செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மண்ணின் மகுடமான மாமனிதர் பேராசிரியர் துரைராசா | நவீனன்

மண்ணின் மகுடமான மாமனிதர் பேராசிரியர் துரைராசா | நவீனன்

5 minutes read

யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் சேமிப்பு – ஊற்று முன்னோடி !

கிளிநொச்சி பொறியியல் பீடத்தை உருவாக்கிய அறிவாளி !!

——————————————————
– நவீனன்

(யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் சேமிப்பின் ஊற்று அமைப்பின் முன்னோடியும், கிளிநொச்சியில் பொறியியல் பீடத்தை உருவாக்கிய தமிழ் மண் போற்றும் பேராசான் துரைராசாவின் நினைவு தினம் 1994 ஜீன் 11 ஆகும்)

1988 செப்டெம்பர் மாதம் ஈழத்தில் கொடூரமான போர்ச்சூழல் காரணமாக எவரும் வரத்தயங்கிய தருணம் துணிச்சலுடன் யாழ் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இன்முகத்துடன் ஒருவர் பதவியேற்றார். அவர் யாருமல்ல, மண்ணின் மகுடமான மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா தான்.

அவர் பதவியேற்க நிபந்தனையாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கபடும் என்ற கொடுத்திருந்த வாக்குறுதியை பெற்றுக் கொண்டே அவர் பதவியேற்றுக் கொண்டார்.

யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் சேமிப்பின் ஊற்று அமைப்பின் முன்னோடியும், கிளிநொச்சியில் பொறியியல் பீடத்தை உருவாக்கிய தமிழ் மண் போற்றும் பேராசான் துரைராசாவின் நினைவு தினம் 1994 ஜீன் 11 ஆகும்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் பொறியியற் பீடம்:

1990 களில் யாழ்ப்பாணம் பொருளாதார சிக்கலில் தவித்திருந்த பொழுது, எல்லாத்தரத்திலான எல்லா வகையிலான கல்வியாளர்களையும், தொழில் நுட்பவியலாளர்களையும், தொழிலாளர்களையும், நிர்வாகிகளையும், சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டவரே மாமனிதர் பேராசான் துரைராசா.

தமிழ் பேசும் மக்கள் நற்சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி, வெளியார் கற்கைபோன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை அறிவு கூட்டி பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தவர்.

வடக்குக் கிழக்கு மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகளாக இருப்பதால் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் நிறுவியதில் முதன்மை வகித்தவரும் அவரே.
ஆனாலும் பேராசிரியரின் பெருங்கனவு பல வருடங்களின் பின்பே கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக் கழகத்தின் பொறியியற் பீட அங்குரார்ப்பண நிகழ்வுடன் பூர்த்தியாகியது எனலாம்.

பேராசிரியர் அவர்கள் 1994 ஆம் ஆண்டு விழிமூடும் வரை, கொடிய நோயின் பிடியில் அவர் அகப்பட்டு இருந்தாலும், யாழ் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக அளப்பெரும் சேவை புரிந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில், பேராசான் வதிவிடமான வடமராட்சியின் வதிரி பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வல்லை வெளியினூடாக போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் 30 ற்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரத்தை மீதி வண்டியினூடே பயணித்திருந்தார். மக்களின் துன்ப துயரங்களை தன் தோளில் சிறந்த மண்ணின் பற்றாளர் அவர்.

வீர வடமராட்சியின் மைந்தன்:

மாமனிதர் பேராசான் துரைராசா யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் கம்பர்மலை என்னும் ஊரிலே, இமையாணனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அழகையா-செல்லம்மா ஆகியோருக்கு 1934 நவம்பர் 10 இல் தமிழ் மண்ணில் அவதரித்தார்.

இளமையில் ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும், கற்று, 1953 ஜீலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

அதன்பின் குடிசார் பொறியியலில் 1957 ஆம் ஆண்டில் இளமாணிப் பட்டம் பெற்றார்.1958 மார்ச் வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, நான்கு மாதங்கள் பொதுப்பணித் திணைக்களத்தில் இளைய பொறியியலாளராகப் பணியாற்றினார்.

புலமைப்பரிசில் பெற்று பேராசிரியர் கென்னத் ரொசுக்கோ வழிகாட்டலில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தார்.
1958 அக்டோபர் முதல் 1961 திசம்பர் வரை துரைராசா மண்ணின் வெட்டுப் பண்புகள் பற்றிய ஆய்வில் ரொசுக்கோவிற்கு பாரியளவில் உதவினார்.

இங்கிலாந்தில் முனைவர் பட்டம்:

இந்த ஆய்வின் மூலம் 1962 ஜீன் மாதத்தில் “கயோலின் மற்றும் மணலின் சில வெட்டுப் பண்புகள்” என்ற தலைப்பில் பேராசான் துரைராசாவிற்கு முனைவர் பட்டம் கிடைத்தது.

முனைவர் பட்டம் பெற்ற துரைராசா இலங்கை திரும்பும் முன்னர் இலண்டனில் 1962 இல் டெரிசர்ச் என்ற நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். பின்னர் பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

1971 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் பேராசிரியராக ஆவதற்கு முன்பு கனடா, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
மே 1975 முதல் செப்டம்பர் 1977 வரையும், பின்னர் பெப்ரவரி 1982 முதல் பெப்ரவரி 1985 வரையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றி இருந்தார்.

கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர்:

அக்டோபர் 1977 முதல் டிசம்பர் 1978 வரை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஏப்ரல் 1987 முதல் ஆகஸ்ட் 1988 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.

போர் தீவிரம் பெற்ற தாயக மண்ணில்
1988 செப்டம்பர் முதல் 1994 மார்ச் வரை துரைராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். தனிப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி கொழும்பு சென்று அங்குள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார்.1994 ஜீன் 11 அன்று இரத்தப் புற்றுநோயினால் ஏற்பட்ட இதய செயலிழப்பினால் கொழும்பில் காலமானார்.

தாயக மண்ணில் மாமனிதர் விருது:

தமிழ்த் தாயக மண்ணில் பேராசான் ஆற்றிய பணிக்காக, இவர் இறந்த பின்னர் இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தனர்.

மண் போற்றும் மானுடவியலாளனான துரைராசா 1977 முதல் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும், 1979 முதல் இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்திலும், 1985 மே முதல் ஐக்கிய இராச்சியத்தின் குடிசார் பொறியியல் நிறுவனத்திலும் உறுப்பினராக இருந்தார்.

1986 இல் இவர் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைவராகவும், அக்டோபர் 1989 முதல் அக்டோபர் 1990 வரை இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து சேவையாற்றினார். இவர் மண் பொறியியலில் நிபுணராகவும் இருந்தார்.

பேராதனை பல்கலைக்கழக “அக்பர் பாலம்”:

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியர் துரைராசாவினால் அமைக்கப்பட்டது.
இப்பாலம் சிங்கள பேராசிரியர் ஒருவர் விட்ட சவாலை ஏற்று மகாவலிகங்கைக்கு குறுக்கே ஒரேயொரு தூணை எழுப்பி பேராசிரியரின் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது.

மேலும் பேராசிரியர் நினைவாக பேராசிரியர் துரைராசா கிண்ணம் எனும் சுற்றுபோட்டி வருடாவருடம் பேராதனை, கொழும்பு, மொரட்டுவ பல்கலைகழகங்களுக்கிடையில் இன்றும் இடம்பெற்றுவருகிறது.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவன் :

பேராசிரியர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்,இலங்கை சிவில் பொறியிலாளர்கள் அமைப்பு, தேசிய விஞ்ஞான அக்கடமி என்பவற்றின் தலைவராகவும் இருந்து அளப்பெரும் சேவைகள் ஆற்றியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் அனர்த்தங்களில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி முற்றிலுமாக சிதைவடைந்திருந்த போது, வெளிநாடுகள் சென்று கல்லூரியின் நிலையினை எடுத்துரைத்து அங்குள்ள பழையமாணவர்களை ஒன்று திரட்டி நிதி சேகரித்து இன்றைய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி நிமிர்ந்து நிற்பதற்கு பேராசிரியரே துணை புரிந்தார்.

இன்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் நூலகம் அமைந்த கட்டிடதொகுதி பேராசிரியரின் பெயராலேயே பேராசிரியர் துரைராசா கட்டிடதொகுதி என்றே அழைக்கபடுகிறது.

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம்:

1990 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட விவசாயத்துறை மாங்குளத்தில் நிறுவப்படவிருந்த பொறியியல் துறைக்கும், முல்லைத்தீவில் நிறுவப்படவிருந்த மீன்பிடித் துறைக்குமான பூர்வாங்க வேலைகள் பேராசிரியர் துரைராசா அவரது முயற்சியையும் பரந்த நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் 1992 இல் உருவானதும் பேராசியரின் சிந்தனையில்தான். அதன் ஸ்தாபக தலைவரும் இவரேயாவார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த துறையை ஆரம்பிப்பதற்குரிய அங்கீகாரத்தைப் பெற்று அதனை நிர்வகிக்கத் தேவையான நிதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது அயராத முயற்சியால் பேராசிரியர் துரைராசா திரட்டிக் கொண்டார்.

மேலும், பல்கலைக்கழகத்தில் உள்வாரி மாணவர்களாக படிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறாத மாணவர்களின் நலன் கருதி வெளிவாரி நிலையத்தை பேராசிரியர் துரைராசா உருவாக்கி பயன் பெறச்செய்தார்.

யாழ் குடா தரைக்கீழ் நீர் சேமிப்பு – ஊற்று அமைப்பு:

1980 இல் ஊற்று என்ற அமைப்பை பேராசிரியர் துரைராசா உருவாக்கி, தலைவராக செயல்பட்டு தனது முயற்சியால் பல அபிவிருத்தி திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் உருவாக்கி கிராம மக்களை முன்னேற்றினார்.

அத்துடன் யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் சேமிப்பை ஊக்குவிக்கும் முகமாக 200 குளங்களின் வண்டல் மண் அகற்றும் திட்டம் ‘நோராட்’ நிறுவனத்தின் உதவியுடன் பேராசிரியர் துரைராசா மேற்கொண்டார். இதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி திட்ட நிதி உதவியோடு பின்தங்கிய கிராமங்களின் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு, இந்நிறுவனமும் ‘கெயர்’ நிறுவனமும் இணைந்து அமுலாக்கிய உணவு உற்பத்தி திட்டத்தினையும், ‘போரூட்’ இன் உதவியுடன் காடு வளர்ப்பு திட்ட அறிக்கை தயாரிப்பு வேலைகளும் பேராசிரியர் துரைராசா அவரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டன.

1990 ஆம் ஆண்டின் பின் வடபகுதியின் தன்னிச்சை பொருளாதார வளங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கும் நிபுணர் குழுவிற்கு தலைமை தாங்கி அதனை வழிநடத்திச் செல்ல பல திட்டங்கள் பேராசிரியர் துரைராசா அவரால் தயாரிக்கப்பட்டன.

பேராசிரியர் துரைராசாவை போன்ற கனவான்கள் இம் மண்ணில் தோன்றுவது அரிது. பேராசிரியர் துரைராசா எளிமையின் சின்னமாக வாழ்ந்தவர். பெருமை அதிகாரம் இல்லாத மண்ணின் மனிதர்.

மாணவர்களானாலும் சரி, பொது மக்களாலும் சரி எந்நேரத்திலும் எவ்விடத்திலும் அவரை அணுகி தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கு அவர் மூலம் தீர்வொன்றை காணக்கூடிய பிறரை மதிக்கும் நற்குணமே அவருக்கு உயர்ச்சியைக் கொடுத்தது எனலாம்.

இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் துரைராசா :

இறந்தும் இறவா மண்ணின் மகுடமாக மிளிர்ந்த மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழி பேராசிரியர் அழகையா துரைராசாவின் பெயரின் முன்னால் இருக்கும்போது அது உயிரோட்டமாகவே இருக்கின்றது என அவரின் மாணவர் ஒருவர் எழுதிய வரிகள் காலங்கடந்தும் அவர் நம்முள் வாழ்கிறார் என்பதனை எடுத்துக் கூறுகிறது.

-நவீனன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More