செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வையகம் எழுச்சியுற “தாய்” நாவலை படைத்த மாக்சிம் கார்க்கி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

வையகம் எழுச்சியுற “தாய்” நாவலை படைத்த மாக்சிம் கார்க்கி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

6 minutes read

பாட்டாளி வர்க்க ஒப்பற்ற இலக்கியப் படைப்பாளி :
வையகம் எழுச்சியுற “தாய்” நாவலை படைத்த மாக்சிம் கார்க்கி :
——————————————————-
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற இலக்கியப் படைப்பாளி மாக்சிம் கார்க்கி ஜூன் 18 அன்று
உயிர் நீத்த நாளாகும்.உழைக்கும் மக்களுக்காக எழுச்சி விதைகளை விதைத்து புதியதோர் உலகம் படைத்த கார்க்கியின் நினைவுநாள் ஜூன் 18 சர்வதேச இலக்கிய பரப்பில் அனுஷ்டிக்கப்படுகிறது)

முற்போக்கு இலக்கியத்தில் கூடியளவு வாசிக்கப்பட்ட முதன்மையான நூல் மாக்சிம் கார்க்கியின் “தாய்” என்றே கூறலாம். உலகம் வியந்த “தாய்” நாவலை படைத்த ‘மாக்சிம் கார்க்கி’ பரணி புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் முன் நிற்பவர்.

எழுச்சி விதைகளை விதைத்து புதியதோர் உலகம் படைத்து புரட்சி படைத்திட்ட கார்க்கியின் கருத்தோவியம் தான் “தாய்” எனும் எல்லா யுகங்களிலும் படிக்கப்படும் நாவல்.

உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளியின் நினைவுநாள் சர்வதேச இலக்கிய பரப்பில் அனுஷ்டிக்கப்படுகிறது.

கார்க்கியின் கருத்தோவியம் “தாய்” :

மேற்கத்திய தொழிற்புரட்சிக்குப் பின்னர் புதிய இலக்கிய வகைகளும் உத்திகளும் தோன்றின. தொழிற்சாலை முறை தோற்றுவித்த அவலங்கள் – சுரண்டல், வறுமை, பிணி, ஏற்றத்தாழ்வுகள், சமூகக் கொடுமைகள் பற்றிப் பாடல்களும், சிறுகதைகளும் புதினங்களும் வெளிவந்தன.

மத்திய காலத்தில் இத்தாலியில் லியனார்டோ -டா- வின்சி கண்ட மறுமலர்ச்சி இயக்கம் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவிச் செல்வாக்குப் பெற்று ரஷ்ய நாட்டையும் பாதித்தது.

1648 இல் இங்கிலாந்திலும் 1789 இல் பிரான்ஸிலும் நடந்த புரட்சிகள் மிக முக்கியமானவை. அவை சமுதாயத்தில் பழைய அரசியல் அமைப்புமுறை மாறிப் புதிய அமைப்பு முறை ஏற்பட வழிகோலின.

உலக மக்கள் முழுமைக்குமான உரிமைகளையும் கடமைகளையும் தேவைகளையும் வகுத்து வரையறை செய்ததோடு, மக்களது நாட்டம் அவற்றை அடைவதை நோக்கியே இருக்க வேண்டும் என்னும் நிலைமையை உருவாக்கின. இந்த நிலைமையே புதிய இலக்கியம் தோன்றுவதற்கு உந்து சக்தியாக வளர்ந்தது.

தொழிற்புரட்சியும் எழுச்சியும் ;

இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட சமுதாய மாற்றங்களைப் பிரதிபலிக்க ஐரோப்பிய நாடுகளில் எல்லா மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. இவை மக்களுடைய வாழ் நிலைகளை உள்ளது உள்ளவாறே எடுத்துக்காட்டின.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெகல் (HEGEL) என்னும் சிந்தனையாளர் சமுதாய மாற்றங்கள் கருத்துகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மோதுவதால் ஏற்படுகின்றன என்றார்.

ஆனால் அவரைப் பின்பற்றிய கார்ல் மார்க்ஸ் சமுதாய மாற்றங்கள் மக்கள் பிரிவினர். வர்க்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் விளைகின்றன. வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்கள் வரலாறே என்று சொன்னார். வரலாற்றைப் படைப்பவன் மனிதன், உழைப்பே மனிதனைப் படைப்பது என்று ஏங்கெல்ஸ் அறுதியிட்டுச் சொன்னார்.

இப்புதிய சிந்தனை ஐரோப்பாக் கண்டம் முழுவதும் காட்டுத் தீ போல உழைப்பாளரிடையே பரவிற்று. முதலாளித்துவம் சோஷலிசம் என்னும் வாதங்களும் பிறந்தன. மார்க்சியம் உழைக்கும் வர்க்கத்தையும் சிந்தனையாளர்களையும் இலக்கிய படைப்பாளிகளையும் ஈர்த்தது. மக்சீம் கார்க்கி இவர்களில் ஒருவர்.

மக்சீம் கார்க்கி 1868 மார்ச் 28ஆம் நாள் ரஷ்யாவில் நிஜினி நோவோகார்டு என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அலக்ஸி என்பதாகும். இவருடைய தந்தையார் ஒரு தச்சர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயும் மறுமணம் செய்துகொண்டார். எனவே அலக்ஸி தம் தாய்ப் பாட்டியால் வளர்க்கப்பட்டார். இதனால் வாழ்நாள் முழுதும் பாட்டியிடம் பாசமும், பரிவும், நன்றியும் காட்டி வந்தார், இவரை வளர்த்து ஆளாக்கிய பெருமை பாட்டிக்கு உரியது.

1879-ல் அவருடைய தாய் இறந்தார். சிறு பையனாக இருந்தபோதே பல பணிகளைச் செய்ய வேண்டியவரானார். முதலில் காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓர் ஆண்டுக்குப் பிறகு கட்டட ஒப்பந்தகாரரிடம் வேலை செய்தார். வேலை கடினமாக இருந்ததால் தப்பி ஓடி டோப்ரி என்னும் பயணக்கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். கப்பலில் சமையல்காரராக இருந்த மிகைல் அகிமோவிச் என்பவர் அவருக்குப் புத்தகங்கள் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டினார். கோகோல், ஹேன்றி பீல்டிங் முதலான நாவல் ஆசிரியர்கள் அறிமுகமானார்கள்.

இதற்குப் பின் டுமாஸ், டெர்ரெல்கெஸ்டாவ், மாண்டிபன், லெர்மான்டொவ், தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனேவ், டிக்கன்ஸ், ஆண்டான் செகாவ் முதலானோரின் படைப்புகளைச் சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். அவை எழுந்த காலப்பின்னணி சமுதாயக் கொடுமைகள் அடக்கு முறைகள் துன்ப துயரங்கள் நிரம்பியது. எனவே இயல்பாகவே அலக்ஸி இடர்ப்பட்ட மக்கள் பக்கம் நின்றார்.

சோஷலிச கம்யூனிச கருத்துகள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பரவி உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களைத் தட்டி எழுப்பின.

ஜார் மன்னனின் கொடுமை ;

ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னன் மக்களுக்குக் கொடுமை இழைப்பதை ஒரு பெருமையாகவே கருதினான். எதேச்சதிகாரமும் கொடுங்கோன்மையும் அடக்குமுறையும் ஜார் மன்னனுக்கு கைவந்த கலை.

இலக்கிய வாசிப்பு படிப்பு – பயிற்சி அவருடைய அறிவைக் கூராக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. அவரும் எழுதத் தொடங்கினார்.

இதற்கு முன் தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்பதுயரங்களையும் இழிவுகளையும் நினைத்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக்கொண்டார்.

பின் பல வேலைகளில் உழன்று, 1889 ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ட்டாயைச் சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கொ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரைச் சந்தித்துத் தாம் எழுதிய கவிதையைப் பரிசீலிக்கத் தந்தார், 1891-ஆம் ஆண்டு ரஷ்யநாடு முழுவதும் முக்கிய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இடையில் அவருடைய “கன்னியும், மரணமும்” என்னும் கவிதை வெளிவந்தது. தொடர்ந்து பல கவிதைகளும் சிறுகதைகளும் புதினங்களும் எழுதினார். அவருடைய பெயரும் மக்சிம் கார்க்கி என்றாயிற்று. இதுவே உலகம் முழுவதும் புகழ்பெற்று நிலைபெறுவதாயிற்று, கார்க்கி என்பதற்குக் கசப்பு என்பது பொருள்.

கார்க்கியின் வாழ்க்கைத் துணை :

1896ஆம் ஆண்டு அச்சுப்பிழை திருத்துவதில் துணைவராக இருந்த ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா என்னும் பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்தார். 1898ல் “படங்களும் கதைகளும்” தொகுதிகள் வெளிவந்தன, அவர் டிப்லிஸ் நகரில் இருந்தபோது சமூக ஜனநாயக அமைப்புடன் தொடர்புகொண்டு இருந்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். புகழ்பெற்ற வரலாற்றாளர் கிப்பன்ஸ் (Gibbons) என்பவருடைய ரோமானியப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்னும் நூலைப் படித்தார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தார்.

1899ல் அவருடைய “பாமா கோர்தயேவ்” என்னும் நாவல் வெளிவந்தது. 1990ல் லியோடால்டாயைச் சந்தித்துக் கருத்து பரிமாறிக்கொண்டார். 1901ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் மிக தீவிரமாகப் பங்குபெற்றார். அறிவியல் கழகம் அவரை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது “பெட்டிபூர்ஷ்வா” என்னும் நாவல் 1902இல் வெளிவந்தது.

தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக அரசு அவரை அர்சமஸ் நகருக்கு கடத்திற்று. “சோர்மோவோ” தொழிலாளர்கள் கிளர்ச்சியில் பங்கு பெற்றார். நிஜினி நோவோகார்டில் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதே ஆண்டு மாஸ்கோ கலையரங்கில் அவருடைய “அடிஆழம்” “கோடை மக்கள்” என்ற நாவல்கள் நாடகமாக அரங்கேற்றப்பட்டன. 1903ல் தீவிர பொல்ஷிக் அனுதாபி ஆனார்.

தொழிலாளர்களின் ரஷ்யப்புரட்சி :

1905ல் போராட்டத்தில் திரண்டிருந்த தொழிலாளர்களுக்கும் ஜார் படைவீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் என்று அஞ்சி ரெட்ஸென்ஸ்கி என்னும் உள் விவகாரத் துணை அமைச்சரிடம் அறிவாளிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்று விண்ணப்பம் தந்தார். அது தோல்வியில் முடிந்தது. போலிஸ் காவலர்கள் தொழிலாளர்களை நரவேட்டை ஆடினார்கள், இதனை “ரத்த ஞாயிறு” என்பர். அது கார்க்கியை மேலும் தூண்டிற்று. இதனால் பலமுறை சிறைப்பட்டார். சிறையில் “கதிரவன் குழந்தைகள்” எழுதினார். 1905ஆம் ஆண்டில் போல்ஷிவிக் கட்சி உறுப்பினரானார்.

ரஷ்யப்புரட்சி நிலைமையை அமெரிக்க மக்களுக்கு விளக்கிச் சொல்ல 1906ஆம் ஆண்டு போல்ஷிவிக் கட்சி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பியது. மனைவி உடன்வர அமெரிக்கா சென்றார். அமெரிக்காவிலிருந்த ரஷ்யப் பிரதிநிதியும் ஜாரின் அடிவருடிகளும் அவரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். பலிக்கவில்லை, எச்.ஜி.வெல்ஸ், எர்னஸ்ட் ரூதர்போர்டு, வில்லியம் ஜேம்ஸ் தொடர்பு கிடைத்தது. இதன் விளைவாக கார்க்கி நாடு திரும்பிய பின் ஆப்பிள்டன் மேகஜின் ‘தாய்’ தொகுதி வெளியிட்டது.

1907இல் போல்ஷிவிக் கட்சியில் ஐந்தாவது காங்கிரஸில் பங்கு பெற்றார். “தாய்” முழுதும் வெளிவந்தது. 1908 முதல் கார்க்கி லெனின் தொடர்பு வலுவடைகிறது. “ஒப்புதல்” “கழிக்கத் தகுந்தவன்” என்னும் புதினங்கள் வெளிவந்தன. 1909இல் கார்க்கியின் படைப்புகள் ரஷ்யமக்கள் – உழைக்கும் வர்க்கங்கள் எழுச்சிக்குப் பெரும் துணை செய்து வருகின்றன என்று லெனின் கார்க்கியை மனமாரப் பாராட்டிக் கடிதம் வரைந்தார்.

மகத்தான அக்டோபர் புரட்சி:

1909ஆம் ஆண்டு ரஷ்யா உழைப்பாளிகளுக்குக் கேப்ரி (இத்தாலி) யில் பயிற்சிப்பள்ளி தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டார். “ஒகுராவ், சிறுபட்டணம்” என்னும் புதினமும் “கோடை” என்னும் சிறுகதையும் வெளியாயின.

1910 இல் போல்ஷிவிக் கட்சியின் மிக முக்கியமான தலைவரான ஷெர்சின்ஸ்கியைச் சந்தித்து உரையாற்றினார். ஷெர்சின்ஸ்கி தம் நண்பருக்கு வரைந்த கடிதத்தில் எடுத்த எடுப்பிலேயே-முதல் சந்திப்பிலேயே கார்க்கி தம்மைக் கவர்ந்துவிட்டதாயும், அவருடைய மனத்தூய்மையும் உறுதியும் வியப்பளித்ததாயும் எழுதினார், “மாட்வி கொழம்கின் வாழ்க்கை” என்ற புதினம் பெர்லினில் வெளிவந்தது.

மகத்தான அக்டோபர் புரட்சிக்கு முன் பல இலக்கியங்கள் வெளிவந்தன. 1915இல் புரட்சிக் கவிஞர் மாயகோவ்ஸ்கி இவரைச் சந்தித்து நண்பரானார்.

1917, 1921ல் புரட்சி முடிந்து, சில ஆண்டுகளில் லெனின் – கார்க்கி உறவு வலுப்பட்டதோடு சில தகராறுகளும் ஏற்பட்டன. கார்க்கி அறிவாளிகளிடையே ஏற்பட்ட புரட்சிகர உணர்வுகளைப் பெரிதும் மதித்தார். அதேபோது அந்த அறிவாளி வர்க்கம் தொழிலாளர் – விவசாயிகள் எழுச்சியையும் புரட்சி வேகத்தையும் கண்டு அதிர்ந்தது.

இக்காலக்கட்டத்தில் கார்க்கி எடுத்த சில தவறான நிலைப்பாடுகளை லெனின் திருத்தினார். கார்க்கியை லெனின் அதிகமாக மதித்தார், நேசித்தார். ஆனால், அதேபோது அவருடைய பிழைகளைத் திருத்தத் தயங்கியதுஇல்லை. கார்க்கி உடல் நலமிழந்தபோது லெனின் சிகிச்சைக்காக பின்லாந்துக்கும் ஜெர்மனிக்கும் செல்ல ஏற்பாடுகள் செய்தார். 1923 இல் “என் பல்கலைக்கழகங்கள்”, “காவலாளி”, “முதல் காதல்” வெளிவந்தன.

லெனின் நினைவுக் குறிப்புகள் ;

1924இல் லெனின் மறைந்தார். லெனின் வாழ்க்கை பணி பற்றிய நினைவுக் குறிப்புகளை கார்க்கி உணர்வு பொங்க எழுதினார். அவர் சிலகாலம் இத்தாலியில் வசிக்க வேண்டிஇருந்தது. அப்போது வி. ஐ. லெனின் என்னும் அவருடைய நூல் வெளிவந்தது, 1925-27 இல் “அசாதாரணம் பற்றிய கதை”, ”ஆர்ட்டமனாவ்” “செர்ஜீ ஏசனின்” “கிளிம்சம்கின் வாழ்க்கை ” ஆகிய நூல்கள் வெளிவந்தன.

1928 மார்ச் 28 கார்க்கி அறுபது ஆண்டு நிறைவு, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பாராட்டுக் கடிதங்கள் குவிந்தன.இத்தாலியிலிருந்து சோவியத் நாடு திரும்பி வந்து சேர்ந்தார்.முதலில் லெனின் நினைவாலயம் சென்று மரியாதை செலுத்தினார். இலக்கியப்பணியில் ஆழ்ந்தார். செய்தித்தாள்களிலும், இலக்கிய இதழ்களிலும் கட்டுரைகள் எழுதிக் குவித்தார்.

1930 நவம்பர் 15இல் “பிராவ்தா”வில் அவர் எழுதிய “பகைவன் பணியவில்லை என்றால், அவன் அழிக்கப்பட வேண்டும்” என்னும் கட்டுரை பிற்காலத்திலேபாசிசத்தை எதிர்த்து நடைபெற்ற இரண்டாவது உலகப்போர்க் காலத்தில் சோவியத் மக்களைத் தட்டி எழுப்பத் துணை செய்தது.

1933-ல் வெளிவந்த ”சோஷலிச எதார்த்தவாதம்” என்னும் கட்டுரை, புதிய இலக்கியச்சிந்தனை உத்திக்கு அடிக்கல் நாட்டிற்று. 1934 இல் சோவியத்கம்யூனிஸ்ட் கட்சியின் பதினேழாவது காங்கிரசில் சிறப்புப்பிரதிநிதியாகப் பங்கு பெற்றார். ஆகஸ்டு 17 அன்றுஅனைத்து சோவியத் எழுத்தாளர்கள் மாநாட்டுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ”சோவியத் இலக்கியம்” என்னும் தலைப்பில் வழிகாட்டி உரையாற்றினார்.

பாட்டாளி வர்க்க இலக்கியவாதி :

1935 ஆம் ஆண்டு ரோமெய்ன் ரோலண்டும் அவர் மனைவி மரியா பாவ்லோவ்னாவும் சோவியத் நாடு வந்து, சிலகாலம் கார்க்கியுடன் தங்கினார்கள். கார்க்கியின் படைப்புகள் மீண்டும் மீண்டும் அச்சாயின. 1936இல் கார்க்கி நோய்வாய்பட்டார். குடும்பத்தினர் கட்சியினர் முழு அக்கறைகாட்டியும் ஜூன் 18 அன்று காலை 11 மணிக்கு உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளி உயிர் நீத்தார்.

எழுச்சி விதைகளை விதைத்து புதியதோர் உலகம் படைத்த கார்க்கியின் நினைவுநாள் சர்வதேச இலக்கிய பரப்பில் அனுஷ்டிக்கப்படுகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More