மாறுகிறதா மத்திய கிழக்கின் போர்வலு ?
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஹமாஸ் கடந்த சனி இஸ்ரேல் மீது இருபதே நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டை, மட்டுமின்றி உலகையே அதிரச் செய்துள்ளது)
மொசாட் இஸ்ரேலின் உளவுத்துறை மட்டுமன்றி, உலகின் சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் மொசாட் ஆகியவற்றையே ஏமாற்றி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு.
மொசாட்டை திணரடித்த தாக்குதல் :
பாலஸ்தீனப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு ஆயுதக் போராட்டக் குழுக்களில் மிகப் பெரிய அமைப்பே ஹமாஸ். கடந்த சனி இஸ்ரேல் மீது இருபதே நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டை, மட்டுமின்றி உலகையே அதிரச் செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பல இடங்கள் பற்றி எரிந்தன. ஹமாஸ் தாக்குதலுடன், ஆயுதக் குழுவினரும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளதால், 2021-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கே மீண்டும் பெரிய அளவிலான போர் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் அதிநவீன ராணுவத்தை கட்டமைத்துள்ள இஸ்ரேலை அவ்வப்போது நிலைகுலையச் செய்யும் ஹமாஸ் அமைப்பினரின் இத்தாக்குதல் எவராலும் கணிப்பிட முடியாமல் போனது.
இஸ்ரேல் தனி நாடு உருவாக்கம்:
பத்து மில்லியன் மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடு. இஸ்ரேல் மீது பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இருந்த போதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாக கூற முடியாது.
1948 மே 14இல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில் 74% பேர் யூதர்கள் மற்ற 20.8% பேர் அரேபியர்கள் ஆவர். உலகில் பல படித்த அதிக மேதாவிகள் இங்கு தான் உள்ளனர். உண்மையில் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரம் மிக்கவர்கள் இஸ்ரேல் நாட்டினர் என்றே கூறலாம்.
மொசாட் உருவான கதை:
பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தில் ஆட்சி புரிந்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கே அதிகமாக வாழ்ந்தவர்கள் அரேபியர்கள். யூதர்களின் எண்ணிக்கை மிக குறைவே. அப்போது இருந்து அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் மறைமுகமாக போர் நடந்துக் கொண்டு தான் இருந்தது.
அரேபியர்கள் தங்கள் நாட்டில் யூதர்கள் வாழ்வதை விரும்பவில்லை. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் அரசு யூதர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உதவியது. உலகம் முழுவதும் வாழ்ந்த யூதர்கள் ஒரு காலக்கட்டத்தில் இஸ்ரேலை நோக்கி வர துவங்கினர்.
ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சியில் நாஜி படையின் மூலம் யூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அப்போது
ஹிட்லரிடமிருந்து யூதர்களை காப்பாற்ற இஸ்ரேல் மக்கள் எந்த அளவு வேண்டுமானாலும் முயற்சி செய்ய தயாராக இருந்தனர். அவர்கள் மிகப்பெரிய செலவில் கப்பல்களை வாங்கினர்.
ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் வருவது அந்த சமயத்தில் மிக இக்கட்டான ஒரு சூழலே. ஒரு புறம் நாஜி படைகள் யூதர்களை தேடி கொண்டிருக்க மறுபுறம் பிரிட்டிஷ் அரசும் யூதர்கள் பெரும் அளவில் வந்து குடியேறுவதை விரும்பவில்லை. இதற்கு பின் உலகில் வாழ்ந்த யூத மக்களை ஒன்றிணைந்து கொண்டு வர வைக்க அமைக்கப்பட்ட ஒரு ரகசிய குழு தான் இந்த உளவு அமைப்பு. இந்த உளவு அமைப்பின் பெயர் மொசாட் லிஅலியா பெட்.
காலமாற்றத்தில் இந்த அமைப்பு மொசாட்டாக வளர்ச்சி அடைந்தது. இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் அனைத்து தகவல்களும் மொசாட்டின் தலைமையகத்துக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும். உலகின் மிகப் பெரிய உளவு அமைப்புகள் சி.ஐ.ஏ. மற்றும் எம்.ஐ.6 க்கு அடுத்த இடத்தில் மொசாட் உள்ளது.
சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை
இஸ்ரேல் மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் சிறியதொரு நாடு, ஆனால் ராணுவத்தில் உளவு துறையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடி இஸ்ரேல் தான்.
உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளுக்கும் முன்னோடி என்றே கூறப்படுகிறது இந்த இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பை. உலகிலேயே மிக திறமையான மற்றும் அதிபயங்கரமானதாக அனைவராலும் கருதப்படும் உளவு அமைப்பு மொசாட். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை தான் மொசாட். ஆனால் அமெரிக்காவிடம் தான் பயிற்சி பெற்றது மொசாட் ஆனால் இப்போது அமெரிக்கா சி.ஐ.ஏ.வே ஆச்சரியப்படும் அளவிற்கு மொசாட் வளர்ந்து உள்ளது.
இஸ்ரேலுக்கு எதிர் காலத்தில் எதிரி ஆவான் என்று மொசாட் யாரையாவது எண்ணினால் ஆரம்பத்திலேயே அந்த அமைப்பை அழித்து விடும். 1972ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் வீரர்கள், பயிற்சியாளர்கள் 11 பேர் பாலஸ்தீன போராளிகளால் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பழிவாங்கி விட்டுதான் இஸ்ரேல் அமைதியானது.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டில் இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் மேற்கொண்ட ரகசிய படுகொலை வேட்டையின் பெயர் Operation Wrath of God. இஸ்ரேல் மிகச் சிறிய நாடாகவே இருந்த போதிலும் அந்த சிறிய நாட்டை பார்த்து பொருளாதாரத்திலும் மக்கட்தொகையிலும் மிகையாக இருக்கும் மேற்குலக நாடுகள் கூட பயப்படுகிறது என்றால் அதற்கு மிக மிக முக்கிய காரணம் மொசாட்.
இஸ்ரேல் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் கூட எந்த நேரமும் தன்னை அழிக்க காத்துக் கொண்டிருக்கும் அரபு தேசங்கள் மத்தியில் மிகச் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் படைப்பலம்:
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த காசா தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இஸ்ரேலை ஹமாஸ் அமைப்பு காசாவில் நுழைய விடாமல் தடுத்து வருகிறது.
இதனால் காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கும் நிலையில் ஹமாஸ் தடையாக உள்ளது. அத்துடன் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த சனி (7/10/23) திடீரென்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் பாராசூட்டில் ஹமாஸ் தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மொசாட் vs ஹமாஸ்
இதையடுத்து போர் தொடங்கி உள்ளதாக கூறி இஸ்ரேல் படையினர், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். காசா பகுதிக்குள் நுழைந்து வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தற்போது போர் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை இருதரப்பினரையும் சேர்த்து 1300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் போர் உக்கிரமடைய உள்ளது.
அதாவது ராணுவம், விமானப்படை, கப்பற்படையை பொறுத்தமட்டில் இஸ்ரேல் மிகவும் வலுவாக உள்ளது.
இஸ்ரேலில் ராணுவ வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். புதிய தொழில்நுட்பங்களுடன் பல பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேல் கைவசம் வைத்துள்ளது. நவீன உபகரணங்கள், சிறந்த உளவுத்துறை அமைப்பை இஸ்ரேல் வைத்துள்ளது. அதோடு அதிநவீன போர் விமானங்கள் உள்ளன.
அதாவது (IDF)ஐடிஎப் எனும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை என்பது தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையை ஒருங்கிணைத்துள்ளது. மேலும் இஸ்ரேலை பொறுத்தமட்டில் கட்டாய ராணுவ சேவை என்பது நடைமுறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான ஆண்கள் ராணுவம், ஆயுத பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். மேலும் உலகில் மிகச்சிறந்ததாக கருதப்படும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ‛அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டம்’ அமைப்பை இஸ்ரேல் வைத்துள்ளது.
ஏவுகணை பாதுகாப்பு கொண்ட இராணுவம்:
அதேபோல் டேவிட் ஸ்லிங் மற்றும் அரோ போன்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை இஸ்ரேல் கைவசம் வைத்துள்ளது. கடற்படையை பொறுத்தமட்டில் ஏவுகணை தாங்கும் கப்பல், நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் வைத்துள்ளது.
ஆனால் இஸ்ரேலை ஒப்பிடும்போது பாலஸ்தீனத்தின் படைப்பலம் என்பது ஒருங்கிணைந்ததாக இல்லை. காசாவில் ஹமாஸ் படையும், மேற்கு கரைப்பகுதியில் பாலஸ்தீனத்தின் படையும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் சில துணை ராணுவப் படைகள் இருந்தாலும் பயிற்சி, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பார்த்தால் இஸ்ரேலை ஒப்பிடும்போது பாலஸ்தீனத்தின் படை பின்தங்கி உள்ளது.
இதுதவிர இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுடன் நல்ல உறவை வைத்துள்ளது. அமெரிக்காவும் கூட தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக தான் உள்ளது. பாலஸ்தீனம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு மேலை நாடுகளின் ஆதரவு இல்லை. குறிப்பிட்ட சில முஸ்லிம் நாடுகள் மட்டுமே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உள்ளன.
மேற்கூறிய இந்த விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால் பாலஸ்தீனத்தை ஒப்பிடும்போது ராணுவ பிரிவில் இஸ்ரேலின் கை ஓங்கி உள்ளது. ஆயினும் இஸ்ரேலின் முக்கிய உளவு அமைப்பை மீறி அவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதோடு, இஸ்ரேலின் முக்கிய படை தளபதியான ‘நிர்மோத் அலோனியை ஹமாஸ் தீவிரவாதிகள் போரக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.
இவர் தான் காசாவின் கட்டுப்பாட்டு படைப்பகுதித் தலைவராகவும் சில காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது இஸ்ரேலுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மொசாட் ஏமாற்றி தாக்குதல் நடத்திய ஹமாஸ்:
ஹமாஸ், இந்தப் பெயர் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் அரேபியச் சுருக்கத்தில் இருந்து பெறப்பட்டது. மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய முயற்சிக்கு எதிரான முதல் பாலஸ்தீன எழுச்சி தொடங்கிய பிறகு 1987-ஆம் ஆண்டில் உருவானது ஹமாஸ். இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என இதன் சாசனம் கூறுகிறது.
ஹமாஸ் இரு வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஒன்று இஸ் அட்-டின் அல்-காசம் என்ற தனது ராணுவப் பிரிவின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவது. மற்றொன்று நலத்திட்டங்கள் மூலம் சமூகப் பணிகளைச் செய்வது.
ஹமாஸ் அரசியல் நடவடிக்கைகள்:
2005-ஆம் ஆண்டில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் இயக்கம் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியது. 2006-ஆம் ஆண்டு நடந்த பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. கூட்டணி அரசிலும் பங்கேற்றது. அதிபர் முகமது அப்பாஸின் ஃபதா இயக்கத்தைப் பகைத்துக் கொண்டதால் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டு காசாவுக்குள் முடங்கியது.
அதன் பிறகு இஸ்ரேலுடன் மூன்று பெரிய போர்களில் காசா பகுதியில் ஈடுபட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே அடைபட்டிருக்கும் காசா பகுதிக்குள் ஹமாஸ் இயக்கத்தை தனிமைப்படுத்துவதற்காகவும் தாக்குதல்களைத் நிறுத்தவதற்காகவும் இஸ்ரேல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இரண்டாவது பாலஸ்தீன எழுச்சி:
இரண்டாவது பாலஸ்தீன எழுச்சியின் தொடக்க ஆண்டுகளில் ஹமாஸ் இயக்கத்தின் தற்கொலைத் தாக்குதல்களை பாலஸ்தீனர்கள் பரவலாக ஆதரித்தனர். அவற்றை தியாக நடவடிக்கைகள் என்று அவர்கள் கருதினார்கள். மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பழிவாங்கப்படுவதாக எண்ணினார்கள்.
2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹமாஸ் மதத் தலைவர் ஷேக் அகமது யாசின் மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அப்துல் அஜீஸ் அல்-ரேன்டிஸ்ஸி ஆகியோரை ஏவுகணைகள் மூலம் கொன்றது இஸ்ரேல்.அதே ஆண்டில் ஃபதா இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத் மரணமடைந்தார்.
அதன்பின் பாலஸ்தீன நிர்வாகத்துக்கு முகமது அப்பாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கருதக்கூடியவர் அவர்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் வெற்றி:
2006-ஆம் ஆண்டு நடந்த பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஃபதா இயக்கத்துக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் அதிகார மோதல் தொடங்கியது.
தேர்தலில் வெற்றிபெற்றிருந்த ஹமாஸ் இயக்கம், அதற்கு முன் பாலஸ்தீன நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்டிருந்த அனைத்து உடன்பாடுகளையும் எதிர்த்தது. இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிப்பது உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.
இஸ்ரேல் என்றொரு நாட்டை அங்கீரிப்பதாயில்லை. ஆனால் காசா, மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதை ஒப்புக் கொண்டது.
ஹமாஸின் சண்டை, யூதர்களுக்கு எதிரானதல்ல, “ஸியோனிச ஆக்கிரிப்பாளர்களுக்கு” எதிரானது என்கிறது ஹமாஸின் புதிய ஆவணம். ஆனால் இஸ்ரேல் இதை ஏற்கவில்லை. உலகை ஏமாற்றும் முயற்சி என்று விமர்சித்தது.
அரசியல் – பொருளாதாரத் தடைகள்:
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலும் அதற்கு ஆதரவான மேற்கு நாடுகளும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
2007-ஆம் ஆண்டு காசா நிலப் பகுதியில் இருந்து ஃபதா இயக்கத்துக்கு ஆதரவான படைகளை ஹமாஸ் இயக்கம் வெளியேற்றியது. பதிலடியாக காஸாவின் எல்லைகளில் தடைகளைக் கடுமையாக்கியது இஸ்ரேல். ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது. இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் அனைத்து ராக்கெட் தாக்குதல்களுக்கும் ஹமாஸ் இயக்கமே காரணம் என்கிறது இஸ்ரேல். இதுவரை காசா பகுதிக்குள் மூன்று முறை ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொண்டிருக்கிறது.
2014-ஆம் ஆண்டில் இருந்து அவ்வப்போது சண்டைகள் தொடங்குவதும் எகிப்து, கத்தார், ஐ.நா. போன்றவற்றின் தலையீட்டில் நிறுத்தப்படுவதுமாக பலமுறை நடந்திருக்கிறது. முழு அளவிலான போர் எதுவும் வெடிக்கவில்லை.
காசா பகுதியைச் சுற்றி கடுமையான தடைகளை இஸ்ரேல் விதித்திருந்தாலும், ஹமாஸ் இயக்கம் காசாவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ராக்கெட்டின் வலிமையையும் அதிகரித்திருக்கிறது. ஃபதா இயக்கத்துடனான அமைதி முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன.
அதே நேரத்தில் காசா பகுதியில் வசிக்கும் சுமார் 20 லட்சம் பாலத்தீன மக்களின் நிலைமை மோசமடைந்திருக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. குடிநீர், மின்சாரம், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பாரிய அழிவின் விளிம்பில் போருக்கு முகங்கொள்ள அப்பாவி பாலஸ்தீன மக்களும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா