8
வடக்கு கிழக்கு மக்கள் கடந்த முப்பது ஆண்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இடம்பெற்ற இனவழிப்புப் போரில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நீதியை வலியுறுத்தும் வாழ்வும் போராட்டமாக வடக்கு கிழக்கு மக்கள் உள்ளனர். இந்த நிலையில் நாட்டின் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளுகின்ற போது தமது எதிர்பார்ப்புக்களை செவிசாய்க்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானது. அண்மையில் வடக்கிற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அது தமிழ் மக்களுக்கு எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ததா? ஏமாற்றத்தை அளித்ததா என்று இப் பத்தி ஆராய விளைகின்றது.
நான்கு நாள் பயணம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனவரி 04ஆம் திகதி வடக்கிற்கு தனது விஜயத்தை ஆரம்பித்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் வந்து யாழ் நகர பாடசாலை மைதானம் ஒன்றில் வந்திறங்கிய வேளை யாழ் நகரத்தின் இன்னொரு பக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் தடுப்பு இட்டு தடுத்து வைத்திருந்ததுடன் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜனாதிபதியின் வருகையின் போது மக்கள் தமது குரல்களை வெளிப்படுத்த முனைந்த போராட்டம் இடம்பெற்றது. சனவரி 4ஆம் திகதி வந்த ஜனாதிபதி சனவரி 7ஆம் திகதி வரை பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது யாழ் மாவட்ட செயலகத்தில் அரச அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்துடனும் அவர் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதை தவிர ஜனாதிபதியின் பயணத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், யுவதிகளுடனான சந்திப்பும், ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த சந்திப்பும் இடம்பெற்றது. தென்னிந்திய தொலைக்காட்சியில் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமி கில்மிசாவையும் ஜனாதிபதி சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டார்.
மக்களின் பிரச்சினை
தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளுகின்ற போதெல்லாம், வடக்கு மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான பிரச்சினையையும் அரசியல் தீர்வையும் மாத்திரமே கோருகின்றனர் என்றும் இதனைத்தாண்டியும் பல பிரச்சினைகள் உள்ளன என்றும் அதனை ஆராயவே தான் விரும்புவதாகவும் இம்முறை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக, தமிழ் மக்கள் அமைதி மற்றும் நிம்மதியை இழப்பதற்கு ஏதுவான பிரச்சினைகளாக இவைகளே உள்ள நிலையில் மக்கள் இதனைப் பற்றித்தானே எடுத்துரைப்பார்கள்.
இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் தெருவிலும் நகரங்களிலும் போராடி வருகின்றார்கள். இவர்களை சந்திக்காமல் அரச அதிகாரிகளை மாத்திரம் சந்திப்பதனால் என்ன பயன்? அதிலும் வடக்கு கிழக்கு இந்தப் பிரச்சினைகளால் இன்னமும் பாதிக்கப்பட்டு, உக்கிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் போது, இந்த மக்களை சந்திக்க தவறுவதும், இம் மக்களின் குரல்களை கேட்க மறுப்பதும் அர்த்தமுடைய செயலாக அல்லது பயன்தரும் செயலாக அமையுமா? அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை கேட்டு அதற்கு பதிலும் செயலும் அளிக்காத ஒரு பயணமாகவே ஜனாதிபதியின் பயணம் அமைந்தது.
ஆடம்பர பயணம்
நாடு பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அண்மையிலும் எரிபொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழர் தேச மக்கள் மாத்திரமின்றி தென்னிலங்கை மக்களும் வாழ வழியற்ற நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பி ஒடுகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதியின் பயணம் ஆடம்பரப் பயணம் என்று தென்னிலங்கையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமர் ரட்ணாயக்க, ஜனாதிபதியின் பயணத்தை வெற்றுப் பயணம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்க எதிர்வினையாகும்.
மேலும், காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் வடக்கிற்கு வருகை தந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி, ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல என்றும் விமல் ரட்ணாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஏன் இந்தப் பயணம்
அரசியல் தீர்வு குறித்து தனது கரிசனையை ஜனாதிபதி இப் பயணத்தின் போது வெளிப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் தமிழ் தலைவர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளது. கடந்த காலத்தில் அரசியல் தீர்வொன்றை தனது ஆட்சியில் முன்வைப்பேன் என்றும் கடந்த காலத்தில் அது சாத்தியமாகவில்லை இம்முறை அதனை நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி ரணில் வாக்குறுதி அளித்திருந்தார். அண்மையில் தென்னிலங்கையில் ஒரு பாடசாலை நிகழ்வில் பேசிய போதும் பொருளாதார மேம்பாடு ஏற்பட வேண்டும் என்றால் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன் வடக்கில் சிறந்த பொருளாதார வளம் காணப்படுகிறது என்ற கருத்தையும் ஜனாதிபதி கடந்த காலத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய பயணத்தின்போது பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதில்தான் அதிக கரிசனையை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தலைவர்கள் இந்த விடயத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இம்முறை பயணத்தில் தொடக்கத்தில் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அரசியல் தீர்வு காணும் பட்சத்தில் இலங்கையில் பொருளாதார மேம்பாடு இலகுவாக ஏற்படும் என்பதை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வடக்கின் பொருளாதாரத்தில் கண் வைத்துக் கொண்டு இத்தகைய விஜயங்களை மேற்கொள்ளுவது, இனப்பிரச்சினையை தீர்க்காமல், தமது இலக்கான பொருளாதார நெருக்கடியை தீர்க்க எடுக்கினற முனைப்பாகவே அமையும். ஆனால் இனப்பிரச்சினையை தீர்க்காமல் காலத்தை இழுத்தடிக்கும் ஒவ்வொரு நொடியும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளும். அதுவே நடந்தது. இனியும் நிலமை தொடர்ந்தால் அதுவே நடக்கும்.
கி. அலெக்ஷன்
நன்றி – வீரகேசரி