செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை காபுலை தலிபான் கைப்பற்றி ஈராண்டு:  ஆப்கான் – வியட்நாம் ஆக்கிரமிப்பில் தோல்வியுற்ற அமெரிக்கா |ஐங்கரன் விக்கினேஸ்வரா

காபுலை தலிபான் கைப்பற்றி ஈராண்டு:  ஆப்கான் – வியட்நாம் ஆக்கிரமிப்பில் தோல்வியுற்ற அமெரிக்கா |ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் அறுபது உலட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா இராணுவம் , இறுதியில் காபுலை விட்டு முழுமையாக ஆகஸ்ட் 15, 2021 வெளியேறினர். ஆப்கானிய அப்பாவி மக்களின் தொடரும் அவலமாக, உலகம் அந்த மக்களுக்காக பரிதாபப்பட்ட நாளும் அன்று தான்.

ஆகஸ்ட் 15, 2021 அன்றுதான் தாலிபான் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனைத் தங்கள் வசம் மீண்டும் கொண்டு வந்தனர். நாட்டின் தலைநகரான காபூல் நகரமும் அவர்கள் கையில் வீழ்ந்த நாள்!

தலிபான் ஆட்சியில் கடந்த இரு ஆண்டு காலமும் துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் மூழ்கியிருந்தது என்பதை அங்கிருந்து வரும் தகவல்களின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர்.

அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை. அங்கு தற்போது வறுமையும், பசியும், நோயும் மட்டுமே மிஞ்சியுள்ளது.

அப்பாவி ஆப்கானிய மக்கள் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்னும் பரிதவிப்பே இந்த அவலத்திற்கு காரணம். தாலிபான்களின் முந்தைய ஆட்சி அவ்வளவு மோசமாக இருந்தது எனபதே இத்தனைக்கும் காரணம்.

நாட்டிலிருந்து தப்பித்தால் போதும் என விமான நிலையத்தை நோக்கி மக்கள் ஓடினார்கள். உள்ளூர் பேருந்தைப் போல விமானத்தைப் பாவித்து அடித்துப் பிடித்துக்கொண்டு ஏற முற்பட்டார்கள். விமானத்தின் இறக்கைகளில் தொற்றிக்கொண்டு செல்ல முயன்ற சிலர், கீழே விழுந்து மரணித்தார்கள்.

அறுபது இலட்சம் கோடி செலவு :

தாலிபன்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையும் 2011ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,10,000 பேரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

1996-2001 வரையிலான தலிபான்களது ஆட்சியில் நடந்த கொடூரங்கள் ஏராளம். தாங்கள் சந்தேகப்படும் நபர்களைப் பொது இடங்களில் வைத்துக் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள். தலையில் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல வகையில் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டன.

பெண்கள் பள்ளிக்குப் போகக் கூடாது. வேலைக்குப் போகக் கூடாது. வெளியில் செல்லும்போது ஆண் துணையுடன்தான் செல்ல வேண்டும்; அதுவும் முழுவதும் மூடிய பர்தாவுடன் செல்ல வேண்டும்… இப்படி நிறைய கட்டுப்பாடுகளை கொடூரமாக பிறப்பித்து இருந்தார்கள்.

தாலிபான் ஆட்சி :

தாடி வைத்திருப்பது அவசியம் என ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள். இவற்றை மீறினால் தண்டனைதான். தண்டனை என்பது கொலைதான். அதோடு, கடும் பஞ்சம், பட்டினி. தவிர, பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த உலைக்களமாக இருந்தது அந்நாடு.

உலகை அதிரவைத்த அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குல் அந்த காலகட்டத்தில்தான் நடந்தது. அங்கிருந்தபடிதான் இத்தாக்குதலைத் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் திட்டமிட்டதாக அமெரிக்கா இன்னமும் குற்றம் சாட்டுகிறது.

கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஆப்கான் நாடு பிளவுப்படாமல் தான் இருந்தது.
1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற பனிப் போர் தான் ஆப்கான் பிரச்சனையை பூதாகரமாக்கியது.

சோவியத் அமெரிக்க பனிபபோர் :

ஆப்கானில் டிசம்பர் 1979 – பெப்ரவரி 1989 வரையில் சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற பனிப்போரின் விளைவே முஜாஹிதீன்கள், தாலிபான்கள் உருவாக்கமாகும்.

சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாக ஆப்கானில் 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு காபுலில் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது.

இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரணமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் ஐக்கிய இராச்சியம், சவுதி அரேபியா, பாக்கித்தான், எகிப்து, சீனா ஆகிய நாடுகளும் ஆதரித்தன.

பொருளாதார பணம், ஆயுதம், போர் பயிற்சி என பல உதவிகளை இந்த நாடுகள் முகாசிதீகளுக்கு அளித்தன. இதனைத் தொடர்ந்து, இவர்களை ஒடுக்க உதவுமாறு ஆப்கன் சனநாயக குடியரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, சோவியத் ஒன்றியம் தனது 40வது படைப்பிரிவை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வைத்தது. இதுவே ஆப்கானில் சோவியத் போரின் ஆரம்பம் ஆகும்.

அமெரிக்கா உருவாக்கிய முஜாஹிதீன் :

இதன்பின்னர் 1989இல் ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றுவதற்காக முஜாஹிதீன்கள் என்ற தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாத படையை அமெரிக்கா உருவாக்கியது. மேலும், பிரித்தாளும் கொள்கையின் மூலம் ஆப்கானின் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் போன்ற பல்வேறு குழுக்களிடையே அமெரிக்கா பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தியது.

1989இல் சோவியத் படை வெளியேற்றப்பட்ட பிறகு, அமெரிக்கா தனது இருத்தலை குறைத்துக் கொண்டது. இதனையடுத்து, ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனையை தீர்ப்பதற்காக உருவானது தான் தாலிபான் அமைப்பு.

2010 – 2012 காலத்தில், ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளைக் கொண்டிருந்த காலத்தில், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வரை செலவழித்தது அமெரிக்கா என தகவல்கள வெளியாகி உள்ளன.

இருபது ஆண்டுகள் அங்கே இருந்த அமெரிக்கா அந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்தது? எந்த தாலிபான்களை ஒடுக்க அங்கே சென்றதோ அதே தாலிபான்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டது என்பதே உண்மையாகும். 2001 பிற்பகுதியில் தாலிபான் மீதான போரில் இறங்கியது அமெரிக்கா. மலைப் பகுதிகளில் தாலிபான்கள் பதுங்க, புதிய அரசு அமைந்தது.தொடர்ந்து தாலிபான்களை அழிக்கும் நடவடிக்கைகளில் இருபது ஆண்டுகளாக அமெரிக்கா ஈடுபட்டு தோல்வியே கண்டது.

வியட்நாமிய தோல்வி :

வியட்நாமில் அடைந்த தோல்வி போல, ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் 2021 ஆகஸ்டில் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து 2021 ஆகஸ்ட் 15இல் தாலிபான்கள் மீண்டும் ஆப்கனைத் தங்கள் வசம் கொண்டுவந்தார்கள். செப்டம்பர் மாதம் தங்களது ஆட்சியை தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக நிறுவினார்கள்.

பிரதமராக முல்லா ஹசன் அகுந்த், துணைப் பிரதமர்களாக முல்லா அப்துல் கனி பரதர், முல்லா அப்துல் சலாம், பாதுகாப்புத்துறை அமைச்சராக முல்லா முகம்மது யாகூப் பதவியேற்றனர். மொத்தம் 19 பேரை உள்ளடக்கிய ஆப்கன் அரசு பதவியேற்றது.

இன்று ஆப்கானிஸ்தான் இருக்கும் நிலைக்கு அமெரிக்காவும் அதன் ஆப்கன் போரை ஆதரித்த நாடுகளும் தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஆப்கானில் தொடரும் அவலம் :

தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, ‘கடந்த ஆட்சி போல் இருக்காது. கடும் தண்டனைகள் இருக்காது; பெண்களை அடிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் இருக்காது’ என ஏகப்பட்ட உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.

அதையெல்லாம் உள்நாட்டு மக்களோ உலக மக்களோ நம்பவில்லை. அந்த அவநம்பிக்கையத் தாலிபான்களும் காப்பாற்றினார்கள். மீண்டும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் நடைமுறைக்கு வந்தன. 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டனர்.

அது மாத்திரமன்றி ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் தலைகாட்டவே கூடாது. அப்படிச் சென்றாலும் முகம் உள்ளிட்ட முழு உடலையும் மறைத்துச் செல்ல வேண்டும். பெண்களுக்குக் கல்வியும் பணிசெய்யும் உரிமையும் மீள மறுக்கப்பட்டன.

மனித உரிமைகள் ஆப்கன் மக்களுக்கு இல்லையா என்பது போலவம், அங்கு நடக்கும் அடக்குமுறைகளை உலகம் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ? ஆப்கன் மக்களுக்கு விடிவு எப்போது வரும்? என்றே பலரதும் கேளவிக் குறியாக உள்ளது.

தலிபான்களின் இன்னொரு சட்டம், பெண்களை மேலும் இறுக்கி உள்ளது. விமானப் பயணத்தின் போது மட்டும் பெண்கள் தனியாக செல்லலாம் என விலக்கு கொடுத்திருந்தனர் தாலிபான்கள். இப்போது அதற்கும் தடை. இனி ஆண்களின் துணையோடுதான் பெண்களுக்கு விமானப் பயணம் என உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

பெண்களுக்கு கல்வி தேவையில்லை :

ஆக கொடூரமாக பெண்களுக்கு கல்வி என்பதே தேவையில்லை’ என் தாலிபான்கள் அறிவித்த போது, 13 வயதான அடீபா ஹைதரி என்ற சிறுமி கதறியது நினைவுக்கு வருகிறது. அவர், “தாலிபான் இம்முறை தங்களது மத சட்டத்தில் பல்வேறு முற்போக்கான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக கூறினார்கள். பெண் கல்விக்கு இம்முறை தடை இல்லை என்றார்கள். அந்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றவில்லை.

நான் மட்டுமல்ல என்னுடன் படிக்கும் சக மாணவிகளும் தாலிபான்கள் மாறிவிட்டனர் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் இன்னும் திருந்தவில்லை” என்றார் அழுதபடியே.
ஆப்கனில் தாலிபான்கள் அடக்குமுறையை, உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது; இதைக் காலம் கவனித்துக்கொண்டே இருக்கிறது என்பதே கவலைக்கு உரியதாகும்.

தலிபான் ஆட்சியில் கடந்த இரு ஆண்டு காலமும் துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் மூழ்கியிருந்தது என்பதை அங்கிருந்து வரும் தகவல்களின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே அதிகமாக நிறைந்துள்ளது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More