இறுதிப் போரில் ஸ்ரீலங்கா அரசிடம் உயிருடன் கையளிக்கப் பட்டவர்களையும் உயிருடன் சரணடைந்தவர்களையுமே ஈழத் தமிழ் இனம் கேட்டு நிற்கின்றதே தவிர, உயிரிழந்தவர்களை கேட்கவில்லை என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. “உயிரிழந்தவர்களை கேட்டால் என்ன செய்ய முடியும்” என்று ஸ்ரீலங்கா நீதி அமைச்சர் அலி சப்ரி கூறிய கருத்து தொடர்பில் அவதானிப்பு மையம் கடும் சீற்றத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உயிரிழந்தவர்களல்ல!
2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்கள் காய்ச்சாலும் நோயாலும் உயிரிழந்தவர்களல்ல என்பதையும் அவர்கள் ஸ்ரீலங்கா அரசு மற்றும் அதன் படைகளால் மிகவும் கொடுமையான வகையில் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போரினால் அழிக்கப்பட்டவர்கள் என்பதையும் ஸ்ரீலங்கா நீதியமைச்சர் அலி சப்ரிக்கு பெரும் கண்டனத்துடன் சுட்டிக்காட்டுகின்றோம்.
அத்துடன் இனவழிப்புப் போரில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை இனப்படுகொலை செய்த ஸ்ரீலங்கா அரசு அதற்காக நீதியை தானாகத் தரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அதற்காகவே சர்வதேச விசாரணை வழியாக இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்பட்டு சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீலங்கா தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரி ஈழ மண் போராடி வருகின்றது என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதி?
ஈழ இனப்படுகொலைப் போரில் லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட தருணத்தில் எஞ்சியுள்ளவர்களை சரணடையுமாறும் போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்தது. இந்த வாக்குறுதியை நம்பி பொதுமக்களும் போராளிகளும் சரணடைந்தார்கள். அத்துடன் போராளிகளை அவர்களின் குடும்பங்களும் சில போராளிக் குடும்பங்களுமாகவுமே ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டனர்.
இறுதிப் போரில் இனப்படுகொலை செய்தவர்களைவிட இவ்வாறு உயிருடன் தந்தவர்களையே விடுவிக்குமாறு கோரியே கடந்த பதின்மூன்று வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை உடன் விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் எங்கு உள்ளார்கள்? என்ன நடந்தது என்று வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரியே அவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறா்ரகள் என்பதை ஸ்ரீலங்கா நீதியமைச்சருக்கு சொல்லித் தெரிய வேண்டுமா?
கையளிக்கப்பட்டவர்கள் எங்கே?
50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளடங்களாக பல ஆயிரம் போராளிகள் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் தலைமையில் ஸ்ரீலங்கா அரச படைகளிடம் கையளிக்கப்பட்டனர். அவர்களை பேருந்துகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஏற்றிச் சென்றதை அப் போராளிகளின் குடும்ப உறவுகள் ஸ்ரீலங்கா அரசின் ஆணைக்குழுக்களின் முன்பாக சாட்சியங்களின் போது பதிவு செய்துள்ளனர் என்பதை இங்ஆகே நினைவுபடுத்துகிறோம்.
அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களும் போர் முடிந்த பிறகு சரணடைந்தவர்களும் எவ்வாறு உயிரிழக்க முடியும்? அதனை ஸ்ரீலங்கா நீதி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அவர்களை ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் கொன்றிருந்தால் அது மாபெரும் இனப்படுகொலையாக கருதப்படும். ஏற்கனவே போர்க்களத்தில் இனப்படுகொலையை செய்த ஸ்ரீலங்கா அரச படைகள் போர்க்களத்திற்கு வெளியிலும் இனப்படுகொலையை புரிந்ததுவா என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஜெனீவா நாடகம்
வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 47ஆவது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் ஸ்ரீலங்காவில் வழக்கமான உறங்கிக் கிடக்கும் நீதியமைச்சு இப்போது நாடகங்களை அரங்கேற்றியவாறு உள்ளது. அதன் அமைச்சர் அலி சப்ரி ஸ்ரீலங்காவின் இனப்படுகொலைக்கான நீதியை குழி தோண்டிப் புதைக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இனப்படுகொலைக்கான நீதியை பெறுவதை அவரால் ஒருபோதும் தடுக்க முடியாது.
கடந்த காலங்களில் மார்ச் மாதங்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் போராடும் மக்களை ஆயுத முனை கொண்டு மிரட்டி வந்தனர். தற்போது சர்வதேச மட்டத்தில் பெரும் நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா அரசு இராணுவத்திற்குப் பதிலாக நீதி அமைச்சரை களமிறக்கி ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றவும் இனப்படுகொலைக்கான நீதியை திசை திருப்பவும் நாடகங்களை அரங்கே முயன்று தோற்று வருகின்றது.
சர்வதேச விசாரணையே தேவை
ஸ்ரீலங்கா அதிபரின் அண்மைய கால உரைகளும் நீதி அமைச்சரின் நாடகத் கருத்துக்களும் சர்சவதேச விசாரணையை தவிர்க்கவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்க்கவும் மேற்கொள்ளுகின்ற காய் நகர்த்தல்களாகும். அத்துடன் ஸ்ரீலங்காவின் நீதிக் கட்டமைப்பு தமிழினப்படுகொலையை முன்னெடுக்கும் வகையில் அமைந்துள்ளமை காரணமாகவே எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் அழிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாகவே ஈழத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் காணாமல் ஆக்கப்பட்டமை என்ற இனப்படுகொலைக் குற்றத்திற்கும் சர்வதேச விசாரணை வழியாகவே நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஈழ மக்கள் களத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒருபோதும் ஸ்ரீலங்கா நீதி அமைச்சர் அலி சப்ரியோ ஸ்ரீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவினாலேயோ ஒரு போதும் தடுக்க முடியாது என்பதையும் அவதானிப்பு மையம் இத் தருணத்தில் இடித்துரைத்துகின்றது…” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.