செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கவிஞர் அம்பியின் குழந்தை பாடல்கள்! | ஐங்கரன் விக்கினேஸ்வரா

கவிஞர் அம்பியின் குழந்தை பாடல்கள்! | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

( ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் நிலைத்திருக்கும். கவிஞர் அம்பியின் 95 வது பிறந்த நாளையோட்டி (பெப்ரவரி 17, 1929) இக் கட்டுரை பிரசுரமாகிறது )

இன்றைய சிறுவர்களே, நாளைய பெரியவர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில் வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாக அமையும். இந்த நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின. அம்மாவின் தாலாட்டுப் பாடலில் கூட ஆயிரமாயிரம் அறிவுரைகள் பொதிந்திருக்கும்.

அம்மாவின் தாலாட்டுப் பாடலில், இனிய தேனாக சுவை ததும்பும் வரிகளுடாகவே துவங்குகிறது சிறுவர் இலக்கியத்தின் வரலாறு. குழந்தைப் பாடல்களின் இலக்கிய இசைவாக, ஆரம்பப் புள்ளி அம்மாவின் ஆராரோ பாடல்கள் தான். அதன்வழியே குழந்தை கொஞ்சம் வளர்ந்து அதே போன்ற பாடல்களைக் கேட்க ஆவலாக இருக்கும். இதனூடகவே சிறுவர் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததை காணலாம்.

அம்மாவின் தாலாட்டுப் பாடலில் எழுந்த இலக்கியம்:

சந்த நயத்துடன் பாடப்படும் பாடல் பாடுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்வினைக் கொடுக்கின்றது. பாடுபவருக்கு உற்சாகமும் தொம்பும் அளிக்கின்றது. உலகை மறந்து ரசிக்க வைத்துவிடும். இவ்வகையில் அம்மாவின் தாலாட்டுப் பாடலில் துவங்கிய சிறுவர் பாடல்களின் பரிணாம வளர்ச்சியே சிறுவர் இலக்கியமாக அமைந்துள்ளது.

சிறுவர்களுக்கான பாடல்கள் மிக முக்கியமான இடத்தினைச் சிறுவர் இலக்கியத்தில் பெற்றுக் கொள்கிறது.

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா

என்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம் எனக் கருதலாம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்க கூறிய தாயின் வாய்மொழிக் கதையிலிருந்து சிறுவர் இலக்கியம் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப் பாடலுடன் சிறுவர் பாடல்கள் தொடங்கின.

யாழ் பரியோவான் மாணவன் கவிஞர் அம்பி :

இத்தகைய சிறுவர் இலக்கிய படைப்புக்களை தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் மண்ணிலும் படைத்த ஈழத்தைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.

குழந்தைக் கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிகவிநாயகம் பிள்ளை என்றும் போற்றப்படும் கவிஞர் அம்பி, எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பி அவர்களுக்கு பெப்ரவரி 17இல் தனது 94வது அகவையினுள் தடம்பதிக்கின்றார்.

இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வடக்கே நாவற்குழி சொந்த ஊராகும். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி உள்ளார்.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர்
அம்பி அவர்கள் ஆஸ்திரேலியாவில் தன் முதுமையிலும் தமிழுக்கு ஆற்றிய பணியை எவரும் மறவர். அம்பி அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு மிகப் பெரிது.

தாயகத்திலும், புலம் பெயர் மண்ணிலும் அவர் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். இளமையில் கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

ஈழத்து சிறுவர் இலக்கியம் :

ஈழத்தின் சிறுவர் இலக்கிய வளர்ச்சி என்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டே ஆய்வாகவே அமைந்து வந்துள்ளது. ஆயினும் தற்போது வடக்கிலும் கிழக்கிலுமாக பல சிறுவர் இலக்கிய படைப்பாளிகளை காணக்கூடியதாக உள்ளது.தமிழில் வெளிவந்த முதலாவது சிறுவர் பாடல் நூலாக இருப்பது யாழ்ப்பாணம் புலவர் தம்பிமுத்துப்பிள்ளை என்பவர் 1886 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட “பாலியக் கும்மி” என்பதே ஆராய்சியாளர்களின் கருத்தாகும்.

இதனைப் போல ஈழத்துக் சிறுவர் பாடல் மரபுக்கு வளமும் வனப்பும் சேர்த்த நவாலியூர் சோமசுந்தரப்புலவரை தலைசிறந்த குழந்தைக் கவிஞராக போற்றும் மரபு நம்மிடையே எப்போதும் உண்டு. அவரது பாடல்களில் ஒன்றான “ஆடிப்பிறப்பு” எனும் பாடலை சிறுவயதில் பாடிப்பாடிப் பரவசமடைந்திருக்கின்றேம்.

இன்றைய காலத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவரின் தேன் இனிய பாடல்களை குழந்தைகள் பாடுவதை காணலாம்.
ஈழத்து சிறுவர் இலக்கிய வரலாற்றில் தலைசிறந்த வரலாற்றின் முதன்மையானவராக நவாலியூர் சோமசுந்தரப்புலவர் விளங்குகிறார்.

வித்துவான் வேந்தனார் சிறந்த கவிஞராகவும், இன்னோர் ஈழத்து சிறுவர் இலக்கிய சிருஷ்டியாகவும் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.  இவர் எழுதிய கவிதைகள் ஈழநாடு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதுடன் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகி வந்துள்ளன. அப்பாடல்களுள் சிலவற்றைத் தொகுத்து ‘கவிதைப் பூம்பொழில்’ 1964 ஆம் ஆண்டு வெளியாகியது. அத்தொகுப்புக்குப் பண்டிதமணி சி. கணபதிப்பிளை, சோ. இளமுருகனார் ஆகியோர் சிறப்புப் பாயிரம் நல்கியிருந்தனர்.

ஈழத்து சிறுவர் இலக்கிய வரலாற்றில்
வேந்தனாரின் சிறுவர்களுக்கான கவிதைகள் சுட்டிக்காட்டத்தக்க முக்கியதுவம் வாய்ந்தனவாகும். அவர் படைத்த,
“காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொள்ளும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா”
எனும் சிறுவர்க்காக எழுதிய பாடல் இன்றும் சிறுவர்களால் பாடப்பட்டு வருகின்றமை வரலாற்றுச் சான்றாகும்.

கவிஞர் அம்பியும் சிறுவர் இலக்கியமும் :

குழந்தைக் கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிகவிநாயகம் பிள்ளை என்றும் போற்றப்படும் கவிஞர் அம்பி
1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர்.

கங்காரு தேசத்தின் சிட்னியில் தற்போது வசிக்கும் கவிஞர் அம்பி சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகள் பலவற்றையும் படைத்துள்ளார்.

இலட்சியக் கோடி என்ற சிறுகதையின் மூலம் தமிழ் எழுத்துலகில் அறிமுகமானவர். இச்சிறுகதை தினகரன் இதழில் வெளிவந்தது. அத்துடன் தமிழ் நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர். சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய அம்பியை ஈழத்தின் தேசிக விநாயகம் பிள்ளையாக சுபமங்களா இதழால் வர்ணிக்கப்பட்டவர்.

குழந்தைக் கவியின் படைப்புகள்:

அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் தாசீசியசின் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘அண்ணா பதக்கத்திற்காக’ கவிதைப்போட்டி நடைபெற்று எம்ஜிஆர் அவர்கள் தங்கப்பதக்கம் அளித்த பத்து கவிஞர்களில் அம்பி அவர்களும் ஒருவர்.

30 ஆண்டுகள் ஆசிரியப்பணி, பின்னர் பாடவிதான எழுத்தாளர் என்று அவரின் பணி விரிகிறது. இளங் குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி மொழித்திறன் ஆற்றல் ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு சீரிய பாடல்களை எழுதிய பெருமை கவிஞர் அம்பிக்குரியது.

அம்பி அவர்கள் 10 கவிதை நூற்கள், கிரீன் அவர்களைப்பற்றி மூன்று நூற்களைப் படைத்துள்ளார்.
கிறீனின் அடிச்சுவடு,அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள்), வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம்),
கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள்),
அந்தச் சிரிப்பு, யாதும் ஊரே, ஒரு யாத்திரை, அம்பி கவிதைகள்,
மருத்துவத் தமிழ் முன்னோடி,
Ambi’s Lingering Memories (Poetry),
Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green, உலகளாவிய தமிழர்
A String of Pearls, பாலர் பைந்தமிழ் ஆகியன அவரின் படைப்புகளாகும்.

சிறுவர் இலக்கிய தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பி அவர்கள்
1968இல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். அதன்பின்
1993இல் இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’ம்,
1994இல் கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருதும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் மண்ணில் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பணி :

புலம்பெயர் மண்ணில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக 1997இல் அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருதையும், 1998இல் கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். அதன்பின்னர்
2004இல் அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருதையும் பெற்றுள்ளார்.

கவிஞர் அம்பி சிறுவர்களுக்காக எழுதிய இந்த இலக்கியத்தின் கதாநாயகர்களாக, பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள். எனவே இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ண வண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இந்த இலக்கியத்தைப் படைத்துள்ளார். சிறுவர் இலக்கியத்திற்கு அம்பியின் படைப்பாற்றலை கௌரவித்து
ஈழத்தில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள் முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி அலங்கரித்துள்ளன.

எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. அம்பியின் கவிதைகள் நூலிலும் பல இதழ்கள், இணையத்தளங்களிலும் வெளியாகி பிரசித்திபெற்றுள்ளன.

அக்கவிதைகளுல் தமிழ் உணர்வை ஊட்டும் வரிகளை நாம் காணலாம்.
“ஓடிடும் தமிழா நில், நீ ஒரு கணம் மனதைத்தட்டு
வீடுநின்னூருள் சொந்தம், விளைநிலம் நாடு விட்டாய்
தேடியதெல்லாம் விட்டுத்திசைபல செல்லும் வேளை
பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே” என்று புலம்பெயர் மண்ணிலும் பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பியின்
படைப்பியல் வரலாறு காலங்காலமாக நிலைத்திருக்கும்.

கவிஞர் அம்பி அவர்கள் 94வது (பெப்ரவரி 17, 1929) அகவையில் தடம் பதித்தாலும், தமிழுக்கு ஆற்றும் பணியில் இளமையாகவே என்றும் மிளிர்கிறார்..

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More