——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
( மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனியொரு நாடு உருவாக வழிவகுத்தது. இந்தப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய பெப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது)
அன்றைய கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த, இன்றைய பங்களாதேஷில், “எங்களுக்கு வங்க மொழியே ஆட்சி மொழி; பாகிஸ்தான் திணிக்கும் உருது மொழியை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது” என்று அறிவித்தது. 1952-ஆம் ஆண்டில் வங்காளிகள் நடத்திய உருதுமொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நான்கு மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்கள் கொல்லப்பட்ட நாளான பெப்ரவரி 21-ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னரே பெப்ரவரி 21. இன்று உலகத் தாய்மொழி நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.
தாய்மொழி உணர்த்தும் பாடம் :
தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகில் அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பெப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language Day )ஐ,நாவின் யுனெஸ்கோ 1999ம் ஆண்டு பிரகடனப் படுத்தியது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பெப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதற்கான மூல காரணம் சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய வங்கதேசத்தில் எழுந்தது என்பதே வரலாற்றின் சான்றாக பொருந்தி அமைகிறது.
அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, வங்காள மக்கள் ஏற்கவில்லை.
வங்க மொழி இயக்கம் :
இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பெப்ரவரி 21ம் தேதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசாரின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. அதன்பின் 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தலைநகர் டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பெப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். 2000ம் ஆண்டிலிருந்து, பெப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
வங்கம் பிறந்த வரலாறு:
இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளாக 1947 ஆகஸ்ட் மாதத்தில்
பிரிந்தபோது, பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 6.9 கோடி. இதில் 4.4 கோடிப் பேர் கிழக்குப் பாகிஸ்தானில் வசித்தனர். அவர்களின் தாய்மொழி வங்காளியாக இருந்த அதேநேரத்தில், மேற்கு பாகிஸ்தானில் இருந்த மக்கள் உருது, பஞ்சாபி, பஷ்தூ, சிந்தி ஆகிய மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சி என காலனிய ஆட்சியின் தலைமைப் பீடமாக வங்காளம் நீண்ட காலம் இருந்துவந்த நிலையில், இயற்கையாகவே கிழக்குப் பாகிஸ்தான் பகுதி பொருளாதார உற்பத்தி மட்டுமின்றி, கல்வி உட்படப் பல்வேறு சமூகத் தளங்களிலும் மேற்கு பாகிஸ்தானை விட வெகுவாக முன்னேறிய நிலையில் இருந்தது.
டாக்கா மாணவர்களின் கிளர்ச்சி:
டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஃபீக் உதீன் அகமது, அப்துல் ஜப்பார், அப்துல் பரக்கத், அப்துல் சலாம் ஆகிய மருத்துவக் கல்லூரி மாணவர்களோடு, ஒன்பது வயதேயான ரஹியுல்லா என்ற சிறுவன் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.
இவர்கள் உயிர்நீத்த அதே இடத்தில் பெப்ரவரி 23 அன்று தியாகிகள் நினைவுச் சின்னம் தற்காலிகமாக உருவானது. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அரசின் கடுமையான ஒடுக்குமுறைக்கு இடையே பெப்ரவரி 21ஐ மொழிப் போர் தியாகிகளின் தினமாக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கடைப்பிடித்து வந்தனர்.
மக்களின் கடுமையான எதிர்ப்பினை அடுத்து 1956 பெப்ரவரி 16 அன்று பாகிஸ்தானின் அரசு மொழிகளில் ஒன்றாக வங்க மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்க உணர்வு மங்கிவிடவில்லை. பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை ஒடுக்கவும், மதரீதியாக அவர்களைப் பிளவுபடுத்தவுமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மொழிப் போரால் பிறந்த நாடு:
இவ்வாறு தாய்மொழிக்காகத் தொடங்கிய போராட்டம் படிப்படியாக அரசியல்ரீதியாக வலுப்பெற்று, விடுதலைப் போராக உருமாறியது. இப்போரின்போது கிழக்கு பாகிஸ்தான் மக்களை அடக்கி ஒடுக்க பாகிஸ்தான் ராணுவப் படைகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வெறியாட்டத்தில் முப்பது லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மூன்று லட்சம் பெண்கள் மிகக் கொடூரமான வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாயினர். கிழக்கு பாகிஸ்தானில் காலம்காலமாக இருந்து வந்த கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டன.
ஒருவகையில், இதை இன ஒழிப்பு நடவடிக்கை என்றே கூறிவிடலாம். வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் ஆனபிறகும் கூட இந்த இன ஒழிப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் இன்றுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதோடு, இனப் படுகொலை குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட 195 போர்க் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இறுதியில், உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனியொரு நாடு உருவாக வழிவகுத்தது. இந்தப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய பெப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என 1999 நவம்பர் 17-ல் தீர்மானம் நிறைவேற்றியது. பின்பு, ஐக்கிய நாடுகள் சபையும் தனது உறுப்புநாடுகள் இதைக் கொண்டாட வேண்டுமென பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றியது.