இஸ்ரேல் வலதுசாரி நெதன்யாகு அரசு கவிழ்க்கப்படுமா ?
பாலஸ்தீனம் மீதான அடக்குமுறை இன்னமும் தொடருமா ?
——————————————————
கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா
தற்போதய டெல் அவிவ் (Tel Aviv) நிகழ்வுகள் இஸ்ரேலிய அரசுக்கு எதிராக மட்டுமல்ல, இந்த பிராந்தியம் முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும்
எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
டெல் அவிவில் தொடரும் வெகுஜன எதிர்ப்பானது, இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இஸ்ரேலிய நாட்டின் வரலாற்றில் மிகவும் தீவிர வலதுசாரிகள், இனவாதிகள் நிரம்பிய கூட்டணி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சுமார் 100,000 பேர் ஹபிமா சதுக்கத்தில் கூடி, நீதித்துறையின் மீது நேரடி அரசியல் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் புதிய ஆட்சியின் திட்டங்களை எதிர்த்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு வெளியேயும், ஹைஃபா மற்றும் ரோஷ் பினாவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய அரசாங்கத்திற்கான எதிர்ப்பு பாரிய அளவில் நீண்டுள்ளது. நெதன்யாகுவின் கூட்டணியில் அவரது சொந்த லிகுட் கட்சி, இனவாதக் கட்சிகளான சியோனிசம், யூத சக்திமற்றும் நோம் (Religious Zionism, Jewish Power and Noam) மற்றும் வலதுசாரி மதக் கட்சிகளான ஷாஸ் மற்றும் யுனைடெட் டோரா யூத மதம் (Shas and United Torah Judaism) ஆகியவைஅடங்கும். இது யூத மேலாதிக்கம் மற்றும் நிறவெறி ஆட்சியைக் குறிக்கிறது.
இது பாலஸ்தீன பிரதேசங்களை நிரந்தரமாக கைப்பற்றுதல், அல்-அக்ஸா மசூதியில் யூதர்களின் பிரார்த்தனை, இஸ்ரேலின் சட்ட அமைப்பில் பெரும் மாற்றங்கள் மூலம் இனப்பாகுபாடு எதிர்ப்பு நடவடிக்கைகளை திரும்பப் பெறுதல்; இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் தொழிலாளர்கள், யூதர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவ அடக்குமுறையை முடுக்கிவிடுதல் என்பனவற்றை எப்போதும் ஆதரிக்கின்றது.
இஸ்ரேல் தீவிர வலதுசாரி அரசு :
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை காணாத தீவிர வலதுசாரி அரசு ஒன்றை அமைப்பதற்கு உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து பென்ஜமின் நெதன்யாகு மீண்டும் அதிகாரத்திற்கு கடந்த வருடம் பதவி ஏற்றார்.
கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றியீட்டிய நெதன்யாகு ஆறாவது தவணைக்காக பிரதமராக பதவி ஏற்றார். அவரது கூட்டணியில் அரபு எதிர்ப்பு இனவாத செயலில் ஈடுபட்டதற்காக குற்றங்காணப்பட்ட தீவிர வலதுசாரி கட்சிகளும் உள்ளடங்கியுள்ளன. இந்த புதிய அரசு ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலின் பிடியை அதிகரிக்கும் என்று பலஸ்தீனர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு சர்வதேச தீர்வாக உள்ள இரு நாட்டுக் கொள்கையை நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகள் முழுமையாக நிராகரிக்கின்றன. இதில் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் மூன்றாவது அதிக இடங்களைப் பிடித்த மதவாத சியோனிச கட்சி மேற்குக் கரையை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் இணைத்து அங்கு பரந்த அளவு அதிகாரங்களை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பாலஸ்தீனம் மீதான அடக்குமுறை:
1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இங்கு தற்போது 600,000க்கும் அதிகமான யூதக் குடியேறிகள் வாழ்கின்றனர். இந்தக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாகும்.
இந்நிலையில் ஆட்சி அமைத்த புதிய அரசின் சீர்திருத்தத் திட்டங்கள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறிச் செயற்பட எம்.பிக்களுக்கு அதிகாரம் அளிப்பது இஸ்ரேலிய ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயல் என கூறுகின்றனர்.
தலைநகரில் பெண்கள் போராட்டம்:
இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தலைநகரில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலில் நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அதிபர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச பெண்கள் தினத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு உடை அணிந்து டெல் அவிவ் நகரில் பேரணியில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்தை இஸ்ரேல் அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என பேரணியில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். இதில் எந்த சமரசமும் இல்லை என்றும் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினம் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நாள் என்றாலும் கூட, உரிமைக்காக போராட வேண்டியது அவசியம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தெருக்களில் இறங்கி போராட தயார்:
இஸ்ரேலில் மீண்டும் அதி தீவிர வலதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மக்களின் பிரச்சனைகளுக்காக மீண்டும் தெருக்களில் இறங்கிப் போராட தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் அரசியல் நிலைத்தன்மை சீர் குலைந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்திருக்கிறது. தேர்தல் மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையை தீவிர வலதுசாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நிலையான ஆட்சியைத் தங்களால்தான் தர முடியும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர்.
இந்தப் பிரச்சாரத்திற்கு மக்களில் ஒரு பகுதியினர் பலியாகி விட்டனர் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமையிலான லிகுட் கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெற்றது. இதன் மூலம் மீண்டும் நேதன்யாஹூ பிரதமராகப் பொறுப்பேற்றார்.
அத்துடன உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தையும் அமைச்சர் லெவின் முன்மொழிந்தார்.
இந்தநிலையில் தற்போதைய மசோதாவில், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொண்டாதாக மாற்றப்பட்டுள்அதுவும் வலதுசாரி மற்றும் மதரீதியிலான பழமைவாத ஆளும் கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திரமாக நிபுணர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அமைச்சர்கள் தங்கள் சொந்த சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் வகையிலும் சீர்திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள பழமைவாதிகள் மற்றும் வலதுசாரிகள் நீண்ட காலமாக நீதித்துறை இடதுசாரி சார்பாக உள்ளது என கூறி வருகின்றனர். இதை ஒரு தடையாகவே அவர்கள் பார்க்கின்றனர். மேலும், நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கம் இஸ்ரேலியர்கள் சட்ட அமைப்பில் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அதன் சீர்திருத்தத் திட்டங்கள் நீதிபதிகள் தேர்ந்தெடுப்பதில் தலையிட்டு பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், பாலஸ்தீனிய நிலம், தன்னின சேர்க்கை சமூகத்தை பாதிக்கும் சமூக சீர்திருத்தங்களை குறைக்கவும் அரசாங்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தங்கள் அதிகாரத்திற்கு உட்படுத்துவதாக கூறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் லேபிட் (Lapid) கூறுகையில், இந்த சீர்திருத்தம் நாட்டை அழிக்க அச்சுறுத்துகிறது என்று எச்சரித்தார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மாநிலத்தின் ஜனநாயக அத்தியாயம் முடிவுக்கு வரும் என்று கூறினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸும் இது உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
கூட்டணி அரசு கவிழ்க்கப்படுமா ?
இதற்கிடையில், நெதன்யாகு தனது விமர்சகர்கள் “நாட்டை அராஜகத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக” குற்றம் சாட்டினார். மேலும் அவர், இஸ்ரேலின் பெரும்பாலான குடிமக்கள் அராஜகத்தை விரும்பவில்லை. அவர்கள் கவனம் செலுத்தும் சொற்பொழிவை விரும்புகிறார்கள், இறுதியில் அவர்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
ஆயினும் பாலஸ்தீனிய நிலம் மீதான ஆக்கிரமிப்பும், அச்சுறுத்தலும் இந்த புதிய அரசியல் சமூக சீர்திருத்தங்களை குறைக்க முடியாது என்பது உண்மையாகும். வரும் நாட்களில் நெதன்யாகுவின் கூட்டணி அரசானது அவரது சொந்த லிகுட் கட்சியாலேயே கவிழ்க்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா