செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை யாழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் எம்.பி. வெற்றிவேலு யோகேஸ்வரன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

யாழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் எம்.பி. வெற்றிவேலு யோகேஸ்வரன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

(யாழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த முன்னாள் எம்.பி. வெற்றிவேலு யோகேஸ்வரன். 1989 ஜீலை 13 அவருடய நினைவு தினமாகும்)

யாழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் யாழ் பாராளமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரன் தமிழ் இளைஞர்கள், மற்றும் பொது மக்களிடையே மிகவும் என்றும் பிரபலமாக இருந்தவர்.1989 ஜீலை 13 அவருடய நினைவு தினமாகும்.

மறைந்த வெற்றிவேலு யோகேஸ்வரன் இனிமையான நடத்தை மற்றும் மகிழ்ச்சியான முகபாவனை கொண்ட அன்பானவர். யோகேஸ்வரன் அவர்கள் ஜுலை 1977 முதல் ஜூலை 1983 வரை யாழ்ப்பாணத்தின் வாக்காளர்களை பாராளமன்றில் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த புகழ் அவருக்கு ஜனநாயக அரசியலில், தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.

பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் யோகேஸ்வரன் பற்றி குறிப்பிடுகையில், அவர் வழுக்கையாக இருந்தாலும் அவர் மிகவும் புத்திசாலியும் மிகவும் அழகானவர், யோகேஸ்வரன் தனது அழகிய தோற்றத்தை என்றும் தக்க வைத்துக் கொண்டார். எப்போதும் ஒரு கவர்ச்சியான புன்னகையுடன் இருப்பார். அவர் அடிப்படையில் நல்ல குணமும், மிகவும் இனிமையான சுபாவமும் கொண்டவர். அவர் ஒரு எழுச்சிமிக்க ஆளுமையுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் வெற்றிவேலு வாரிசு :

வெற்றிவேலு யோகேஸ்வரன் (5 பெப்ரவரி 1934 – 13 ஜீலை 1989) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மரியாதைக்குரிய மருத்துவ நிபுணர் டாக்டர் சண்முகம் அப்பாக்குட்டி வெற்றிவேலு மற்றும் திருமதி.பராசக்தி வெற்றிவேலு ஆகியோரின் மகனாவார்.

இவர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரி, யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் ஐக்கிய இராச்சியம் சென்று சட்டம் பயின்றார். பிரித்தானியாவில் படித்த போது அவர் மாணவர்களுக்கான தேசிய ஒன்றியம், இனவொதுக்கலுக்கு எதிரான முன்னணி போன்ற அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். வெளிநாட்டு இலங்கைத் தமிழர் முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளையின் தலைவராகவும் பணியாற்றினார்.

இலண்டனில் சட்டக் கல்வி :

சட்டக் கல்வியை முடித்து விட்டு நாடு திரும்பிய வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதனை தொடர்ந்து அவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி,
பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினராக யாழ்ப்பாணத்தில் முழு நேர அரசியலுக்குத் திரும்பினார்.

யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணியாக செயற்படும் போது தமிழ் தேசியத்துக்காக உழைத்த கட்சி உறுப்பினராக அரசியலில் மூழ்கத் தொடங்கினார். அவரது மனைவி சரோஜினி வேம்படி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து அவருக்கு நேரடியாக அரசியல் பணியில் ஈடுபடவில்லை என்றாலும் அவருக்கு முழு உதவியாக இருந்தார். யாழ்ப்பாணத்தில் வசித்த யோகேஸ்வரன் முக்கியமாக யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல்களில் முக்கியமாக கவனம் செலுத்தினார்.

நிறவெறி எதிர்ப்பு இயக்கம் :

இங்கிலாந்தில் சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோதும் வெற்றிவேலு யோகேஸ்வரன் இங்கிலாந்திலும் அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் தத்துவஞானியான லார்ட் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஆகியோருடன் நெருக்கமாக நிறவெறி எதிர்ப்பு இயக்க அரசியலில் பணியாற்றினார்.

அணுவாயுதக் குறைப்பு மற்றும் வியட்நாம் போருக்கு எதிர்ப்பு ஆகிய இரண்டு விடயங்களிலும் அங்கு யோகேஸ்வரன் பெர்ட்ரான்ட் ரஸ்ஸலுடன் அரசியல் பிரச்சார அமைப்பில் பங்கேற்றார். அத்துடன் மறைந்த யோகேஸ்வரன் லண்டனில் உள்ள தென்னாப்பிரிக்க கறுப்பின ஆர்வலர்களுடன் சகோதரத்துவமும் கொண்டிருந்தார். அவர் நிறவெறி எதிர்ப்பு இயக்க செயறரபாடுகளிலும் ஈடுபட்டார்என்று அறியப்பட்டது. யோகேஸ்வரன் லண்டனில் உள்ள ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் தன்னார்வத் தொண்டராகவும் பணியாற்றினார். மற்றும் ஆலிவர் டாம்போவுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவரும் ஆவார்.

1977 நாடாளுமன்றத் தேர்தல் :

இலங்கையின் 8வது நாடாளுமன்றத் தேர்தல் 1977 ஜீலை 21 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் தேசிய அரசுப் பேரவைக்கு 168 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாது மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தது. அவரது பொருளாதாரக் கொள்கை நாட்டில் தொழில் வளர்ச்சி கண்டிருந்தாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியவில்லை. அரசியலமைப்பின் படி 1975 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி நாடாளுமன்ரத்தின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீடிக்கப்பட்டது.

1970 தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத் தீர்வு காணப்படும் என அது உறுதி அளித்தது. திறந்த பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்ட இரண்டு கிலோகிராம் அரிசியை விட மேலதிகமாக எட்டு இறாத்தல் மாவும் இலவசமாக வழங்க அது உறுதி அளித்தது.

எதிர்க்கட்சியாக தமிழர் கூட்டணி :

இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதே வேளையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், முதற் தடவையாக தமிழர் கட்சி ஒன்று இரண்டாவது அதிகப்படியான 18 இடங்களைக் கைப்பற்றி 1977 நடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக வந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர ஆதரவாளரான யோகேஸ்வரன் கட்சியின் செயல் குழுவில் இணைந்து இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக செயற்பட்டார். யாழ்ப்பாணத் தொகுதியில் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 6,291 அதிகப்படியான வாக்குகளால் தமிழ் காங்கிரசில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட யோகேஸ்வரன் 9291 வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாணத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
வாக்கு முடிவுகள் பின்வருமாறு :
1. வெ.யோகேஸ்வரன்- 16,251
2. குமார் பொன்னம்பலம் – 6,960
3. ஏஎல் ஆபிரகாம்-4,349
4. சீ.மாட்டின் -900
5. ஏ.ஜி.ராஜசூரியர்-164
6. அ.தர்மலிங்கம் – 77
இத்தேர்தலில் யோகேஸ்வரன் அமோகமாக வெற்றி பெற்றார்.

அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி தமிழ், முஸ்லிம், சிங்களம் இனங்களைக் கொண்டதும், இத்தொகுதி கிறிஸ்தவ பெரும்பான்மையுடன் (43%) அடுத்த இடத்தில் இந்துக்கள் (41%) இருந்தனர். இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் 13% ஆகவும் பௌத்தர்கள் 3%. ஆக வடக்கின் மாவட்டத் தலைநகராக இருந்ததால் யாழ்ப்பாணம் தொகுதி மிகவும் மதிப்புமிக்க, கவனத்தைப் பெற்ற வாக்காளர் தொகுதியாக இருந்தது.

ஈடு செய்யப்பட முடியாத இழப்பு:

1983 ஜூலை கலவரங்களை தொடர்ந்து மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் யோகேஸ்வரன் யாழ்ப்பாணத் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த்தின் பின்னர் நாடு திரும்பினார்.

முன்னாள் யாழ் பாராளமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரன் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர். அக்காலத்தில் யாழ் எம்.பியாக தமிழ் இளைஞர்களின் பலத்த ஆதரவை யோகேஸ்வரன் பெற்றிருந்தார். துன்பியல் நிகழ்வாக 1989 ஜீலை 13 இல் அவரை இழந்த துயர நிகழ்வானது தமிழர்க்கு ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More