செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை உலகப் பெண்களின் வரலாற்றில் அன்னை பூபதியின் உயிரீகம் | நவீனன்

உலகப் பெண்களின் வரலாற்றில் அன்னை பூபதியின் உயிரீகம் | நவீனன்

10 minutes read
உலக வரலாற்றில் பெண்களின் உண்ணாவிரத போராட்டங்கள் :
ஈழத்தில் அன்னை பூபதியின் உயிரீகத்தின் உச்சம் !
——————————————————
            – நவீனன்
அமெரிக்காவில் பெண் உரிமைக்காக போராடிய அலஸ் ஸ்டோக்ஸ் பால்:
அலஸ் ஸ்டோக்ஸ் பால் (Alice Stokes Paul) ஒர் அமெரிக்க பெண்ணியவாதியும், பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். அமெரிக்க அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தத்திற்கான பிரச்சாரத்தின் முன்னணி மூலோபாயவாதிகளில் இவரும் ஒருவர்.
அக்காலத்தில் தடைசெய்யப்பட்ட பெண் வாக்களிக்கும் உரிமைக்காகவும் பாலின பாகுபாட்டை எதிர்த்து அலஷ் பால், லூசி பர்ன்ஸ் மற்றும் பிறருடன் இணைந்து, பெண் வாக்குரிமை போராட்டங்களை முன்னின்று நடாத்தியவர்.
உரிமைக்கான பெண்கள் ஊர்வலம், உண்ணாவிரதம் போன்ற அகிம்சை நிகழ்வுகளை மூலோபாயமாக்கி போராடியதன் வெற்றிகரமான பிரச்சாரத்தின் மூலம் அமெரிக்காவில் பிரபல்யமானார். இதன் விளைவாக ஆகஸ்ட் 1920 இல் பெண் வாக்குரிமை திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
1885 இல் நியூ ஜெர்சியில் பிறந்த அலஷ் பால், (ஜனவரி 11, 1885 – ஜூலை 9, 1977) ஒரு சிறு வயதிலிருந்தே பெண்களுக்கான வாக்குரிமை நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அவர் சமூகப் பணியைப் படித்தாலும், குடியேற்ற வீடுகளில் ஏழைகளுக்குச் சேவை செய்தாலும், பெண்களுக்கான உரிமைக்காக சமூகப் பணியை மேற்கொண்டார். உயர் கல்வியில் அவர் உயிரியல் மற்றும் சமூகவியலில் பட்டங்களை முடித்த பிறகு, பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் தனது படிப்பைத் தொடர 1907 இல் பிரிட்டனுக்குச் சென்றார்.
அவர் பிரிட்டனில் பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (WSPU) சேர்ந்து, பெண்களின் சம உரிமைகளுக்காக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிவில் ஒத்துழையாமை ஆகியவற்றில் பங்கேற்றார். இதன் விளைவாக, அவரும் பிரிட்டனில் உள்ள மற்ற பெண் வாக்குரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் வாக்குரிமைக்காக போரா்டம்:
Emmeline மற்றும் Christabel Pankhurst தலைமையில், WSPU உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி சிறையில் தங்கள் கட்டாய சிகிச்சை , உணவு அருந்துதலை எதிர்த்தனர்.
உண்ணாவிரத போராட்டங்கள்
ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக மாறியது. ஏனெனில் அவை கூடுதல் தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. அதே காரணத்திற்காக மக்களிடம் அனுதாபத்தை பெரிதும் உருவாக்கியது.
1910 ஆம் ஆண்டில், பால் கிரேட் பிரிட்டனில் இருந்து அமெரிக்கப் பெண்களுக்கான சட்ட மற்றும் பொருளாதார சமத்துவத்திற்காக வேலை செய்யத் திரும்பினார், தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தில் (NAWSA) சேர்ந்தார். 1890 மற்றும் 1910 க்கு இடையில், மாநில வாரியான மூலோபாயம் சில மேற்கு மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தெருக் கூட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் மறியல் போராட்டங்கள் உட்பட இங்கிலாந்தில் அவர் பங்கேற்றது போன்ற தேசிய அளவில் போர்க்குணமிக்க எதிர்ப்பு உத்திகளுக்கு மாற வேண்டியது
என்று அலஷ் பால் நம்பினார்.
பெண் உரிமைக்காக உண்ணாவிரதம்:
இந்த அகிம்சை நடவடிக்கைகள் அனைத்தும் பெண்களின் தலைமை சரியான கிளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்தது. 1913 மார்ச் 3 ஆம் தேதி பெண் வாக்குரிமை ஊர்வலத்தை அவர்கள் ஏற்பாடு செய்தனர். 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஊர்வலத்திற்காக அணிவகுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில் பெண் உரிமைக்காக ஊர்வலம், உண்ணாவிரதம் போன்ற அகிம்சை நிகழ்வுகளை மூலோபாயமாக்கி போராடியதன் மூலம் ஆகஸ்ட் 1920 இல் பெண் வாக்குரிமை திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட முதல் பெண்மணி பத்மாசனி :
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மாபெரும் அர்ப்பணிப்பை அளித்த பத்மாசனி வரலாற்றில் மறக்கப்பட்ட பெண் போராளியாவார்.
200 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்திய தேசத்தின் சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் தியாகத்தால் உருவானது. பத்மாசனி எனும் பெண் இந்த சுதந்திர போராட்டத்தில் தன் குழந்தைகளையே தியாகித்த ஒரு வீரத்தாயின் வரலாறு இன்று பலருக்கும் தெரியாது.
பாரதியாரின் பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் தமிழ் நாட்டில் பரப்பிய முதல் பெண்ணும் இவர்தான். நாட்டின் விடுதலைக்காக சிறை சென்ற முதல் பெண்.
மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் சோழவந்தானில் 1897-ல் பிறந்தவர். மதுரையைச் சேர்ந்த சீனிவாசவரதன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர். சீனிவாச்வரதனும் மகாகவி பாரதியாரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
ஒருமுறை பாரதியார் ‘உன் சொத்தை விற்றேனும் பத்திரிக்கை நடத்த பணம் அனுப்பு’ என்று கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே தனது சொத்தை விற்று பாரதியாருக்கு பணம் அனுப்பி வைத்தவர் வரதன். அத்தனை நெருக்கம்.
பாரதியார் பாடல்களை நாம் எல்லா இடங்களிலும் இன்று கேட்கலாம். ஆனால் அன்றைக்கு அப்படியில்லை. பாடல்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தன. அதை தெரு தெருவாக பாடி, பஜனைகளில் பாடி மக்கள் மத்தியில் எழுச்சி ஊட்டியவர்கள் சீனிவாசவரதனும் பத்மாசனியும்தான்.
1922-ல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக வரதன் கைது செய்யப்பட்டார். சேதி கேட்டு ஓடிவந்த பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு மாலை அணிவித்து சிறைக்கு அனுப்பி வைத்தார்.
அதுவரை கணவருக்கு உறுதுணையாக இருந்த பத்மாசனி முழுமூச்சாக நாட்டின் விடுதலைக்காக தானும்
போராட்டத்தில் குதித்தார். தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை இவரை வந்து சேர்ந்தது.
கணவர் சிறைக்கு சென்றபின் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார்.
தினமும் மாலை நேரத்தில் பாரதியார் பாடல்களை பாடியபடியே வீடுவீடாகச் சென்று கதர் விற்று வருவார். சுதந்திரத்திற்கு எதிராக இருப்பவர்களையும், ஆங்கிலேய அரசிடம் வேலைப் பார்ப்பவர்களையும் கூட கதர் வாங்க வைத்துவிடுவார். அவர் பேச்சில் அத்தனை வல்லமை இருந்தது.
பெண்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்று இவரின் பேச்சால் பல பெண்களை சுதந்திர போராட்டத்திற்கு இழுத்து வந்தது.
1930-ல் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பத்மாசனி மதுரை ஜான்சி ராணி பூங்கா முன் பேசிய பொதுக்கூட்டத்தில், இவர்
பேசியதற்காக ஆங்கிலேய அரசு
பத்மாசனியை கைது செய்து ஆறு மாத சிறையில் தள்ளியது.
பத்மாசனி சிறையில் உண்ணாவிரதம்:
சிறையில் உணவு தொடர் உண்ணாவிரதம் இருந்தார். கர்ப்பவதிக்கான ஊட்டச்சத்து உணவு இல்லாததாலும் உடல்நிலை மோசமாக இருந்ததாலும் கர்ப்பம் கலைந்தது.
சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதித்தார்.
அன்றைய காலகட்டத்தில் பொதுக்கூட்டங்களில்
பத்மாசனி பேசும் போது அனல் தெறிக்கும். இவரின் பேச்சு என்றாலே அக்கம் பக்க ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அவரது குரல் வெண்கலம் போல் கணீரென்று இருக்கும். பேச்சில் உணர்ச்சியும் வேகமும் குவிந்துக் கிடக்கும். மரக்கட்டைக் கூட வீறுகொண்டு எழும். தொண்டர்கள் பாதி கூட்டத்திலே ஆவேசமாக எழுந்து, இப்போதே வெள்ளையர்களை கூண்டோடு அழித்துவிடுகிறோம் என்று புறப்படுவார்கள். அத்தகைய வீரம் அவரது பேச்சில் இருக்கும்.
நாட்டின் விடுதலையை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தனை செய்யாத பத்மாசனிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்திருந்தன. தேச சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அவருக்கு இரண்டு குழந்தைகளுமே ஒரு வயதை அடையும் முன்னே இறந்து போயிருந்தனர்.
அனல் தெறிக்கும் வீரப் பேச்சு :
காவிரி நடையாத்திரையில்
விடுதலையைத் தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று கலந்து கொண்டார். வழிநெடுக சுதந்திரப் பிரச்சாரம், பாரதியார் பாடல்கள், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தந்த தியாகிகளின் வரலாறு என்று நடைப் பயணம் முழுவதும் சுதந்திர வேட்கை ஜோதி சுடர்விட்டு எரிந்தது. எட்டு மாத கர்ப்பத்துடன் 48 மைல் தூரம் நடந்தே வந்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை பிறந்தது. கடுமையான குளிர், பாதையோரம் தங்குவதற்கு நல்ல இடம் வேறு இல்லை. பிறந்த மூன்றாவது நாளில் அந்த குழந்தையும் இறந்தது. அம்மையாரின் உடலும் மோசமாக பாதிக்கப் பட்டது. ஓய்வுக்காக உடல் கெஞ்சத் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்தார்.
உடலில் கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் நடக்கத் தொடங்கினார். பத்மாசனியின் பேச்சு மகாத்மா காந்தியடிகளையும் கவர்ந்திருந்தது. பெல்காமில் காந்தி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக பத்மாசனியை காந்தி அழைத்திருந்தார்.
இந்திய விடுதலைக்காக மூன்று குழந்தைகளை இழந்தவர் :
விடுதலைக்காகவே தனது மூன்று குழந்தைகளையும் பலிகொடுத்த இந்த தாய் இந்தியாவின் விடுதலையை பார்க்காமலே இந்த மண்ணை விட்டு மறைந்தார். தன் உடல்நிலையைப் பற்றி கவலைப் படாமல் நாட்டைப்பற்றியே சிந்தித்த இவர் கடைசியில் 14.1.1936 இந்திய சுதந்திரத்தை காணாமலேயே விண்ணுலகம் சென்றார்.
மணிப்பூர் மக்களுக்காகப் போராடிய ஷர்மிளா இரோம் :
இந்திய சுதந்திரத்தின் பின் ஒரு பெண் 14 வருடங்களாக உண்ணா விரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அரசாங்கமே தலை கீழாக நின்று முயற்சி எடுத்து தடுக்க முற்பட்டது.
1942-ம் ஆண்டு மணிப்பூரின் இம்பால் பகுதியில் பிறந்த ஷர்மிளா இரோம் சிறுவயதிலிருந்தே சமூகச் சிந்தனை யோடும், சமுதாயம் சார்ந்த கட்டு ரைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தவர்.
2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் மலோம் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பொதுமக்களை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றதைப் பார்த்த மனித உரிமைப் போராளியான ஷர்மிளா இதனைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்புஅதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து 14 வருடங்களாக உண்ணா விரதம் இருந்த ஒரு பெண் போராளியாக உலகின் கவனத்தை ஈர்த்தார்.
அவர் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கியதை அடுத்து
ராணுவம் அவரை கைதுசெய்தது. அப்போதும் அவர் உண்ணா விரதத்தைக் கைவிடவில்லை. ஆனால், அவர் இறந்துவிடுவாரோ என்கிற பயத்தில் ராணுவம் அவரை விடுதலை செய்தது.
அதன்பிறகும் அவர் உண்ணா விரதத்தை கைவிட்டபாடில்லை. உண்ணா விரதம் தற்கொலைக்கான முயற்சி என ஷர்மிளாவை சாப்பிட வைக்கும்படி உறவினர்களை மிரட்டியது ஆளும் அரசு. ஆனாலும்
ஷர்மிளாவோ தன்கோரிக்கையைக் கைவிடவில்லை.
15 ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பெண் போராளி:
உடல் உபாதைகளினால் அவரது ஒவ்வொரு உறுப்பும் வலுவிழந்தது. அப் போது அவரது மூக்கின் வழியே திரவ உணவு மட்டும் செலுத்தப்பட்டது. 14 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த உண்ணாவிரதத்தை பார்த்த மணிப்பூர் மக்கள், அரசியலுக்கு வாருங்கள். உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று அழைத்தனர். ‘ நான் மணிப்பூர் மக்களுக்காகப் போராடும் போராளி, அரசியல்வாதி அல்ல’ என்றுகூறி மறுத்தார்.
ஷர்மிளாவின் உண்ணா விரதம் 15-ம்ஆண்டில் அரசின் தலையீட்டால் நிறுத்தப்பட்டாலும், “என் உயிர் போனாலும் பரவாயில்லை. என்றாவது ஒரு நாள் என்பகுதி மக்களின் நிலை மாறும்’ என்கிற விடாமுயற்சியில் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஷர்மிளாவின் விடா முயற்சி உலகின் கண்கள் மணிப்பூர் மக்களுக்காக விழிப்படைந்தது என்பது உண்மையே.
ஈழத்தில் அன்னை பூபதி உயிரீகத்தின் உச்சம் :
ஈழத்தில் கோரமான போர் தீவிரம் அடைந்திருந்த 1988இல் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்தி, பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டி, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.
31 நாள் நோன்பிருந்த பத்துப்பிள்ளைகளின் தாயான அன்னை பூபதி மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர். பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை.
அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணா நிலையிருந்து உயிர் நீத்தவர்.
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். போரிடும்
புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையின் பின்னர் அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை.
ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.
1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.
அன்னையர் முன்னணி போராட்டம் :
அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார்.
1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
அன்னைபூபதி போராட்டம் :
இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர். நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை.
அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
அன்னை பூபதியின் நினைவுநாள் ஈழத்தில் நாட்டுப்பற்றாளர் நாளாக என்றும் நினைவு கூறப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் பெண்கள் அடக்குமுறைகளை எதிர்க்க உண்ணாவிரதப் போராட்டத்தை ஓர் எழுச்சி வடிவமாகவே கருதி போராடி இருக்கின்றனர். உயிரீகத்தின் உச்சம் தொட்ட அன்னை பூபதியம்மா ஈழ மண்ணில் தன் உயிர்க் கொடையால் தியாகத் தாயாக என்றும் விளங்குகின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More