செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை உக்ரேன் சூழ்ச்சியும் – மேற்குலக போர் வெறியும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

உக்ரேன் சூழ்ச்சியும் – மேற்குலக போர் வெறியும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

நோவா ககோவ்கா அணை உடைப்பு !
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் தகர்ப்பு !!
உக்ரேன் சூழ்ச்சியும் – மேற்குலக போர் வெறியும் !!!
———————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

(நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்டதா அல்லது நீண்ட கால பராமரிப்பு இன்றி உடைந்ததா பற்றிய தகவல்கள் வெளிவர முன்னரே,
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை குறிவைத்து குற்றம்சாட்டி உள்ளன. 2022 செப்டம்பரில் நோர்ட் ஸ்ட்ரீம் (Nord Stream pipeline sabotage) பால்டிக் நடுக் கடலில் இயற்கை எரிவாயு குழாய்களை உக்ரேனிய சிறப்பு இராணுவ குழுவே தகர்த்ததை அமெரிக்க பென்டகனும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரேன் போர் சூழ்ச்சியையும்- மேற்குலக ஊடக பொய்மையை அலசுகிறது இந்த ஆக்கம்)

பாரிய சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள நோவா ககோவ்கா(Nova Kakhovka dam) அணையை தகர்த்தமை தொடர்பாக, இருநாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளன.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்திய தாக்குதலில், கெர்சன் பிரதேசத்தில்
உள்ள ‘ககோவ்கா ஹைட்ரோ எலக்ட்ரிக் அணை’ தகர்க்கப்பட்டது.

ஒருவரை ஒருவர் குற்றசசாட்டு:

இந்த அணை முக்கியமாக கிரிமியா தீபகற்ப அணுமின் நிலையத்திற்கு நீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், நோவா ககோவ்கா ஹைட்ரோ எலக்ட்ரிக் அணையை ரஷ்யா தகர்த்துவிட்டதாக உக்ரைன் உடனடியாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆயினும் இந்த பெரிய நீர் அணை தகர்ந்து இடிந்து விழுந்ததற்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த அணை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் உள்ளது. ரஷ்யாவால் நியமிக்கப்பட்டுள்ள இப்பகுதியின் மேயர், இது ‘பயங்கரவாதச் செயல்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அணை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கரையோர நகர மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கப் பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பெரிய அணை:

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இந்த அணை மீதான தாக்குதலால் 24 கிராமங்கள் உடனேயே வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 17,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

நோவா ககோவ்கா அணை இடிந்து விழுந்ததையடுத்து, டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சுமார் 42,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்டும் இயற்கை அழிவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் தகர்ப்பு :

முழுமையான விசாரணை முடிவின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, உக்ரேனிய சிறப்பு இராணுவ குழுவே 26 செப்டம்பர் 2022 இல் நோர்ட் ஸ்ட்ரீம் (Nord Stream pipeline sabotage) இயற்கை எரிவாயுக் குழாய்களில் தொடர்ச்சியான ரகசிய குண்டுவெடிப்புகளை தாக்குதலை நடாத்தியுள்ளன என்று தற்போது சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

26 செப்டம்பர் 2022 இல் நோர்ட் ஸ்ட்ரீம் (Nord Stream pipeline sabotage) இயற்கை எரிவாயுக் குழாய்களில் தொடர்ச்சியான ரகசிய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்து நீருக்கடியில் எரிவாயு கசிவுகளும் நிகழ்ந்தன. இரண்டு குழாய்களும் ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்டன. மேலும் அவை ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமுக்கு (Gasprom) சொந்தமானவை.

இந்த நாசவேலையின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அவை விவாதத்திற்கு உரிய விடயமன்று. ஆனால் மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டே உண்மையை மறைத்து, ரஷ்யாவை குற்றம் சாட்டின.

உக்ரைன் மீதான ரஷ்ய போரை அடுத்து ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார மோதல்கள் உச்சம் பெற்றன.

செப்டம்பர் 26 அன்று நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் 2ல் இருந்து வெடிப்பு முதலில் கண்டறியப்பட்டது. குழாயில் அழுத்தம் குறைவதாக அறிவிக்கப்பட்டது.
இயற்கை எரிவாயு டனிஷ் தீவான போர்ன்ஹோமின் தென்கிழக்கில் மேற்பரப்பில் வெளியேறத் தொடங்கியது. பதினேழு மணிநேரங்களுக்குப் பிறகு, நோர்ட் ஸ்ட்ரீம் 1 க்கு இதே நிலை ஏற்பட்டது, இதன் விளைவாக போர்ன்ஹோமின் வடகிழக்கில் மூன்று தனித்தனி கசிவுகள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட மூன்று குழாய்களும் செயலிழந்தன. இரண்டு நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்களில் ஒன்று இயங்கக்கூடியது என்பதை ரஷ்யா உறுதிப் படுத்தியுள்ளது. இதனால் நோர்ட் ஸ்ட்ரீம் 2 மூலம் ஐரோப்பாவிற்கு எரிவாயுவை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது.

போலந்தும் நோர்வேயும் டென்மார்க் வழியாக ஓடும் பால்டிக் குழாயைத் திறக்க முன்பு, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களைப் போல ரஷ்யாவிலிருந்து எரிவாயுவைக் கொண்டுவராமல், வட கடலில் இருந்து எரிவாயுவைக் கொண்டு வந்தன. கசிவுகள் சர்வதேச கடல் பகுதியில் (எந்த நாட்டினதும் கடல் பகுதி அல்ல), ஆனால் டென்மார்க் மற்றும் ஸ்வீடனின் கடல் எல்லைகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

அழிவை ஏற்படுத்தும் அச்சம் :

தற்போது நோவா ககோவ்கா அணையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பேரழிவாக வெள்ளம் பரவத் தொடங்கியது. நோவா ககோவ்கா அணையானது டினீப்பர் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது கெர்சன் நகருக்கு கிழக்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையின் உடைவு உள்ளூர் பகுதிக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அணை 30 மீட்டர் நீளமும் நூற்றுக்கணக்கான மீட்டர் அகலமும் கொண்டது. இது 1956 இல் ககோவ்கா நீர்மின் நிலையத்தின் கீழ் கட்டப்பட்டது. இந்த அணையில் சுமார் 18 கன கிலோ மீட்டர் தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அளவு தண்ணீர் அமெரிக்காவின் உட்டாவில் உள்ள பெரிய உப்பு ஏரியில் இருக்கும் தண்ணீருக்கு சமம் ஆகும்.

மின் உற்பத்தி நிலைய நீர் வழங்கல் :

அணை உடைந்ததால் கெர்சன் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கெர்சனின் சில பகுதிகள் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உக்ரேனிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. அணையில் ஏற்பட்ட வெடிவிபத்திற்குப் பிறகு, கெர்சன் பிராந்திய தலைவர் குடியிருப்பாளர்களை வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

2014 இல் ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட தெற்கில் உள்ள கிரிமியாவிற்கு இந்த அணை நீர் வழங்குகிறது. இது தவிர, ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகிறது. இந்த அணுமின் நிலையம் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணு உலையாகும்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு ககோவ்கா அணையில் இருந்து தான் குளிரூட்டும் நீர் வழங்கப்பட்டு வந்ததது.

ஜபோரியா அணுமின் ஆபத்து:

அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் 18 மில்லியன் கன மீட்டர் நீர் வெளியேறிவருகிறது எனவும், இதனால் கரையோரத்தில் உள்ள ஆயிரகணக்கான மக்களுக்கு வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள – ஜபோரியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையத்திற்கு இந்த நீர்த்தேக்கதில் இருந்தே குளிரூட்டுவதற்கு தேவையான நீர் வழங்கப்படுகிறது. இதற்குரிய நீர் வழங்கப்படாவிட்டால் அணுமின் நிலையம் பாதிக்கபடும் என கூறியுள்ள போதும் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து இல்லை என சர்வதேச அணு சக்தி கூட்டமைப்பு அறிவித்துள்ளது

கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா வெள்ளத்தில்:

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அந்த உயிரியல் பூங்காவில் இருந்த 300 விலங்குகளும் உயிரிழந்தன. சுமார் 44000 பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். ஆயினும் இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்துகள், ரயில்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது.

சோவியத் காலத்தில் கட்டப்பட்ட அணை :

சோவியத் காலத்தில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே 1956-ம் ஆண்டு 98 அடி உயரத்தில் 3.2 கி.மீ நீளத்தில் ககோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு ககோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. கிரிமியன் தீபகற்ப பகுதி, ஜபோரிஜியா அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது.

இந்த அணை தகர்த்து, இங்கிருந்து வெளியேறும் அபாய அளவை எட்டியுள்ளதால், கககோவ்கா பகுதியில் உள்ள பல கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கெர்சன் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்ல பிராணிகளுடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கக்கோவ்கா அணை சேதமடைந்துள்ளதால், 80 குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால், ஜபோரிஜியா அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக சர்வதேச அணு சக்தி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அணை தகர்க்கப்பட்டதா அல்லது நீண்ட கால பராமரிப்பு இன்றி உடைந்ததா என்பது பற்றி இதுவரை முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. ஆயினும் உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவை குறிவைத்து குற்றம்சாட்டி வருகின்றமை வழமையே.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More