ஈழத்து இனமுரண்பாடுகளினால் தங்கள் வாழ்வை புலம்பெயர்நாடுகளில் களம் அமைத்துக்கொண்ட எழுத்தாளர்களுள் திருமதி.தனபாக்கியம் குணபாலசிங்கமும் அவர்களும் ஒருவர். அலைக்கழிக்கும் வாழ்வியற்சூழலுக்குள் தன்னை நிலைநிறுத்தி நேர்கொண்ட உறுதியுடன் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைக்குள் நின்றுகொண்டே நிதானமாக சாதித்த பெண்ணாக நம்முன் வாழ்ந்தவர்.
ஈழத்து யாழ்ப்பாணம் கரவெட்டி எனும் அழகிய கிராமத்தில் பிறந்திருந்தாலும்(04/05/1941)தன் கல்வி, தொழில், ஆய்வு நிமித்தம் மட்டக்களப்பு, கொழும்பு, சென்னை என நகர்ந்து இங்கிலாந்தில்(ஈஸ்ட்ஹாம்) பதியம் இட்டுக்கொண்டார்.ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்து பேராதனைப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது இளங்கலைமாணி(சிறப்பு), முதுகலைமாணி பட்டங்களைப் (சமஸ்கிருதம்,தொல்லியல்,இந்துகலாச்சாரம்) பெற்றார்.அதே சமயம் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை (1966- 1968)பிரதான பாடமாக கற்பித்தார்.பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகம்(இந்து பண்பாடு- 1969 1979),களனி பல்கலைக்கழகம்(தொல்லியற்றுறை- 1976- 1979)விரிவுரையாளராகவும்,பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமைபுரிந்துள்ளார்.
தான் கற்ற கல்வியின் மீதும்,தமிழரின் பூர்வீகம் குறித்த ஆய்வின் மீதான கரிசனையும் அவரை எழுத்தாளராக்கியது.பல பத்திரிகைகளிலும்,ஆய்வரங்குகளிலும் எழுதவும், வாசிக்கவும் தயார்படுத்தியதின் விளைவே அவரின் படைப்புக்களும், அவரை நம்மிடை மேன்மையாகவும் நிலைநிறுத்திக்கொண்டது.
கண்டிப்பு நிறைந்த அன்பை வெளிப்படுத்தும் ஆற்றல்நிறைந்தவர். இங்கிலாந்தில் ஈழத்து நூல்களின் கண்காட்சியினை தொடர்ந்து நடத்தியபோது கலந்து சிறப்பித்ததோடு மாத்திரமல்ல அதனை இவரின் படைப்புக்கள் இந்துநதி(கிழக்குப் பல்கலைக் கழகம்), பண்பாடு(இந்து சமய கலாச்சார அமைச்சு-கொழும்பு), கலசம்(இலண்டன்), உலக சைவப் பேரவை மாநாட்டு சிறப்பு மலர்-(பிரான்ஸ்1999),அனைத்துலக சைவ மாநாட்டு மலர்(இலண்டன் 1999), சிறிமுருகன் கோவில் மகாகும்பாபிகேச மலர்(இலண்டன்.2005.), குவியம்(கனடா), வடலி(லண்டன்), களத்தில்(லண்டன்) ஆகிய அச்சூடகங்களில் வெளிவந்துள்ளன.
இங்கிலாந்தில் நம்மால் நடத்தப்பட்ட ஈழத்து நூல்களின் கண்காட்சிக்கு முழுமையான ஆதரவை நல்கியதோடு, அதனை வியந்தும் வடலி போன்ற இதழ்களில் எழுயிருந்தமை குறிப்பிடத்தக்கது
கலை இலக்கியங்களின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தாலும் ஆய்விலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தமை அவரின் நூல்களே சாட்சி..அவரின் அனைத்து நூல்கள் அனைத்தும் ஈழத்துக்குக் கிடைத்த ஆவணமாகவே கருதவேண்டும்.இளவயதில் சில கவிதைகள்,கதைகள் எழுதியதாக ஒருமுறை சொல்லியிருந்தார். அவற்றை சேகரித்திருக்கவில்லை போலும். அவரின் நூல்களாக வங்க இளவரசன் விஜயன் வரலாறும்,இலங்கையிற் சிங்கள இன மொழி எழுத்துத் தோற்ற வளர்ச்சி நிலைகளும்- (1989), இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிட கலாச்சாரமும்-( 2001),சைவ சித்தாந்தமும், விஞ்ஞான உலகமும்- (1990),மட்டக்களப்பு மான்மியம்-ஒரு ஆராய்ச்சி- (1993), பின்பற்றப்பட வேண்டிய சைவசமய தத்துவங்கள் – (2007),தமிழகப் பூர்வீக வரலாறும்,அரிய செய்திகளும்- (2008),The Stories of Moral Teachings(-2009), பிராணிகள் கூறும் அறிவியற் கதைகள்(2009), ஆசிய, ஆபிரிக்க. ஐரோப்பிய இனங்களின் தனித்துவமான வரலாறு-தொகுதி 1- ( 2009),ஆசிய,ஆபிரிக்க,ஐரோப்பிய இனங்களின் தனித்துவமான வரலாறு-தொகுதி2- (2009), குமரிக்கண்டம் முதல் சுமேரியா வரை தமிழர் வரலாறுகள்-ஆய்வு- (2011),குமரிக் கண்டம் முதல் சுமேரியா வரை தமிழர் வரலாறுகள்- (2012),கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்- (2013),ஒரு எழுத்தாளரின் அரைநூற்றாண்டு வாழ்க்கை அனுபவங்கள் – (2016),மனித வரலாற்றினை எழுதிவரும் மரபணுக்கள்(மீளாய்வு)( 2018),வரலாற்றில் தமிழகமும் ஈழமும் (-2018),தமிழ்!தமிழ்!!தமிழ்!!! – (2019), நமக்குக் கிடைத்திருக்கின்றன. மேலும்,தமிழகமும்,பூர்வீகமும்(சில துளிகள்), வரலாறு ஒரு இனத்தின் முதுகெலும்பு ஆகிய ஆய்வு நூல்களையும் வெளியிடத்திட்டமிட்டிருந்தார். ஈழத்தமிழர்களுக்கான நூலகம் வேண்டும் என்கிற நமது கனவை செயல்படுத்தும்படியும் தன்னாலான உதவிகளைச் செய்வேன் என்றும் கூறியிருந்தார். பல காரணங்களினால் அது நடைபெறவில்லை என்பதையும் உணர்ந்திருந்தார். தனது சேகரிப்பில் இருந்த நூல்கள் அனைத்தும் அழிந்துவிட்ட துயரமும் அவரிடமும் இருந்தது.
நூல்கள் பற்றிய தேடல், ஆர்வம் கொண்டவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்துமுள்ளார்.
இங்கிலாந்தில் ஆர்வமுள்ள மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும், தமிழ்ப்பாடசாலைகளின் கலை இலக்கியப்போட்டிகளில் குறிப்பாக திருக்குறள் மனனப்போட்டிகளில் நடுவராகக் கலந்து சிறப்பிப்பதிலும் தன் பங்களிப்பைச் செய்வதில் பின்னின்றதில்லை. மேலும், இங்கிலாந்தில் இயங்கும் நியூஹாம் மொழிபெயர்ப்பு அமைப்பில் 2001 முதல் 2007 வரையான காலப்பகுதியில்வாய்முறை மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அதிகமான நேரங்களை ஆய்விலேயே செல்விட்டமையினால்தான் நிறைய எழுதவும் முடிந்திருக்கிறது.
இவரின் ‘சைவசித்தாந்தமும், விஞ்ஞான உலகமும்’நூலுக்காக இலங்கை சாகித்திய மண்டல விழாவில்(1990) சிறந்த மெய்யியல் நூலுக்கான பரிசினைப்பெற்றார்.
மேலும்,இலங்கையிற் தொல்லியல் ஆய்வுகளும்,திராவிடக்கலாச்சாரமும்’ எனும் நூல் சிறந்த வரலாற்றியல் நூலாக கொழும்புஇந்து கலாச்சாரத்துறை(1992) தெரிவுசெய்து பத்தாயிரம் இலங்கை ரூபாயும் பரிசளித்துக் கௌரவித்தது.
சிறந்த ஆக்க இலக்கியத்திற்கான பரிசினை(பரிசுக் கேடயம்) வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சினாலும்,சிறந்த ஆய்விலக்கியத்திற்காக திருகோணமையில் நடைபெற்ற இலக்கியவிழாவில் ‘இலக்கிய வித்தகர்’பட்டத்துடன் இலங்கை ரூபாய் பத்தாயிரமும் வழங்கி கௌரவித்ததும் தனது வாழ்வில் கிடைத்த பெரும்பேறு என்றே கருதியிருந்தார்.
நமது ஈழத்தில் நடைபெற்ற சமகால வரலாற்று நிகழ்வுகளை சரிவர ஆய்வுடன் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தமை அவருடன் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஈழத்து ஆய்விலக்கியதிற்கு ஆற்றிய பணி மகத்தானது. இவ்வாறான பணியினை மேற்கொண்ட ஈழத்து அறிஞர்களுடன் இவரின் பங்களிப்பும் இணைந்தே பார்க்க, படிக்கவேண்டிருக்கிறது.வரலாற்றுத்திரிபுகள் காலச்சூழல் ஏற்படுத்தும் என்கிற அச்சம் பலருள் இருப்பது உண்மைதான். ஆனால் திருமதி.தனபாக்கியம் அவர்களின் நூல்கள் வரலாற்றைச் சரிவரச் சொல்லிசென்றிருக்கிறது. இன்று அவர் நம்மிடையே இல்லை (12/12/2021)என்பது நமக்கு பேரிழப்புத்தான். எனினும்,அவர் விட்டுச்சென்ற ஆய்வினை வருங்கால ஆய்வாளர்கள் தொடர்ந்தெடுத்துச் செல்வதே அவருக்காக நாம் செய்யும் கைம்மாறு.அவரின் நினைவை, அவரின் களப்பணியை காலமுள்ள காலம் முழுதும் நினைவுகூறி அஞ்சலிப்போம்.
முல்லைஅமுதன்
14/11/2022
பெயர்: தனபாக்கியம். குணபாலசிங்கம்.
புனைபெயர்: திருமதி தனபாக்கியம். குணபாலசிங்கம்.
பிறந்த இடம்: கரவெட்டி
பிறந்த திகதி: 16.05.1941
கல்வி:
இளம்கலைமாணி-சிறப்பு-சமஸ்கிருதம்,தமிழ்-
(பேராதனைப் பல்கலைக்கழகம்-1962-1966)
முதுகலைமாணி-பூர்வீக வரலாறும் தொல்லியலும்
(சென்னைப் பல்கலைக்கழகம்-1973-1975)
தொழில்:
உதவி விரிவுரையாளர்-சமஸ்கிருதம்-பேராதனைப் பல்கலைக்கழகம்1966-1968
விரிவுரையாளர்-இந்துப் பண்பாடு-கொழும்புப் பல்கலைக்கழகம்1969-1979
பகுதி நேர விரிவுரையாளர்-தொல்லியற்றுறை -களனிப் பல்கலைக்கழகம்-1976-1979
வாய்முறை மொழிபெயர்ப்பாளர்-நியூஹாம்-மொழி பெயர்ப்பு அமைப்பு-2001-2007
படைப்புகள் வெளிவந்த சஞ்சிகைகள்,பத்திரிகைகள்:
இந்துநதி(கிழக்குப் பல்கலைக் கழகம்)
பண்பாடு(இந்து சமய கலாச்சார அமைச்சு-கொழும்பு.
கலசம்-இலண்டன்
உலக சைவப் பேரவை மாநாட்டு சிறப்பு மலர்-பிரான்ஸ்-1999.
அனைத்துலக சைவ மாநாட்டு மலர்-இலண்டன்-1999.
சிறிமுருகன் கோவில் மகாகும்பாபிகேச மலர்(இலண்டன்)2005.
குவியம்-கனடா
வடலி
களத்தில்
பரிசுகள்,விருதுகள்:
*இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாச்சாரமும்
-சிறந்த வரலாற்றியல் நூல்-கொழும்பு இந்து கலாச்சாரத் துறை-1992.பத்தாயிரம் பண முடிச்சு.
-சிறந்த ஆக்க இலக்கியத்திற்கான பரிசு-வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி விளையாட்டுத்துறை அமைச்சு-பரிசுக்கேடயம்.
*சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்.
சிறந்த மெய்யியல் நூல்-தமிழ் சாகித்திய விழா(1990)
‘இலக்கியவித்தகர்’-பட்டம்
பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பு
சிறந்த ஆய்விலக்கிய பரிசு-இலக்கியவிழா1992-திருகோணமலை.
நூல்கள்:
வங்க இளவரசன் விஜயன் வரலாறும்,இலங்கையிற்
சிங்கள இன,மொழி எழுத்துத் தோற்ற வளர்ச்சி நிலைகளும்-1989
இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிட கலாச்சாரமும்-2001
சைவ சித்தாந்தமும், விஞ்ஞான உலகமும்-1990
மட்டக்களப்பு மான்மியம்-ஒரு ஆராய்ச்சி-1993
பின்பற்றப்பட வேண்டிய சைவசமய தத்துவங்கள் – 2007
தமிழகப் பூர்வீக வரலாறும்,அரிய செய்திகளும்- 2008
The Stories of Moral Teachings-2009
பிராணிகள் கூறும் அறிவியற் கதைகள்- 2009
ஆசிய,ஆபிரிக்க.ஐரோப்பிய இனங்களின் தனித்துவமான வரலாறு-தொகுதி 1- 2009
ஆசிய,ஆபிரிக்க,ஐரோப்பிய இனங்களின் தனித்துவமான வரலாறு-தொகுதி2- 2009
குமரிக்கண்டம் முதல் சுமேரியா வரை தமிழர் வரலாறுகள்-ஆய்வு-2011
குமரிக் கண்டம் முதல் சுமேரியா வரை தமிழர் வரலாறுகள்- 2012
கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்- 2013
ஒரு எழுத்தாளரின் அரைநூற்றாண்டு வாழ்க்கை அனுபவங்கள் – 2016
மனித வரலாற்றினை எழுதிவரும் மரபணுக்கள்(மீளாய்வு) 2018
வரலாற்றில் தமிழகமும் ஈழமும் – 2018
தமிழ்!தமிழ்!!தமிழ்!!! – 2019
வெளிவர இருக்கும் நூல்கள்:
தமிழகமும்,பூர்வீகமும்(சில துளிகள்)
வரலாறு ஒரு இனத்தின் முதுகெலும்பு
மரணம்:12/12/2021