33
( கற்சிலைமடு மூங்கில் மரக் காடுகளில் புகுந்து, ஒவ்வொரு மரத்தின் நுனியிலும் கருங்கற்களைக் கட்டி, அதன் நுனியை பின்புறமாகக் கயிறு மூலம் இழுத்து வேறொரு மரத்தில் கட்டியிருந்தனர். ஆங்கிலேயப் படை வரும் நேரமாகப் பார்த்து கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட மூங்கில் மரங்கள் நிமிர்ந்து கற்கள் எகிறி விழுந்தன. கொரில்லாப் போரின் முன்னொடியான மாவீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது நினைவு நாள் 31/10/1811 அன்றாகும்)
ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராய் பண்டார வன்னியன் நடத்திய வெற்றிகளின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் ஈழத்தமிழரின் போராட்டம் சாதித்த வெற்றியும் 1996இல் மீள நிறுவப்பட்டது.
முல்லைப் பெரு வெற்றி:
தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகால வெற்றிக்கு குறியீடாய் நிறுத்த ஓயாத அலைகள் ஒன்று சாட்சிப்படுத்தியது.
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள இரண்டாயிரம் சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.
அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
வன்னி நிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டார வன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்ந்தான்.
பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான்.
ஆயினும் தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன். இதனாலேயே இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது.
பண்டார வன்னியன் வரலாறு:
வரலாற்று ரீதியில் யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன்தான் பண்டார வன்னியன். முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள் தான்.
இதன்பின் வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் ஒல்லாந்தர்கள் (டச்சுக்காரர்கள்).
1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை என்று.
வன்னி வணங்கா மண்ணின் வீர மறவர்:
ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.
ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.
வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.
ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட்ட மறுத்த காரணத்தினால் பல யுத்த களங்களைக் கண்டான் பண்டாரவன்னியன்.அக்காலத்தில் வன்னிப் பகுதியில் கிடைக்கும் சாயவேர்கள் ஒல்லாந்தரால் ஏற்றுமதி செய்யப்பட்டு, நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து அங்கு சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரிடம் வன்னிப்பகுதி நிர்வாகம் மாற்றம் பெற்றதும் ஒல்லாந்தரான கேப்டன் வான்டெரிபேக் ஆங்கிலேயப் படையில் சேர்ந்து கொண்டான்.
1803-இல் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் பெரும் யுத்தம் ஏற்பட்டது. இந்தப் போரைப் பயன்படுத்திக் கொண்டு பண்டாரவன்னியன் ஆங்கிலேயர் வசமிருந்த ஆனையிறவுக் கோட்டை, இயக்கச்சி பைல் கோட்டை, வெற்றிலைக்கேணி பெஸ்சூட்டர் கோட்டை ஆகியவற்றை மூன்று தனித் தனி படைப் பிரிவுகளை அனுப்பி தாக்கினான்.
முள்ளியவளையிலிருந்து சுண்டிக்குளம் வழியாகச் சென்ற ஒரு படைப்பிரிவு பெஸ்சூட்டக் கோட்டையைக் கைப்பற்றியது. கண்டாவளை ஊரின் வழியாக இயக்கச்சிக்குச் சென்ற படைப்பிரிவு குமாரசிங்க முதலியார் தலைமையில் இயக்கச்சி “பைல்’ கோட்டையைத் தாக்கி கைப்பற்றினர். இங்கிருந்த வீரர்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி ஓடினர்.
தாங்கள் கைப்பற்றிய கோட்டைகளைத் தகர்த்துவிடுமாறு பண்டாரவன்னியன் உத்தரவிட்டிருந்தமையால், படைப் பிரிவினர் அக்கோட்டைகளின் ஒரு பகுதிகளைத் தகர்த்து விட்டனர்.
ஆனையிறவு கோட்டை தகர்ப்பு:
அதே போன்று ஆனையிறவுக் கோட்டையை தகர்க்கும் முயற்சியில் அதன் நான்கு கொத்தளங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பெரும் திரளாக வந்த ஆங்கிலேயப் படைப்பிரிவினரிடமிருந்து தப்பிக்க வன்னியன் படைகள் பின்வாங்கி கற்சிலை மடுவுக்கு திரும்பினர்.
அதே ஆண்டில் கேப்டன் வான்டெரிபேக் முல்லைத்தீவில் கட்டிய கோட்டையை பண்டாரவன்னியன் தகர்த்தான். இந்த முயற்சியில் கண்டி மன்னன் படைப்பிரிவும், நுவரவெலியா திசாவையின் படைப்பிரிவும் சேர்ந்து கொண்டன. இந்தப் போரில் வான்டெரிபேக் தோல்வியுற்று யாழ்ப்பாணம் நோக்கி, படகில் தப்பினான்.
ஆனாலும் திரிகோணமலையில் இருந்து வந்த ஆங்கிலேயப் படை 19-வது கர்னல் எட்வர்ட் மெட்ஜின் தலைமையில் முல்லைத்தீவைக் கைப்பற்றிக் கொண்டது. பின்னாளில் பண்டாரவன்னியனுக்கு உதவி புரிந்த குற்றத்தை குமாரசேகர முதலியார் மீது பழி சுமத்தி அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தூக்கிலிடப்பட்டனர்.
குமாரசேகர முதலியாரையும் அவரது நண்பர் குழாத்தையும் காப்பாற்ற முடியாமல் போன பண்டாரவன்னியன் பெரும் வருத்தமுற்று, இதற்குப் பழிக்குப் பழி வாங்க ஆனையிறவுக்கோட்டை, இயக்கச்சிக்கோட்டை முதலியவற்றை கடுமையாகத் தாக்கினான். 1803 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜான் ஜவல் தலைமையிலும், மன்னாரிலிருந்து கேப்டன் வான்டெரிபேக் தலைமையிலும் வன்னிப் பகுதியை நோக்கி விரைந்தன.
கொரில்லாப் போரின் முன்னொடி வன்னியன்:
கற்சிலைமடுவில் கேப்டன் வான்டெரிபேக் படைகள் காட்டுப் பகுதியில் வந்தபோது கடும் தாக்குதலுக்கு ஆளாயின. எங்கிருந்தோ கற்கள் பெருமளவில் பறந்து வந்து தாக்கின. பண்டாரவன்னியன் படைப்பிரிவு முந்தைய நாளில், அங்கிருந்த மூங்கில் மரக் காடுகளில் புகுந்து, ஒவ்வொரு மரத்தின் நுனியிலும் கருங்கற்களைக் கட்டி, அதன் நுனியை பின்புறமாகக் கயிறு மூலம் இழுத்து வேறொரு மரத்தில் கட்டியிருந்தனர். ஆங்கிலேயப் படை வரும் நேரமாகப் பார்த்து கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட மூங்கில் மரங்கள் நிமிர்ந்து கற்கள் எகிறி விழுந்தன.
இந்தச் செயலே கொரில்லாப் போரின் முதல் யுக்தியாக இன்றும் கருதப்படுகிறது. பண்டாரவன்னியன் இப்போரில் தோற்றபோதிலும். அந்தப் பகுதியில் இருந்து தப்பினான். உயிருடனோ, கொன்றோ பண்டாரவன்னியனைப் பிடிக்க விரும்பிய வான்டெரிபேக் அவமானமுற்றான். இருப்பினும் கற்சிலை மடுவில் நடுகல் ஒன்றை நட்டு, 1803 அக்டோபர் 31-இல் கேப்டன் வான்டெரிபேக் பண்டாரவன்னியனைத் தோற்கடித்தான் எனப் பொறித்தான்.
வன்னிராச்சியத்தில் என்றுமே தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தோற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் 31/10/1811 இன்றாகும்.
வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. பின்னா் அது ஸ்ரீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா