0
ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் மோடி ஆஸி பிரதமர் அந்தோனி அல்பானிசை சந்தித்த பின்னர் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன் பின்னர் சிட்னியில் இரு நாட்டு தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி பப்புவா நியூகினியா சென்றார். பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்.
சிட்னியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடியுடன் ஏராளமானோர் வாகனங்களில் வலம் வந்தனர். சிறப்பு விமானம் மூலம் வானத்தில் ‘வெல்கம் மோடி’ என்ற வாசகம் வரையப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்தும் ‘மோடி ஏர்வேஸ்’, ‘மோடி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்ட சிறப்பு விமானங்கள், ரயில்களில் இந்திய வம்சாவளியினர் சிட்னி நகருக்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் நடந்த இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இரு நாடுகளையும் இந்திய பெருங்கடல் இணைக்கிறது. வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் நம்மை யோகா இணைக்கிறது. ‘மாஸ்டர் செஃப்’ சமையல் நிகழ்ச்சி, கிரிக்கெட், டென்னிஸ், திரைப்படங்கள் ஆகியவையும் நம்மை இணைக்கின்றன என இக் கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவு டி20 கிரிக்கெட் முறையில் உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பையை நேரில் காண வரும்படி பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திறமை மிக்க இளைஞர்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இரு நாடுகளின் உறவு இப்போது மேலும் வலுவடைந்து வருகிறது. பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதையின் அடிப்படையில் இரு நாட்டு உறவு புதிய உச்சம் தொட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இரு நாடுகள் இடையே உறவு பாலமாக திகழ்கின்றனர். இரு நாடுகளின் வர்த்தகம் விரைவில் இருமடங்காக உயர இருக்கிறது என நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, ‘‘சிட்னியில் இந்திய பிரதமர் மோடிக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்திருக்கிறது. உண்மையில் மோடிதான் ‘பாஸ்’. ஆஸ்திரேலியாவின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு தலைவர்களும் இணைந்து, சிட்னியில் உள்ள ஹாரிஸ் பார்க் பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ (Little India) என்று பெயர் சூட்டினர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி மற்றும் இந்திய பிரதமர் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதும் நாடு என்ற வகையில் கோரனா பெருந்தொற்றின்போது நூறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றினோம்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு சென்று இந்திய மீட்பு குழுவினர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். உலக நாடுகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து பாடுபடுகிறது.
அத்துடன் இந்திய கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்களை ஆஸ்திரேலிய அரசு அங்கீகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்களும் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படும். இத்திட்டம் இரு நாடுகளின் மாணவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக இந்திய துணை தூதரகம் திறக்கப்படும். பரந்த மனம் கொண்ட ஆஸ்திரேலிய மக்களின் அன்பு நெகிழ வைக்கிறது என மோடி பேசினார்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா