ஈழம், உரிமைக்காக போராடிய ஈழ நிலம் மொழிக்காகவும் போராட்டத்தை செய்திருக்கிறது. மொழிமீதான ஒடுக்குமுறை கண்டு ஈழம் வெகுண்டமைதான் தனிநாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் அடிப்படையானது. மொழி என்பது ஒரு இனத்தின் ஒரு சமூகத்தின் அடிப்படை வெளிப்பாடாகும்.
அதில் கைவைக்கின்ற போது அது மிகப் பெரிய விளைவுகளையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. உலகில் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டியது நமது அவசியமான கடமையாகும்.
எந்தவொரு மொழியையும் தரக்குறைவாகவோ, ஒடுக்கவோ, அழிக்கவோ முற்படுவது மனித மாண்புக்கும் மனித அடிப்படைப் பண்புக்கும் எதிரானது.
உலக தாய்மொழி தினம்
மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும்.
தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர்.
மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது.
தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர்.
பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர்.
ஈழத் தீவுக்குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது.
அழிவற்ற தமிழ்மொழி
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன.
தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது.
சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது.
கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது.
இலங்கையில் மொழி ஒடுக்குமுறை
ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர்.
தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய் மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார்.
ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தனது பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும்.
தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள்.
தமிழீழ அரசில் தமிழ்
தமிழீழ அரசானது தமிழ் மொழியில் அழகியதொரு தேசத்தைப் படைத்தது. அரச கட்டமைப்புக்கள் மற்றும் போரியல் கட்டமைப்புக்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் துவக்கம், நடைமுறையில் தூய தமிழ் மொழியிலான வாழ்வொன்றை சாத்தியப்படுத்தினர்.
மாந்தர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல், பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என விடுதலைப் புலிகளின் மொழித்துறை நிர்வாக கட்டமைப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றளவும் உலகால் வியப்புடன் நோக்கப்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களும் ஒட்டுமொத்த நிலமும் தமிழால் அமைந்திருந்தது.
ஈழத் தமிழினம் மொழி மறுப்பாலும் மொழியழிப்பாலுமே ஆயுதம் ஏந்தியது. உலகின் செழுமையான மொழி தமிழ். அந்த செழுமையுடன் இன்றளவும் வாழ்வையும் பேசும் மொழியையும் கொண்டவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அதனை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றளவும் குறியாக இருக்கிறது சிங்கள அரசு.
மொழியையும் இனத்தையும் அழிக்க வரலாறு முழுதும் இனப்படுகொலைகளை செய்த பின்னரும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை செய்த பின்னரும் சிங்கள அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?
அரச திணைக்களங்களில் சிதைக்கப்படும் தமிழ்
இன்றும் இலங்கை அரசின் அலுவலகங்களில், அரசு வடக்கு கிழக்கில் நடும் பெயர்பலகைகளில் எங்கள் தாய் மொழி கொலை செய்யப்படுகிறது.
காவல் நிலையங்களில் சிங்களத்தில்தான் முறைப்பாடு பதிவு செய்யப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கு வரும் பல சுற்று நிரூபங்கள் சிங்களத்தில்தான் உள்ளன. தென் பகுதியில் பிரதான அலுவலகங்களுக்குச் சென்று தமிழிலில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
வடக்கு கிழக்கில் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் தெரியாத வைத்தியர்களிடம் எங்கள் மக்கள் நோயை சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தாய் மொழி தினத்தை ஈழத் தமிழர்கள் கொண்டாட வேண்டும்.
மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை இந்த நாளில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு எல்லா நாட்களிலும் பயனாக விளைய வேண்டும்.
தமிழில் கையெழுத்திடுகிறோமா?
உலகில் தாய் மொழி அழிக்கப்படும் அனைத்து இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தாய் மொழியை திட்டமிட்டு அழிக்க ஒடுக்கப்படும் அத்தனை இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.
இனம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வை அழிப்பது மிகவும் கொடியது. கடந்த நூறு ஆண்டுகளாக நாங்கள் இத் தீவில் அனுபவித்து வரும் கொடிய சரித்திரம் இதுவே. தாய் மொழியை பேண, தமிழ் மரபை பேண, தமிழ் இனத்தின் இருப்பை பேண எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.
மொழி அழிந்தால், இனம் அழியும் என்பதையும் அவ்வாறு அழிந்த இனங்களையும் மொழிகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இனத்திற்காக மாத்திரமின்றி மொழிக்காயும் தேசத்திற்காயும் பல்லாயிரம் வீரர்கள் மாண்டுபோன மண்ணில் நம்மில் எத்தனைபேர் தாய்மொழியான தமிழில் கையெழுத்திடுகிறோம்?
நம் தேசத்தில் ஒரு பாடசாலையை எடுத்துக் கொண்டால் ஆசிரியர்களில் 97 வீதமானவர்கள் ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுகின்றனர். மொழியை டிஜிட்டல் ஊடத்தில் வளர்த்தாலும், கல்வி அறிவில் நூறு வீதத்தை அடைந்தாலும் கையெழுத்தில் அந்தக் கல்வியை வளர்ப்பதிலும் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
கல்வியில் நூறு வீத வளர்ச்சியை அடைந்தவொரு நாடு கையெழுத்தை இழந்த தேசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலை ஈழத்தில் உருவாகிவிடக்கூடாது.
கையெழுத்து என்பது மொழியினதும் இனத்தினதும் அடையாளம். அதனை தாய்மொழியில் இடுவதே மொழியை வளர்க்கும் எளிய வழிமுறையாகும்.
-தீபச்செல்வன்