேணிப்போற்றியதுமான வாசிப்புத்தளத்தை உடைத்தெறியும் ஆயுதமாக மாறியது.

நூலக எரிப்புக்குப் பின் உடன்விளைவாக நிகழ்ந்த நூல் மற்றும் நூலகப் பண்பாடு பற்றிய சிரத்தையும் புதிய வாசிப்புப் பண்பாட்டை உருவாக்கும் சிரத்தையும் ஒன்றிணையும் புள்ளியில், பத்மநாப ஐயரின் நூலை ஆராதிக்கும் கனதிமிக்க பயணம் மிகத் தீவிரங்கொள்கிறது என உறுதியாகக் கூறமுடியும். 

“இலங்கைத் தீவில் அனைத்துப் பிற்போக்குகளுக்கும் எதிரான புரட்சிகரப் பாத்திரம் சுயநிர்ணய உரிமையின்பால் மையங்கொண்டது. இதில் ஐயருக்கு வரையறைக்கு உட்பட்ட நற்பாத்திரம் உண்டு. நேரடி அர்த்தத்தில் சிங்கள அரசை எதிர்க்கின்ற போராட்டத்தைவிடவும் தமிழ்ப் புத்திஜீவிகளை எதிர்க்கின்ற போராட்டம் உள்ளடக்கத்தில் கடினமானதாக இருந்தது. 1980களில் இந்தக் கடினமான பாத்திரத்தை ஏந்தியவர்களுள் ஐயரும் ஒருவர்” என மு. திருநாவுக்கரசு கூறுவதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.

தனது செயற்பாடுகள்மூலமாக, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியிலேயே ஐயர் ஈடுபட்டார் என்பதை, அவர் தினக்குரலுக்கு 31.8.2003 அன்று வழங்கிய நேர்காணலின் பின்வரும் பகுதியும் நிரூபணம் செய்கிறது.

“போரும் புலப்பெயர்வும் அலைக்கழிப்பும் தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைக் கொண்டுவந்திருக்கிறது. ஆயுதப் போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் அதேசமயம் அதற்குச் சமாந்தரமாகத் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் என்னுடைய துறைசார்ந்து நான் பங்களிக்கவேண்டியது அவசியம்” 

இந்தவகையில்தான் ஐயர் செயற்பட்டார் என்பதை “ஈழத்துத் தமிழ் இலக்கியப் பண்பாட்டு அடையாளங்களை முதன்மைப்படுத்துகின்ற எழுத்து எதுவானாலும் அதை ஊக்குவிப்பதும் நூல்வடிவில் கொண்டுவருவதும் அவருடைய அடிப்படை நோக்கு” என்று சி. சிவசேகரம் குறிப்பிடுவார். இதனை, சுந்தர ராமசாமி இன்னும் வெளிப்படையாகப் பின்வருமாறு  குறிப்பிடுவார். “பத்மநாபனுக்கு ஆயுதப் புரட்சியில் எப்போதும் ஒரு காதல் உண்டு. எந்தத் தேசத்தைச் சேர்ந்த புரட்சியாகவும் அது இருக்கலாம். புரட்சிகள்பற்றிய புத்தகங்கள் என்றால் கண்ணைமூடிக்கொண்டு எடுத்துவைப்பார். இந்தக் காதலுக்கும் மாவீரர் பிரபாகரனுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பிரபாகரனுடைய பெயர் காதில் விழுவதற்கு முன்பே பத்மநாபனின் காதைப் பற்றி எனக்கு உள்ளுணர்வுகள் இருந்திருக்கின்றன.” 

ஐயர் தமிழ்த் தேசியத்தின்பாற்பட்ட சுயநிர்ணய உரிமையைத் தனது கருத்துநிலையாக வரித்துக்கொண்டதும் அந்தக் கருத்துநிலைக்காகவே ஈழத்துத் தமிழ் எழுத்தரசியலுக்கான செயற்பாட்டுத்தளத்தை, நூல் மற்றும் நூலகப் பண்பாட்டை முன்னிறுத்தி, முன்னெடுத்து, விரிவாக்கி, வளர்த்தெடுத்திருப்பதும் மேற்கண்டவழி புலனாகிறது. ஐயருக்கு 2004ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதினை, கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசிய மையமும் இணைந்து வழங்கியது. இதனை, பத்மநாப ஐயர் என்ற தனி மனிதருக்கு வழங்கப்பட்ட கௌரவமாகப் பார்க்காது, ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கான அங்கீகாரமாகப் பார்க்கவேண்டும். அந்தவகையில் பண்பாட்டு அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படும் சிறுபான்மை இனத்தினையும் அந்த இனத்தைச் சார்ந்த இலக்கியச் செயற்பாட்டுக்காரரையும் இயல் விருதுக் குழு கௌரவித்திருப்பதுடன், ஈழத்தமிழ் இன உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்துமிருக்கிறது எனக் கருதுவதுதான் யதார்த்தத்தின்பாற்பட்டது.  இந்தப் பின்புலத்தில், இன்றைய ஈழத்து எழுத்து அரசியலில், ஐயரின் பிரசன்னத்தினை “அந்தர்ஜாமிச் சின்னம்” என வரையறுக்கலாம். தமிழவனின் வார்த்தைகளில் கூறுவதானால், நவீன ஈழத்துப் புலமை வரலாற்றில் ‘ஐயர்’ என்ற அடையாளம் “தமிழுக்கான முத்திரை” (Icon) என அமைந்துவிடுகிறது எனலாம். 

பத்மநாப ஐயர் ‘படைப்பாளியா?’ எனப் பலரும் வினா எழுப்புகின்றனர். இதற்கு ‘இல்லை’ என்ற பதிலைத் தவிர வேறு பதில் இல்லை எனினும் ‘இல்லை’ என்ற பதிலிறுப்புக்கான காரணம், ‘படைப்பு’ எனும் பதம் குறித்த மாறாத, திட்டவட்டமான பொருள் கொள்ளலே. ஒருவகையில் மரபுரீதியாக வழங்கிவரும் பொருளை, ‘படைப்பு’ என்ற பதத்திற்குப் பலரும் கொடுத்துவிடுகின்றனர் என்றே சொல்லத்தோன்றுகிறது. மறுமலர்ச்சிக் காலத்தில் படைப்பு என்பதற்கு வழங்கிய மேற்குறித்த பொருள் கொள்ளலின் இன்றைய காலத்திற்கான ஏற்புடைமைபற்றிய புலமைசார் உரையாடல்கள் பல மேலைநாட்டில் நடைபெற்றுள்ளன. தமிழ்ச்சூழலில் இவ்வாறான உரையாடல்கள் பெருமளவு நடைபெறவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. எனினும் சிலர் இதுகுறித்த தமது சிந்தனைகளை முன்வைத்துள்ளனர்.

இரா. முருகன் ‘படைப்பு’ என்பதற்கான பொருளைப் பின்வருமாறு விபரிக்கிறார். ‘ஒரு வழங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நுண்ணிய ரசனையின்பாற்பட்டுத் தொடங்கி, அந்த அடிப்படையையும் கடந்து விரியும் பரப்பில் நேர்த்தியான வாசிப்பு, காட்சி, கேள்வி அனுபவத்தை ஓர் இனக்குழு பெறவும் அதை முன்னெடுத்துச்செல்லவும், செழுமையுறப் பேணவும், அதன்வழியே பெற்ற ஊக்கத்தை ஊற்றுக்கண்ணாகக்கொண்டு சமுதாய வாழ்க்கையின் பன்முகப் பிரதிபலிப்பாக இலக்கியமும் கலையும் பெருமைக்குரிய இன அடையாளங்களாகத் தொடர்ந்து காத்திரமாகப் பெருகி வெளிப்படவும் வழிவகையை உருவாக்குகிறவரும் படைப்பாளியே.’ 

இவ்வாறு முருகன் பொதுப்படையாகக் கூறுவதை ஐயர், ‘இரண்டாம் வகைப் படைப்பாளி’ எனக் குறிக்கிறார். ஐயர் தனது இயல் விருது ஏற்புரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘தூலமான படைப்பை உருவாக்கி அளிக்கும் முதல்வகைப் படைப்பாளியின் பணியைவிட, இவ் இரண்டாம் வகைப் படைப்பாளியின் இயங்கு நெறியும் களமும், செயல்பாடும் அறுதியிட்டு வகைப்படுத்தல் சற்றே கடினமானது’. எனவே, இரண்டாம் வகைப் படைப்பாளி முதலாம் வகைப் படைப்பாளியின் உற்பத்தியையும் அதன் பெறுமதியையும் நுகர்வினையும் தீர்மானிப்பவராகிறார். 

தாமோதரம்பிள்ளை சனாதனன் “படைப்பு என்பது சமூகத்தின் பல்வேறு காரணிகளினதும் செல்வாக்குகளினதும் இடைத்தொடர்பின் வலைப்பின்னலால் ஆனது. எனவே, கலை வரலாறு என்பது படைப்பு, படைப்பாளி என்பவற்றுடன் அவற்றுக்குப் பின்னாலிருந்த போஷகர்கள், அனுசரணையாளர்கள், இடையீட்டாளர்கள், நிறுவனங்கள் என்பவற்றையும் சமூக வரலாற்று பொருளாதார, அரசியல் சூழலையும் கருத்திலெடுத்ததாக அமைகிறது” என்று கூறுவதும் நோக்கத்தக்கது. அந்த வகையில் ஐயர் ஈழத்துக் கலை இலக்கியப் புலத்திலும் அரசியல், சமூக வரலாற்றுப் புலத்திலும் முக்கியமான இரண்டாம்நிலைப் படைப்பாளியாகின்றார்.

‘இலக்கியப் பாலம்;’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய குறிப்பில், ‘பத்மநாப ஐயருக்கு இயல் விருது அளித்ததன் மூலம் இயல் விருது அமைப்பு ஒரு முக்கியமான இலக்கியப் பணியை ஆற்றியுள்ளது. ஒருவர் எழுதியோ பேசியோ இலக்கியத்துக்குப் பங்களிப்பு ஆற்ற வேண்டியது இல்லை. அர்ப்பணிப்பும் ஆர்வமுமே போதுமானவை. நீண்டகால நோக்கில் அவை பெரிய விளைவுகளை உருவாக்கும் என்ற செய்தி இப்பரிசின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.’ 

‘எழுத்தரசியற்காரர்’ எனும் பதம் குறிக்கும் பலருள்,  ‘இரண்டாம்நிலைப் படைப்பாளி’ அல்லது ‘இலக்கியச் செயற்பாட்டுக்காரர்’ எனும் அடையாளங்கொண்ட ஐயர், யாழ் நூலக எரிப்புக்குப் பின்னான ஈழத்தமிழ் கலை இலக்கியப் போக்கைத் திசைவழிப்படுத்தலில் முக்கியமான பாத்திரமேற்றலை நிகழ்த்தியுள்ளார். அவரின் முக்கியமான பல பணிகளுள் சிலவற்றைமட்டும் தனித்தனியே சற்று விரிவாக இங்கு நோக்கலாம்.

யாழ் நூலகம் எரிந்தபின்னர் ஐயரின் செயற்பாடு மிகத் தீவிரமடைந்தது. அவர் நூலகத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட முயற்சிகள் காலத்தால் நினைவுகூரப்படவேண்டியவை. அறிவுச் சமுதாயத்தின் மேன்மைச் சொத்தாகிய நூல்களை மறுபடி சேகரிப்பதற்கான தமிழகப் பயணத்திற்கு, மு. நித்தியானந்தன் உட்பட்ட யாழ் பல்கலைக்கழகச் சமூகம் ஐயரே அதிகம் பொருத்தமானவர் எனத் தெரிவுசெய்ததென்பது, அக்காலகட்டத்தினை மனதிற்கொண்டு கூறுவதாயின் அதுவும் ஒரு ‘போராளி’த் தெரிவுதான். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சேர்த்த பணத்தினைக்கொண்டு, தரையிலும் கடலிலும் இலங்கை அரசு படைவிரித்துத் தரித்திருந்த மரணத்துள் வாழும் காலத்தில்,  தமிழ்ப் போராளிகளின் படகுகள் மூலமாகத் தமிழகத்திற்குப் பயணங்கள் மேற்கொண்டவர், ஐயர். இதன் முக்கியத்துவத்தைக் கி.பி. அரவிந்தன் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

‘ஈழப் போராட்டம் வேகம்பெறத் தொடங்கிய அந்த 80களின்போது, ஈழப்போராளிகள் தமிழ்நாட்டில் தளமமைத்து நிலைகொண்டிருந்தனர். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையேயான போராளிகளின் கடல்வழிப் பயணம் பல சவால்களை எதிர்கொண்டு நடைபெற்று வந்தது. இப்பயணங்களின்போது ஏற்பட்ட உயிர், உடைமை இழப்புக்கள் சொல்லிமாளாதவை. ஆதலால், இப் பயணத்தில் பங்கேற்பதற்கு நெஞ்சுரமும் துணிச்சலும் கட்டாய தேவைகளாகும். நெருக்கடிகள் மிக்க இக்கடல்வழியாக இரு தடவைகள் பத்மநாப ஐயர் பயணம் செய்தார் என்பதை இவ்வேளையில் பதிவு செய்வது முக்கியம் என்று கருதுகிறேன். இத்துணிகரமும் மரணத்தை எதிர்கொள்வதும் தனித்த புத்தகப் பிரியத்திலும் பதிப்புத்துறை ஆர்வத்திலும் நிகழும் ஒன்றல்ல. இன்றைக்கு மேல்நோகாமல் இலக்கியம்வழி அரசியல் செய்யும் பலருக்கும் இது புரியக்கூடிய ஒன்றல்ல.’ 

யாழ் நூலக மீள் உருவாக்கத்திற்காக அக்காலகட்டத்தில் ஐயர் ஒரு ‘புத்தகப் போராளி’ எனும் நிலையில் செயற்பட்டமையானது மகத்தான ஒரு காரியமாகும்.

தமிழ்க் கல்விப் புலத்திலும் வெகுஜனத் தளத்திலும் தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விமர்சனங்களைப் பெற்றுக்கொள்வதிலும் பதிப்பிப்பதிலும் ஐயர் பலவிதங்களில் முன்னின்று உழைத்தார். ஒருசிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

ஈழத்தின் முதலாவது அரசியல் கவிதைகளின் தொகுதியான ‘மரணத்துள் வாழ்வோம்’ (1985) இலக்கிய அரசியலைத் திசை திருப்பிய முக்கிய நூல்களுள் ஒன்று. இதன் பதிப்பாசிரியருள் ஒருவரான ஐயர் அதனை வெளியிடுவதற்கான பகீரதப் பிரயத்தன முயற்சிகளையும் மேற்கொண்டவர். ஐயரின் தமிழியல் வெளியீடாக இது வெளிவந்தது. இந்த நூல் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டுத் தீர்ந்துபோனமை இலக்கியத்தில் தமிழ்த்தேசிய அரசியலின் வருகைக்கான எதிர்ப்பார்ப்பைத் தெளிவாகக்காட்டுகிறது. கேணல் கிட்டு (மூத்த தளபதி) மற்றும் சில இலக்கிய அன்பர்களின் நிதிநல்கையும் இந்த நூல் வெளிவர ஓரளவு உதவிற்று. 

“சர்வதேச அரசியலுடனும் இந்து சமுத்திரப் பகுதி பூகோள அரசியலுடனும் நிபந்தனையற்றுப் பிணைக்கப்பட்டுவிட்ட எமது விடுதலைப் போராட்டம் அரைகுறைத் தீர்வுகள் மூலம் அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விளைவான சமரசங்கள் மூலம் பின்தள்ளப்படுகிற அபாயம் இருந்துகொண்டேயிருக்கிறது. இவ்வாறான ஒரு பின்தள்ளல் நிகழ்ந்துவிட்டாலும்கூட இந்தக் கவிதைகள் காலங்காலமாக நின்று எமது துயரங்களையும் சொல்லில் மாளாத இழப்புக்களையும் மரணத்துள் வாழ்ந்த கதையையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக்கொண்டேயிருக்கும். அந்த அதிர்வுகள் விடுதலைப்போரின் எத்தகைய பின்தள்ளல்களையும் வெறுப்புடன் பார்த்துக் கவிதா அனல் உமிழ்ந்து கொண்டேயிருக்கும். நமது விடுதலைக்கு மட்டுமல்ல தென்னாசியாவிற்கே ஒரு விடுதலைப்பொறியை அவை ஒருநாள் ஏற்றும்” எனக் கவிஞர் சேரன், ஐயரின் தமிழியல் வெளியீடான ‘மரணத்துள் வாழ்வோம்;’ பற்றிச் சொல்வது இன்றைய காலத்திலிருந்து பார்க்கும்போது அர்த்தம்மிக்க தீர்க்கதரிசனமாகியுள்ளது. 

யாழ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராய் இருந்த இரகுபதி என்பார் எழுதிய, ‘யாழ்ப்பாணத்தின் பூர்விகக் குடிகள் தமிழர்களே’ எனும் ஆய்வுமுடிவை அறிவிக்கும் Early Settlements in Jaffna: An Archaeological Survey எனும் தலைப்பிலமைந்த ஆய்வேட்டை, அச்சிட்டு வெளிப்படுத்துவது தமிழரின் தாயகம்பற்றிய வலுவான ஒரு கருத்தியலைப் பரப்புவதற்கு உதவும் என்றவகையில், அந்த ஆய்வேட்டை எடுத்துக்கொண்டு புலிகளின் படகில் வேதாரண்யம் சென்று இறங்கியவர், ஐயர். இந்த நூல் வெளிவருவதில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களும் ஆர்வம்காட்டியதோடு அக்காலத்தில் தன்னாலியன்ற உதவியையும் செய்திருந்தார். எனினும், நூற்பிரதி செப்பனிட்டு அச்சுக்குத் தயாராகும் நிலையில், ஆசிரியர் தமிழியல் வெளியீடாக அன்றி, தனது விருப்பப்படி வெளியிட்டார். ஆயினும், ஆய்வேட்டைப்  புத்தக வடிவில் வெளிக்கொணரப் பாடுபட்டோரில் ஐயரின் பெயரைக்கூடக் காணமுடியவில்லை என்பதை மு. நித்தியானந்தன் பின்வருமாறு குறிப்பிடுவார்.

“ஒரு யுத்த சூழலில், இயக்கப் படகுகளின் போக்குவரத்துக்களை இலங்கைக் கடற்படையினர் கண்ணுக்குள் விளக்கெண்ணைவிட்டு ரோந்துபார்த்துக் கொண்டிருந்தநிலையில், ஒரு ஆய்வேட்டைத் தமிழகத்தில் அச்சிடுவதற்காக, உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் இயக்கப் படகில் தமிழகக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். அந்நூல் இறுதியில் வெளியான போது ஐயரின் பெயரைக்கூட அந்நூலில் காணமுடியவில்லை.”

இந்திய இராணுவம் அமைதி காக்கும் படை என்ற போர்வையில் இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டவேளையில் அதன் செயற்பாடுகள் தமிழர்களுக்குப் பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் தெரிவிக்கவேண்டிய தேவை இருந்தது. இந்தத் தேவையின் முக்கியத்துவம்கருதி இயங்கியவர்களில் ஐயரும் ஒருவர். 

மு. திருநாவுக்கரசுவின் ‘தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்’, ‘இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்’ முதலிய நூல்கள் இக்காலத்தில் அரசியல் புலத்தில் பெரும்செல்வாக்குப் பெற்றிருந்தன. 1987இல் இந்தோ லங்கா ஒப்பந்தத்தையொட்டி ‘யாருக்காக இந்த ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் மு. திருநாவுக்கரசு எழுதிய பிரசுரம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த சூழலில் வெளியிட எண்ணிய ஐயர் அதனை ‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ என்ற தலைப்பிட்டு அச்சிட்டு வெளிப்படுத்தினார். இதனை அசச்சிட்டுக்கொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினர் அச்சகத்தைச் சூழ்ந்திருந்தனர். எனினும், அச்சிடப்பட்ட எண்பத்தையாயிரம் பிரதிகளும் மக்களிடம் சென்று சேர்ந்தன. இவ்வாறு அறிவுப் புலத்தில் தமிழ்த் தேசியத்திற்கான வாசிப்பு மற்றும் சிந்தனைத் தள விரிவுக்குத் தொடர்ச்சியாகச் செய்றபட்டவர், ஐயர்.

பொதுவாகத் தமிழ் இலக்கியம் என்று பேசும்போதெல்லாம் தமிழக இலக்கியத்தை மட்டும் பேசி, திருப்திகொள்ளும் ஒரு நிலைமை எண்பதுகள்வரை இருந்தது. இன்றும்கூட, தமிழகத்தில் ஓரளவு அந்த நிலைமை காணப்படுகிறது. ஆனால், உயர்கல்வி மற்றும் புலமை மட்டத்திலும் எழுத்துலகத்திலும் அந்த நிலைமை காணப்படுவதில்லை. இத்தகைய சீரிய நிலை ஏற்படுவதற்கு உழைத்தவர்களில் ஐயரும் முக்கியமானவர். அதற்கு அவர் செய்த காரியங்கள் இரண்டு.

ஒன்று, புத்தகப் பரிவர்த்தனையும் வெளியீடும். மற்றையது, ஈழத்து எழுத்துக்கள் பற்றி ஈழத்தின் காத்திரமான இலக்கியவாதிகளைக்கொண்டு உரையும் வாதமும் நிகழ்த்துவதற்கான களத்தை ஏற்படுத்துதல். இவ் இரு அம்சங்களில் ஐயரின் செயற்பாடு குறிப்பிடத்தக்கது.

1982இல் “இலக்கு அமைப்பு” ஏற்பாடு செய்திருந்த ‘எழுபதுகளில் கலை இலக்கியம்’ என்னும் கருத்தரங்கிற்கு ஈழத்து எழுத்தாளரைப் பங்குபெறவைத்ததில் ஐயரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இக்கருத்தரங்கிற்கு முதல்நாளே ‘எழுபதுகளில் தமிழ் இலக்கியமா? தமிழக இலக்கியமா’ என்ற கேள்வியை எழுப்பி, ஈழத்து இலக்கியங்கள் பற்றிய அக்கறை  போதியளவில் காட்டப்படாததைச் சுட்டுவதற்கு ஐயரின் முயற்சி பயனளித்தது.

அம்ஷன் குமாரின் வார்த்தைகளில் கூறுவதானால் “தமிழ் – ஈழ இலக்கியங்களைப் பாகுபடுத்தி அணுகுகின்ற சிந்தனையை என்னால் அவரிடம் காணமுடியவில்லை. இரண்டு நாடுகளின் இலக்கிய மரபுகளுடனும் தன்னை இணக்கத்துடன் பொருத்திக்கொண்டுள்ள ஒரு செழுமையைத்தான் அவரிடம் காண்கிறேன். சில தசாப்தங்கள்வரை தமிழ் இலக்கியம் என்றால் தமிழ்நாட்டு இலக்கியம் என்ற அளவில் உரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்ற இயல்புநிலை மாறி, இன்று ஈழப் படைப்புகளையும் சேர்த்து எண்ணுகிற நடைமுறை உருவாகியிருப்பதற்கும் பத்மநாப ஐயரின் பங்கு கணிசமானது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்துள்ளது”. ஜெயமோகனும் இதனையே “பத்மநாப ஐயரை ஈழ – தமிழ்நாட்டு இலக்கியப் பாலம் என்பார்கள்” என்ற அர்த்தத்தில் கூறுகிறார்.

எனவே, ஈழத்து இலக்கியங்கள் தமிழ்ச்சூழலில் அதிக கவனிப்புப் பெற உழைத்தவர்களில் ஐயர் முதன்மையானவர் எனலாம்.

ஈழப் பிரச்சினைகளை எழுதுவதும் அவற்றைப் பிரசுரிப்பதும் இன்று தமிழகத்தில் பெரும்பாலும் வியாபார நோக்கில் அமைந்துவிட்டன. மலினமான அரசியல் மேடைகள்போலப் புத்தக நிறுவனங்கள் சிலவும் இயங்குகின்றன. ஆனால், ஐயர் போன்றவர்கள் ஈழ எழுத்துக்கள்மீது கொண்டிருக்கும் கரிசனை மண்ணின்மீதான கரிசனை சார்ந்தது.

சுந்தர ராமசாமி “காசுமீது சென்னை வெளியீட்டாளர்கள் கொண்டிருக்கும் கரிசனம்பற்றி அறிந்தவர்களுக்குதான் அவரது வெற்றிகள் பெரிய சாதனைகள் என்பது புரியும்.” என்று ஐயரின் செயலை விதந்து குறிப்பிடுகிறார்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழக வெளியீட்டாளர்கள் வெளியிடுவதன்மூலம் ஈழத்து எழுத்துக்களின்பாலான கவனம் மேலும் அதிகரிக்கும் எனக் கருதி ஐயர் செயற்பட்டார்.

தமிழக – ஈழம் புத்தகப் பரிவர்த்தனையைக் காத்திரமான தளமாகக் கட்டமைத்தவர்களில் ஐயரும் ஒருவர். அம்ஷன் குமார் ஐயரை சி.சு. செல்லப்பாவுடன் ஒப்பிடுகின்றார்.

‘சி.சு. செல்லப்பாவும் சிறுபத்திரிகைகளுடன் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களைச் சுமந்துசென்று பலரிடமும் அவற்றை அறிமுகப்படுத்தி விற்றவர். ஐயர் தமிழ்நாட்டில் வெளிவந்த சிறு பத்திரிகைகளை ஈழத்துச் சூழலுக்குள் கொண்டுசென்றவர். அதைப் போலவே ஈழத்துச் சிற்றிதழ்களைத் தமிழகத்திற்கும் அனுப்பிவைத்தார். ஊடகப் பரிமாற்றங்களும் இணைய வசதிகளும் இல்லாத ஒரு காலகட்டத்தில் ஒரு இலக்கியத் தூதுவராகத் தனித்துச் செயற்பட்டிருக்கிறார் என்பது எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது. இன்னும் ஐயர் ஈழத்து வாசகரின் இலக்கிய வாசிப்புத்தளத்தை மேலோங்கச் செய்வதராகவும் விளங்குகிறார்.

இலங்கைத் தமிழ்ப் பதிப்புச் சூழல் எண்பதுகளில் பாடநூல் பதிப்புச் சூழலாகவே பெரும்பாலும் இருந்தது. பதிப்பாளர்கள் பலரும் பாடநூல் பதிப்புப் பணியில் ஈடுபட்ட காலமாக அது விளங்கியது. கல்வியும் அதனூடாகக் கிடைக்கும் பெரிய லாபமும் இதன் பெரும் இயக்கத்திற்குக் காரணங்கள் எனலாம். இத்தகைய சூழலில் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தேடிப் பதிப்பிக்கும் பணி என்பது எண்ணிப்பார்ப்பதே கடினம்தான். இந்தக் காலத்தில் ஐயர் ஈழத்துப் பதிப்புலகப் போக்கையே ஒரு புதுவிதத்தில் திசை திருப்பினார்.

மூத்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம். ‘நூல் வெளியீட்டின் புதிய தொடுவானங்களைத் தம் நுட்பமான நுண் உணர்வால் புரிந்து புதிய பயன்பாடுகளைக் காட்டியிருக்கிறார்’ என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

க்ரியா ராமகிருஷ்ணன் ஐயரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘அவர் வெற்றி என்று கண்டவை தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகத் தேவையானவை தமிழ்ப் பதிப்புத்துறையின் வரலாறு எழுதப்பட்டால் அவருக்கும் அவர் முன்னெடுத்துச்சென்ற பதிப்பு முயற்சிகளுக்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கும்’ என்று கூறும் கணிப்பு முதன்மையானது.

ஐயரது பதிப்பு முயற்சிகள் தரமானவையாக அமைவதற்காக இணை முயற்சிகளாக நடைபெற்றன. தமிழியல் – காலச்சுவடு இத்தகைய இணை வெளியீடுகளுள் ஒன்று. இத்தகைய இணை வெளியீட்டு முயற்சிகள் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியது. கண்ணன் பின்ருமாறு கூறுகிறார். 

‘தமிழியல் – காலச்சுவடு வெளியீடுகள் தேர்வு ஐயருடையது. பதிப்பித்தல் காலச்சுவட்டின் பொறுப்பு. இத்தகைய தொடர்ச்சியான இணை வெளியீட்டு முயற்சி தமிழுக்குப் புதிது. அதிலும் இது தமிழகம் – ஈழம், இந்தியா – இங்கிலாந்து என்ற இணைப்புக்களை உள்ளடக்கிய முயற்சி’ 

மு. நித்தியானந்தன் ஐயரின் புத்தகப் பதிப்பு முயற்சி தொடர்பாகக் கூறுவது இன்றைய இளந்தலை முறையினரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.

‘நூலின் பதிப்பில் இவர் காட்டும் அக்கறை மிகமிக நுட்பமானது. கையெழுத்துப் படிகளை நுணுக்கமாகப் பார்த்து, சொற்களின் பிரயோகம் அனைத்திடங்களிலும் ஒரே தன்மையாக – சீராக அமைந்துள்ளதா என்று பார்ப்பதில் ஐயர் சமர்த்தர். “அங்கும் இங்கும் பிழை பிடிப்பதில் இவர் ஒரு சீத்தலைச் சாத்தனார். Penguin போன்ற இந்தியாவின் பெரும் பதிப்பகங்களின் ஈழத்து இலக்கிய ஆங்கிலத் தொகுப்புக்களில், எண்ணற்ற பதிப்புப் பிழைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி அவற்றை வெளிக்கொணர்ந்ததில் ஐயரின் பங்கு கணிசமானது” 

‘பார்மதித்த செந்தமிழ் நூல் ஏடுகளை ஆராய்ந்து பதிப்பித்தோர்கள் யார் பதிப்பித்தாலும் அங்கே பிழை நுழைதல் உண்டாகும். அவைகளின்றிச் சீர்பதித்த நற்பதிப்பு நாவலர் தம் பதிப்பு என்று செப்பும் மேன்மை’ மிக்க ஈழத்துப் பதிப்புப் பாரம்பரியத்தில் மேன்மைமிக்க நவீன இலக்கியப் பதிப்பாளராக ஐயர் விளங்கினார்.

ஐயரது தமிழியல் வெளியீடு ஈழத்து இலக்கியத்தை வளம் சேர்த்த முக்கியமான பிரசுர நிறுவனங்களில் ஒன்றாகியது. காலத்தோடொட்டிய காத்திரமான வெளியீடுகளை அதன்மூலம் ஐயர் தமிழுக்கு வழங்கினார். 1985இல் ந. சபாரத்தினம் அவர்களின் ‘ஊரடங்கு வாழ்வு’ என்ற நூல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து இன்றுவரையும் ஐயர் வெளியீடுகள் ‘தமிழியல்’ என்ற பெயரால் சிறப்புப்பெற்று வெளிவந்திருக்கின்றன. கவிதை, சிறுகதை, சமயம், பண்பாடு, அரசியல், கல்வி, ஓவியம், விமர்சனம் முதலாய பொருண்மைகளில் பல நூல்களை ஐயர் ‘தமிழியல்’ என்ற வெளியீட்டின் மூலம் வெளிக்கொணர்ந்தார். பல முக்கியமான படைப்பாளர்களின் எழுத்துக்கள் இதன்மூலம் அறிமுகமும் அங்கீகாரமும் பெற்றன.

மயிலங்கூடலூர் பி. நடராசன் ஐயரின் தமிழியல் வெளியீடு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘தமிழியல் பதிப்பு முயற்சிகள் பத்மநாப ஐயரின் பேருழைப்பின் அறுவடை. அவரின் கனவுகள் விசாலமானவை. தொடுவான எல்லையில் விரிவது.’

இவ்வாறு எழுத்து நூலாக்க முயற்சிகளுக்குப் பலம் சேர்ப்பதாக ஐயரின் தமிழியல் வெளியீடு அமைந்துள்ளது.

ஐயரின் வெளியீட்டு முயற்சிகள் தமிழியலோடு மட்டுமன்றிப் பிற வெளியீடுகளுக்கு இணைத்துணை புரிவதாயும் அமைந்தன. அந்த வகையில் அலை வெளியீடாக வெளிவந்த மார்க்சியமும் இலக்கியமும் (1981), ஒரு கோடை விடுமுறை (1981), தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் (1983), அலை இதழ்கள் – மறுபதிப்பு (1986), அகங்களும் முகங்களும் (1985) முதலியன குறிப்பிடத்தக்கன. 1975 முதல் 1978வரை வெளிவந்த 12 அலை இதழ்களை மறுபதிப்பாகக் கொணர்ந்தமை ஒரு சாதனை. தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘சிற்றிதழ்களின் நூலாக்கம்’ எனும் வகையில் அத்தொகுப்பு மிகுந்த கவனிப்புக்குரியது.

தமிழ்நாட்டில் வாசகர் வட்டம், நர்மதா பதிப்பகம், பொதுமை வெளியீடு, பூரணி வெளியீடு, அன்னம் – சிவகங்கை வெளியீடு, காவ்யா பதிப்பகம், சமுதாயப் பிரசுராலயம், க்ரியா, மித்ர வெளியீடு, மீனாட்சி புத்தகாலயம் என்பவற்றோடு தொடர்புகொண்டு ஐயர் இலங்கைத் தமிழ் நூல்கள் பலவற்றையும் வெளிக்கொணர்ந்தார். இவை தமிழ் உலகில் அவதானிப்புப் பெற்ற நூல்களாக வெளிவந்தன.

ஐயர் காண்பியக் கலைகளில் ஓவியத்திற்கு அதிக பங்களிப்புச் செய்தவர் எனக் கலைவரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுவர். ஐயரின் இப் பங்களிப்பானது ஈழத்து ஓவியர்களின் ஓவியங்களைத் தாம் வெளியிட்ட நூல்களில் இணைத்து வெளிப்படுத்துபவையாக அமைந்தன. ‘தேடலும் படைப்புலகமும்’ என்ற ஓவியக் கட்டுரைத் தொகுப்பும் இவரது முயற்சியில் வெளிவந்தது. ஆங்கிலேயர் காலத்துக்குப் பின்னர் சமயம்சாராத கலைவெளிப்பாடுகள் பற்றிய முன்னோடி வரலாற்றுச் சான்றாகவும் இந்த நூல்கள் கவனிப்புப்பெறுகின்றன. ஐயர் வெளியிட்ட ‘கண்ணில் தெரியுது வானம்’ எனும் புலம்பெயர் இலக்கியத் தொகுப்பிலும் ஈழத்து ஓவியர் பலரின் ஓவியங்கள் வெளியாகின. அந்த வகையில் புலம்பெயர்ந்த ஈழத்து ஓவியர்களின் ஓவிய முயற்சிகளைக் கலை உலகுக்கு ஐயர் வெளிக்காட்டியுள்ளார். கலை வரலாற்று ஆய்வாளரான தாமோதரம்பிள்ளை சனாதனன் என்பார் ஓவியத்துக்கான ஐயரின் பங்களிப்புக்கள் தொடர்பாக ‘மங்காத வண்ணங்கள்’ தலைப்பில் எழுதிய ஆழம்மிக்க கட்டுரையாக விளங்குறது. அக்கட்டுரையின் நிறைவில் சனாதனன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“சான்றாதார ரீதியில் குறுகிய வரலாறுகொண்ட யாழ்ப்பாணத்து ஓவியத்தின் தடமாற்றங்களைத் தீர்மானிப்பதில் ஐயரின் முயற்சிகள் தெரிந்தோ தெரியாமலோ சீரிய பங்கு வகித்துவருகின்றமை மேற்சொன்ன அவதானங்களிலிருந்து தெளிவாகின்றன. காலத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும் இவை அனைத்தும் எடுத்துக்காட்டுவது பத்மநாப ஐயர் என்ற தனியாளின் உணர்கொம்பையும் தொடர் முயற்சியையுமே. அத்துடன் இந்த முயற்சிகள் நேரடியாக ஐயருக்கு எந்தப் பயனையோ கீர்த்தியையோ பெற்றுத்தரவில்லை என்பதுடன், இவை குறித்த நபரை அல்லது கூட்டத்தினை எதிர்பார்த்து ஐயரால் நிகழ்த்தப்பட்டவையும் அல்ல. இந்த முயற்சிகளுக்குப் பின்னால் அவரின் சொந்த அர்ப்பணிப்பும் உழைப்பும் திருப்தியும் காணப்பட்டாலும், இவற்றினூடு அவர் தனது சொந்த விருப்பு, வெறுப்புக்களையும் அழகியல் தீர்ப்பினையும் மற்றவர்கள்மீது திணிப்பதையும் அதனூடு அதிகாரம் செலுத்துவதையும் இயலுமானவரை தவிர்த்துள்ளார். இது, அவரது முயற்சிகளுக்குப் பன்முகப்பட்ட பலாபலன்களையும் வாசிப்புமுறைகளையும் தந்துள்ளது. புதிய கலை வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சமகால கலை இலக்கிய வரலாறு இனங்காணப்படுகையில் பத்மநாப ஐயரின் பங்களிப்பு மேலும் தெளிவாக மேற்கிளம்பும்.”

அனைத்துலகப் பரப்பில் ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியத்தைக் கவனப்படுத்தியதில் ஐயரின் பணி முதன்மையானது. லண்டன் நலன்புரிச் சங்கத்தின் மூலம் ஐயர் வெளிக்கொணர்ந்த 10ஆவது ஆண்டுச் சிறப்பு மலர் (1996), கிழக்கும் மேற்கும் (1997), இன்னுமொரு காலடி (1998), யுகம் மாறும் (1999), கண்ணில் தெரியுது வானம் (2001) ஆகியவை இலக்கிய உலகிலேயே அதிக கவனிப்புப் பெற்றவை. இவற்றின் பின்னர் புலம்பெயர் இலக்கியம் பற்றியும் அவற்றின் கனதி மற்றும் முக்கியத்துவம் பற்றியும் பரவலான உரையாடல்கள் இடம்பெற்றன. ஐயர் கவனப்படுத்தியவர்கள் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாகப் பின்னர் அவதானிப்புப் பெற்றார்கள். ஓவியம், ஒளிப்படம், கவிதை, கட்டுரை, சிறுகதை முதலிய பலவற்றை இப் பெருந்தொகுப்புகள் தாங்கி வெளிவந்தன.

புலம்பெயர் இலக்கியம் என்பது ‘ஈழத் தமிழர் புலம் பெயர் இலக்கியம்’ என்ற அடையாளத்துடன் மேலெழவும், இன்றைய தமிழ் இலக்கியப் போக்கினைத் தீர்மானிக்கும் வலுவுள்ள சக்தியாக அது மாற்றமடையவும் தமிழின் இலக்கியம் பல்தேசியத் தன்மை அடையவும் ஐயரின் இந்த முயற்சிகள் அடிப்படையாகவும் முன்னோடியாகவும் அமைந்தன. இன்னொருவிதத்தில் புலம்பெயர் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆக்கபூர்வமாக மோதிக்கொள்வதற்கு ஐயரது நூல் பதிப்பு மற்றும் விநியோகச் செயற்பாடுகளும் காரணமாய் அமைந்தன. 

ஐயர், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பிறமொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு எடுத்த முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு தேசிய இனத்தின் தனித்தன்மைகளைப் படைப்புக்கள் வாயிலாகப் பிறமொழியினரிடம் சேர்ப்பிக்க வேண்டுமென ஐயர் அயராது உழைத்தவர். உழைத்துக்கொண்டிருப்பவர். ஈழத்து எழுத்தாளர் பலரின் கவிதைகள், கதைகள் முதலாயவற்றை ஆங்கில மொழியில் கொணர ஐயர் தீவிரமாக முயற்சி செய்தவர். அந்த வகையில் Lutesong and Lament (2001), The Rapids of a Great River (2009), Mirrored Images (2013), Many Roads through Paradise (2014), Time will write a song for you (2014), Lost Evening, Lost Lives (2016), Uprooting the Pumpkin (2016)ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இன்று ஆங்கில மொழியில் ஈழத்து இலக்கியம் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறதெனின் அது ஐயரது அயராத முயற்சியின் விளைவே ஆகும்.

புலம்பெயராத தாயகத்து எழுத்தாளர் பலரையும் புலம்பெயர் சூழலுக்கு அழைத்து அந்நாட்டு இலக்கியச் சூழலில் அனுபவம்பெற வைப்பது ஐயரது முக்கிய நோக்கங்களில் ஒன்று. புலம்பெயர் நாடுகளின் கலை, இலக்கியப் பண்பாட்டுகளையும், அவற்றின் போக்குகளையும் புரிந்துகொண்டு ஈழத்து எழுத்தளார்கள் உலகத் தரத்துக்கு இணையான படைப்புகளைத் தரவேண்டும் என ஐயர் விரும்பியதன் விளைவாக இந்த முயற்சி சிலகாலம் நடந்தேறியது.

முதன்முதலில் தமிழ் தகவல் நடுவம் மூலமாக லண்டன் வரும் வாய்ப்பினைப் பெற்று சு. வில்வரத்தினம் முதலியோர் சென்றனர். அதனைத் தொடர்ந்து தெளிவத்தை ஜோசப் சென்றார். இவர்களுடனான இலக்கியக் கலந்துரையாடலைப் புலம்பெயர் இலக்கியவாதிகளுக்கு ஏற்படுத்தியும் கொடுத்தார் ஐயர். இந்த முயற்சி ஒரு அரசு செய்வதற்கு இணையானதொரு முயற்சி எனலாம்.

தமிழ் இலக்கிய மின்தொகுப்பு முயற்சியான மதுரைத் திட்டத்தில் (Project Madurai) ஈழத்து நூல்கள் வெளிவர உதவியவர் ஐயர். இன்று பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழத்து நூல்களை மதுரைத் திட்டத்தில் இலவசமாகப் படிக்க முடிகிறது என்றால் அது ஐயரின் முயற்சியும் அர்ப்பணிப்பும் இன்றி இயலாது.

கவனிக்கப்படாத கலை உலக ஆளுமைகள் மேலும் ஐயரின் கவனம் இருந்தது. எழுதப்படாத அவர்களது வரலாறு எழுதப்பட வேண்டும் எனும் நோக்கில் அதற்கு அடிப்படையான ஆவணப்படங்களைத் தயாரிக்கும் முயற்சியிலும் அவர் முன்னின்றார். ஐயர் ஒரு தீவிர இசை ரசிகர் என்பதால் தனது முன்னோடி முயற்சிகளாக இசைக் கலையைத் தெரிந்தார்.

மணக்கால் ரங்கராஜன் பற்றிய ஆவணப்படமும், தவில்மேதை தெட்சிணாமூர்த்தி பற்றிய ஆவணப்படமும் இவ்வகையில் கலையுலகில் பெரும வரவேற்புப் பெற்றவை. 

தவில் மேதை தெட்சிணாமூர்த்தி எனும் பெயரை அறியாத தமிழுலகு இருக்கமுடியாது எனினும் அவர் பற்றிய வாழ்க்கை வரலாறு ஆவணமாக்கப்படவில்லை. அந்த வகையில் தவில்மேதையின் ஆவணப் படத்தையும் அவர் தொடர்பான அரிய பல தகவல்கள் அடங்கிய நூலையும் அவரது இசை அடங்கிய இறுவட்டையும் கொணர்ந்ததில் ஐயருக்குப் பெரும் பங்குண்டு. ஐயரின் இந்தக் கனவை இயக்குநர் அம்ஷன் குமார் தமிழ் உலகே போற்றும் வகையில் திறம்பட நிறைவேற்றினார். ஆவணப்படங்களிற்கான ஐயரின் கடின உழைப்புப் பற்றி மு.நித்தியானந்தன் பின்வருமாறு பதிவுசெய்கிறார்.

“மணக்கால் ரங்கராஜன், தவில்மேதை தெட்சணாமூர்த்தி  ஆகியோர் பற்றிய ஆவணப்படங்கள் ஐயரின் எண்ணக்கிடங்கிலே உருக்கொண்டவை. ஐயர் இல்லையேல் இந்த ஆவணங்கள் என்றுமே சாத்தியமாகி இராது. இந்த ஆவணப்படங்களைத் தயாரிப்பதில் எல்லாத் தளங்களிலும் இவர் சிந்திய உழைப்பு மதிப்புமிக்கது.”

ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு மிக்க அரும்பெரும் நூல் தேட்டமாக விளங்குவது நூலகம் எனும் பெயரிலான இணைய நூலகம். இந்த நூலகத்திற்கு ஆளுமையும் செயல்திறனும் மிக்க தலைவராக ஐயர் விளங்குகிறார். இந்த நூலகத்தை விரிவாக்கவும் இயங்கச் செய்யவும் ஐயர் எடுத்துவரும் முயற்சிகள் தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள அனைவராலும் விதந்து போற்றப்படுகிறது. நூலகத்திற்கான ஐயரின் பகீரதப்பிரயத்தன முயற்சிகள் பற்றி மு.நித்தியானந்தன் பின்வருமாறு பதிவுசெய்கிறார். 

“நூல்களின்மீது கொண்டிருக்கும் அவரது பேரார்வத்தின் விஸ்தரிப்பாகவே நூலகம் என்ற எண்ணிம ஆவணவலைத்தளத்தில் ஐயரின் ஈடுபாட்டைக் காணவேண்டும். நூலகம் இன்றும் ஆற்றலுடன் செயற்பட்டுவருவதற்கு ஐயரின் அர்ப்பணிப்பும் பேருழைப்புமே காரணமாகும். நூலகத்தின் நிதிக்காக அவர் நண்பர்கள், ஆலயங்கள், சமூக அமைப்புக்கள் என்று அனைவரையும் அணுகி நூலகத்திற்காக அவர் யாசித்துநிற்பதை நான் எப்போதும் எண்ணிப் பார்ப்பதுண்டு. ஒரு பொதுப்பணிக்காகத் தன் சுயத்தைக் கரைக்கும் அரிதான பண்பு இது. நூலகத்தின் தேவை கருதி ஈழத்து நூல்களை, துண்டுப் பிரசுரங்களை, அறிக்கைகளை, விளம்பரத்தாள்களை, அழைப்பிதழ்களைத் தேடிச் சேகரிப்பதில் தனது வயதை மீறிய உற்சாகத்துடன் செயற்படுபவர் அவர்.” 

தமிழுலகில் பெயரின் பின்னொட்டாக வரும் ‘ஐயர்’ என்பதைக் கொண்டு நிலையான பணி செய்து நிலைத்தவர்கள் பலர். ஆரியத்தை எதிர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்கூட பாரதியாரை ‘ஐயர்’ என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல் ‘ஐயர்’ என்றே எழுதியும் பேசியும் வந்துள்ளார். வித்துவசிரோமணி கணேசையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் ஆகியோரை ஐயர் அடைகொண்டே தமிழ் உலகு போற்றிநிற்கிறது. கண்டமெங்கும் அகலித்த இன்றைய தமிழ் இலக்கிய உலகில் ஐயர் என்றால் அது பத்மநாப ஐயரைக் குறிப்பதாகிவிட்டது. பத்மநாபன் என்ற அவரது இயற்பெயர் கொண்டு அவரைத் தமிழுலகு கொண்டாடுவதில்லை. பத்மநாப ஐயர் என்றும் அதிகம் கொண்டாடுவதில்லை. ஐயர் என்றே புகழ்ந்தேத்துகிறது. நூல்களைப் பதிப்பித்து, நூல்களைப் பாதுகாத்து, நூல்களை வெளியிட்டு, நூல்களை விநியோகித்து, நூலாசிரியர்களோடு உறவாடி, நூல்களே தனது வாழ்க்கை என்று வாழும் நவீன தமிழ் இலக்கியத்தின் அசாதாரண ஆளுமைமிக்க அடையாளமான பத்மநாபனை “ஐயர்”  என்றே கொண்டாடுகிறது. “சாதாரண காரியங்களைத் தொடர்ந்து செய்து, அசாதாரணமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்த ஐயர் போன்ற அசாதாரணமான மனிதர் வேறுயாரையும் எனக்குத் தெரியாது” என்று தமிழவன் குறிப்பிடுவது பொருத்தம்மிக்கது. ஈழத்துக் கவிஞர் ஒருவரும் “ஐயர்” என்றே தமிழ்த்தாயும் பதிவுசெய்வாள் என்று பின்வருமாறு பாடுகிறார்.

“மூச்சதுவும் பேச்சதுவும் ஈழமதன்

முழுமதியாம் தமிழ்ப்பொலிவே என்றுதினம்

வீச்சதுவே முதுமையிலும் பூண்டுநின்று

வீறுமிகு ஈழமணி இலக்கியத்தை

காச்சுகின்ற கருப்பணியும் நாணுமாறு

கைகளினால் கடல்தாண்டிக் கண்டமெல்லாம்

பாச்சுகின்ற பத்மநாப ஐயர்வாழ்க

பதிவுசெய்வாள் தமிழ்த்தாயும் “ஐயர்” என்றே.

…………………..

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More