யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் 19.5.23 அன்று திரைக்கு வந்தது. என்னுடைய நூல்களிலிருந்து பல பகுதிகள் இந்தப் படத்தில் என் அனுமதியில்லாமல் எடுத்தாளப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 20.5.23 அன்று ஊடகங்களிடம் எனது எழுத்து திருடப்பட்டது என்ற தகவலை ஆதாரத்துடன் பதிவு செய்தேன். இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் அவர்களின் நண்பரான வ.கீரா 25 திகதிக்கு மேல் தொடர்புக்கு வந்து இயக்குநரிடம் பேசும்படி பரிந்துரைத்தார். நான் உரையாடலை விரும்பக்கூடிவன்தான், அதனால் பேசலாம் என்றேன். பட இயக்குநரிடம் பேசப்போகிறேன் என்ற தகவலை முகநூலில் பதிவு செய்துவிட்டு வாங்க பேசுவோம் என்றார். முதலில் நாம் பேசி ஒரு முவுக்குவந்த பின் முறையான அறிவுப்பு விடலாம் என்று கூறினேன். என் மனநிலையை அறிய விரும்புகிறார்கள் என்ற நிலையில் என் நிலைப்பாட்டையும் கீராவிடம் சொன்னேன்.
இயக்குநரிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறிய கீரா தொடர்புக்கு வரவில்லை. மறுநாள் நானாக அவரை அழைத்தேன். அவர், இயக்குநருக்கும் படத் தயாரிப்பாளருக்கும் சுமுகமான உறவில்லை, அதனால் சாத்தியமாவதற்கான சூழல் இல்லை; வேண்டுமானால் இயக்குநரிடம் பேசலாம் என்றார். நானே அவரிடம் பேசுகிறேன் என்றேன்.
27.5.23 சனிக்கிழமை யாதும் ஊரே யாவரும் கேளிர் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த அவர்களை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். இயல்பாக இருந்த உரயாடலில் இன்று சந்திக்கலாமா என்றார். நான் மதுரையில் இருப்பதால் இன்று சந்திப்பதற்கு வாய்ப்பில்லை, நாளை சந்திக்கலாம் என்றேன். அவரும் ஒப்புக்கொண்டு நான் எங்கு வர வேண்டும் என்ற லொக்கேஷனும் அனுப்பினார். அன்றிரவு புறப்பட்டுச் சென்னை சென்று சேர்ந்தேன்.
ஞாயிற்றுக் கிழமை காலை எத்தனை மணிக்குச் சந்திக்கலாம் என்று இயக்குநருக்குத் தகவல் அனுப்பினேன். “இன்னைக்கு வாய்ப்பிருக்குமா தெரியல நா புரொடக்சன் ஆபீஸ் போகணும், நா கூப்பிடுறேன் தோழர்” என்று தகவல் அனுப்பியிருந்தார். “உங்களைப் பார்பதற்காகத்தான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன்”. என்றேன். “புரொடக்சன் ஆபீஸ் போய் வந்ததும் போன் பண்றேன்” என்றார். “சரி தோழர் உங்கள் அழைப்பிற்காகக் காத்திருக்கிறேன்” என்றேன். இன்றுவரை அவர் தொடர்புக்கு வரவில்லை. திங்கள் மதுரை வந்ததும் கீரா கூப்பிட்டு, எப்ப இயக்குநரைப் பார்கலாம் என்று கேட்டார். நேற்று முழுவதும் அவருக்காகத்தான் சென்னையில் காத்திருந்தேன். அவர் அழைக்கவில்லை. அதனால் மதுரை வந்துவிட்டேன். மீண்டும் ஒரு நாளை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள், பேசுவோம் என்றேன். அவர் அழைக்கவில்லை.
30.5.23 அன்று கீராவின் முகநூலில் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் அவர்களின் அறிக்கை என்ற அறிவிப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. படக்கதை திருட்டு தொடர்பான எனது குற்றச்சாட்டுக்கு மறுப்பாக வந்திருக்கும் இவ்வறிவுப்பை ஊடகங்களிடமோ சமூக வலைத்தளங்கள் எதிலும் இயக்குநர் பதிவு செய்ததாக என் கவனத்திற்கு வரவில்லை. கீரா அவர்கள் தன்னுடைய முகநூலில் பதிவு செய்திருப்பது இயக்குநரின் மறுப்பு அறிக்கைதானா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் என் குற்றச்சாட்டிற்கு மறுப்பாக இயக்குநரின் அறிக்கை என்று பதிவாகி இருப்பதால் அது தொடர்பான எனது கருத்தைப் பதிவு செய்கிறேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் பட இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் அவர்களின் அழைப்பை ஏற்று நான் அவரைச் சந்திக்கச் சென்னை சென்றும் அவர் என்னை நேரில் சந்தித்து உரையாட விருபவில்லை என்பது தெளிவாக இருக்கும் நிலையில், அவருடையது என்று சொல்லப்படும் மறுப்பு அறிக்கைக்கு எனது தரப்புக் கருத்தை இங்கு பதிவுசெய்கிறேன்.
அந்தரம் நாவல் வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்பே படம் முடிந்து தணிக்கைக் குவின் சான்றிதழும் பெற்றுவிட்டதாக இயக்குநர் சொல்கிறார். அந்தரம் நாவல் டிசம்பர் 2022இல் வெளிவந்தது. அதற்கு முன் சுமார் ஐந்து ஆண்டுகள் அந்த நாவலின் பிரதியைப் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களிம் படிக்கக் கொடுத்திருக்கிறேன். அதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் அடக்கம். இடதுசாரிப் பின்புலம் உள்ள இயக்குநர், அகதிகள் குறித்து அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் செயல்படும் இயக்குநர் அகதிகளைப் பற்றிப் படம் எடுக்கும்போது, பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் குறித்து எழுதிவரும் எனது புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது அவரது நேர்மையின்மீதான அவநம்பிக்கையை உருவாக்கிறது. ஆகவே அந்தரம் குறித்த பதிவையும்ம் எனது இதர புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது இவர் சொல்வதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.
அந்தரம் நாவல் தவிர்த்து, போரின் மறுபக்கம், தகிப்பின் வாழ்வு, நாளையும் நாளையே சிறுகதை ஆகியவற்றிலிருந்தும் பல பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற எனது குற்றச்சாட்டிற்கு அவரது மறுப்பு அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.
“பத்தினாதனது எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை இந்த படத்திற்காக நிறைய வாசித்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர். அகதிகள் குறித்த கதையைப் படமாக்குபவர் அகதிகள் குறித்த புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது நகைப்புக்கரியது. என்னுடைய புத்தகங்கள் அதிகள் பிரச்சினை தொடர்பில் பரவலாகக் கவனம் பெற்றவை. மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் என்னுடைய நூல்களைப் பற்றிப் பொது வெளிகளில் பேசியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தன்னுடைய தீர்ப்பில் என்னுடைய நூல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
20ஆம் திகதியே பொது வெளியில் கதைத் திருட்டு குற்றச்சாட்டு பதிவான நிலையில் ஒரு வாரம் கழித்து மறுப்பறிக்கை விடுவதற்கான காரணம் என்ன?
கள ஆய்வின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கதையை உருவாக்கியிருந்தால் எனது குற்றச்சாட்டுக்கு உடனடியாக மறுப்பை வெளியிட்டிருக்கலாமே.
ஒரு படைப்புக்கும், படைப்பாளிக்கும் எந்த நாடு என்பது முக்கியமில்லை. குறைந்தபட்சம் நாம் உருவாக்கும் படைப்புக்கு நேர்மையாக இருப்பதுதான் அறம்.
ஒரு அகதி எழுத்தாளரைப் பேசுவதற்காக வரச்சொல்லிப் பார்க்காமல் அலட்சியப்படுத்துவது அறமாகாது.
-பத்திநாதன்