செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இலண்டனில் இருந்து தமிழ் முழங்கிய விமல் சொக்கநாதன் | கம்பீரக்குரல் இனி முழங்காதோ | ஐங்கரன் விக்கினேஸ்வரா

இலண்டனில் இருந்து தமிழ் முழங்கிய விமல் சொக்கநாதன் | கம்பீரக்குரல் இனி முழங்காதோ | ஐங்கரன் விக்கினேஸ்வரா

2 minutes read

 

நம்ப முடியவில்லை !! இந்தத் தகவல் உண்மையாக இருக்கக் கூடாது என மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்க, தகவல் மேல் தகவலாக இலண்டனில் இருந்து தமிழ் முழங்கிய விமல் சொக்கநாதன் விண்ணேவிய செய்தி மனதை நெருடியது.

பிபிசி தமிழோசையில் விமல்:

உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிபிசி வானொலியின் ஒலிபரப்பாளரும், தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் இலண்டன் மாநகரில் அகால மரணத்தைத் தழுவினார் என்ற செய்தி காற்றலைகளில் சோகமாக வந்தது.

எண்பதுகளில் போர் உக்கிரமடைந்த காலத்தில் பிபிசி தமிழோசையே ஒரே ஒரு நம்பகத்தன்மை கொண்ட வானொலியாக இருந்து வந்தது.போரின் நெருக்கடிகளிலும், மின்சாரமின்மை, மின்கலங்களுக்கு (பற்றரி) தடை என்பனவற்றுக்கு மத்தியிலும் சைக்கிள் டைனமோக்கள் மூலம் வானொலியை இயக்கி பி.பி.சி வானொலியை தமிழ் மக்கள் கேட்டுவந்தனர்.

தமிழோசையின் அப்போதைய பொறுப்பாளர் சங்கர் அண்ணா என அன்பாக அழைக்கப்படும் சங்கரமூர்த்தி, ஆனந்தி அக்கா என அன்பாக அழைக்கப்படும் மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம், விமல் சொக்கநாதன் ஆகியோர் அக்காலத்தில் மக்களின் பேரபிமானம் பெற்ற ஒலிபரப்பாளர்களாக இருந்தார்கள். இவர்களது குரலைக் கேட்க இரவு 9மணிக்கு வானொலியை சிற்றலை வரிசைக்கு திருப்புவது ஈழத்தமிழர்களது வழக்கமாகவிருந்தது.

1941ம் ஆண்டு மே 3ம் திகதி பிபிசி தமிழோசை ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் பதினைந்து நிமிட ஒலிபரப்பாகிவந்த தமிழோசை பின்னர் வாரத்தில் ஐந்து நாட்கள் நாளொன்றுக்கு அரை மணி நேரம் ஒலிபரப்பானது. இந்தியா, இலங்கை, மற்றும் கனடா போன்ற புலம்பெயர்நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வானொலி பிரபலமாக இருந்தது.

இலங்கை வானொலி அறிவிப்பாளர்:

ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். விமல் சொக்கநாதன் சிறந்த வானொலிக் கலைஞர். இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர்.

இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் பிபிசி தமிழோசையில் அறிவிப்பாளராக இருக்கும் இவரது குரல் பன்னாட்டு வானொலிகளிலும் ஒலித்தது.
அறிவிப்பாளரும், லண்டனில் “இசைக்குயில்” போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான யோகா தில்லைநாதன் இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார்.

இலங்கை வானொலியில் இவர் படைத்த இசையும் கதையும், வாலிப வட்டம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை கலந்து இவர் வழங்கிய களம் பல காண்போம் என்ற உலக அரசியல் ஆய்வு நிகழ்ச்சி பல அரசியல் தலைவர்களையே கவர்ந்தது. வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி “வானொலிக் கலை” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

ஈழ திரைப்படத்தில் விமல் நடிப்பு:

அத்துடன் விமல் சொக்கநாதன் வரணியூரானின் இயக்கிய பாசச்சுமை
எனும் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். அத்துடன் “நான் உங்கள் தோழன்”1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படத்திலும் விமல் சொக்கநாதன் நடித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டில் இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். நான் உங்கள் தோழன். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம் ஆகும்.

இதுவரையில் விமல் சொக்கநாதன் மூன்று நூல்களை எழுதியுள்ளார்.
வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி “வானொலிக் கலை” என்ற நூலை
சென்னையில் காந்தளகம் பதிப்பகம், மே 2007இல் வெளியிட்டது.

இதன் பின் மிக அண்மைக் காலத்தில் “லண்டனில் இருந்து விமல்” -வீரகேசரியில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூலும், “விமலின் பக்கங்கள்” – லண்டன் புதினம் வார இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூலையும் விமல் படைத்துள்ளார்.

இவ்விரு நூல்களும் லண்டன், பாரிஸ், சென்னை, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டு, நண்பர்களாலும் வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டவர் விமல் சொக்கநாதன். அறிவிப்பின் சிகரமாக, இலண்டனில் இருந்து தமிழ் முழங்கிய மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் 75 வயதில் நேற்று இலண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானார். தமிழ் வானத்தின் ஒலி அலை ஓய்ந்து, வண்ணக் குரல் இனி முழங்காதோ என மனம் ஏங்குகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More