உலகின் மூத்த தமிழ் சித்தராக கருதப்படுகின்ற திருமூலர் திருமந்திரத்தை அருளியவர். அவரால் சிவபூமி எனச் சிறப்பிக்கப்பட்ட நாடு ஈழம். ஈழத் தீவை சூழ சிவாலயங்கள் அமைந்திருப்பதனால் ஈழத்தை சிவபூமி என்றார்.
தமிழ் நிலம் என்பது சிவாலயங்களாலும் முருகன் ஆலயங்களாலும் ஆனது. தமிழ்நாட்டின் தொடர்ச்சியாக ஈழமும் அத்தகைய கோயில் நிலமாக தனது வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கிறது.
தென்னிலங்கையில் அமையப்பெற்ற கதிர்காமம் முருகன் ஆலயம், ஈழத்தின் தொன்மைக்கும் ஈழத் தமிழர்களின் தொன்மைக்கும் அவர்தம் சமயம் மற்றும் பண்பாட்டிற்கும் சாட்சியமாக இருக்கிறது.
அதனை சிங்கள ஆலயமாக மாற்றுகின்ற முயற்சிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள ஆலயங்களையும் அப்படி அடையாள மாற்றம் செய்கின்ற மிகப் பெரிய கட்டமைக்கப்பட்ட போரை சிறிலங்கா செய்து வருகிறது.
சிவராத்திரியாக்கிய சிறிலங்கா காவல்
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் தினமும் சிவராத்திரிகளை சிறிலங்கா அரசு பரிசளித்திருக்கிறது. மிகப் பெரிய இனவழிப்புப் போரை ஈழத் தமிழ் மக்கள்மீது தொடுத்திருந்த சிறிலங்கா அரசு அதனால் வரலாறு முழுவதும் பெரும் பாதிப்புக்களை உற்பத்தி செய்துள்ளது.
போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, சரணடைந்தவர்களுக்கான நீதி என அனைத்து நீதிக்காகவும் உறவுகளுக்காகவும் ஈழ மக்கள் தொடர்ந்து சிவராத்திரி வாழ்வை அனுஷ்டித்து வருகிறார்கள். கண்ணுறக்கம் இல்லாத ஈழ மக்களின் வாழ்வு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கின்றது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகின்ற இந்த 15 ஆண்டுகளும் இப்படித்தான் கழிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகளை மேற்கொள்ள மக்கள் தயாராகியிருந்தனர்.
ஆலயத்திற்கு செல்ல பல்வேறு தடைகளை இலங்கை காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்தனர். ஆலயம் செல்லும் மக்களுக்கு குடிநீரை தடுக்கும் மனிதநேயத்திற்கு விரோதமான உத்திகளையும் கையாண்டிருந்தனர்.
அத்துடன் ஆலயத்திற்குள் நுழைந்து மக்களை கடுமையாக முதலில் அச்சுறுத்திய காவல்துறையினர் பின்னர் மக்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கைகளை வன்முறையாக மேற்கொண்டனர்.
மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக காவல்துறையினர் ஆடிய வெறியாட்டம் ஊடகங்களில் வெளியாகி இருந்தது. உண்மையில் அதனை அன்று இரவு முழுவதும் அனைத்து ஈழ மக்களும் பார்த்து உறக்கம் இல்லாது அதிர்ச்சியுடன் விழித்திருந்தனர்.
அன்றைய இரவை அனைத்து மக்களுக்கும் சிவராத்திரி ஆக்கியிருந்தது ரணில் அரசும் அதன் காவல்துறையும். காலையில் சிவராத்திரிக்கு வாழ்த்துக்கூறிய ரணில் இரவு இத்தகைய அராஜகத்தை அரங்கேற்றி தன் சிவபக்தியை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
தொடரும் விளக்கமறியல்
இதேவேளை ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலயப் பரிபாலன சபையினர் மற்றும் ஆலயத்திற்கு வந்த பக்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்கள்மீது சிறிலங்கா காவல்துறையினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து பொய் வழக்கு ஒன்றை புனைந்து சிறையிலடைக்கும் சதியில் ஈடுட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஈழத் தமிழ் மக்களின் சைவ வழிபாட்டிடமான வெடுக்குநாறி மலைமீது பௌத்த, சிங்கள கதையை புனைந்து அதனை ஆக்கிரமிக்க முயல்வதைப் போலவே, அங்கு தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தியதாக இவர்கள்மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் தொல்லியல் சின்னங்களை சிதைப்பது என்பது பாரிய குற்றச்செயலாக சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் பாரிய ஆபத்தில் சிக்க வைத்து ஈழத் தமிழ் மக்களை கடும் எச்சரிப்புக்கு உள்ளாக்க இதன்மூலம் முயற்சிக்கப்படுகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சிவபக்தர்கள் சிறையில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது விடுதலையை வலியுறுத்தியும், தமது வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவும் கோரி இவ்வாறு உண்ணாவிரப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று சிறிலங்கா சிறைச்சாலைப் பேச்சாளர் கூறியுள்ளார். அதனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மறுத்துள்ளார்.
வெடிக்கும் போராட்டங்கள்
வெடுக்குநாறி மலையில் சிறிலங்கா காவல்துறையினர் ஆடியிருந்த வெறியாட்டம், ஈழத்தில் மாத்திரமின்றி உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களையும் பெரும் அதிரச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 11ஆம் நாளன்று யாழ்ப்பாணம் நல்லூரில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதில் பக்தர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறிலங்கா அரசு வெடுக்குநாறி மலையை ஆக்கிரமிக்க மேற்கொள்ளுகின்ற சதிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், கடந்த சிவராத்திரி நாளன்று நடந்த சிறிலங்கா காவல்துறையினரின் வெறியாட்டத்திற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தாக்குதல்களை கண்டிக்கும் விதமாக நாடாளுமன்றத்தை புறக்கணித்து கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சமயத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்த அயல்நாடு, வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை வெடுக்குநாறி மலையில் நடந்த அட்டூழியத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று நாளை 15ஆம் திகதி இடம்பெற இருக்கிறது.
நெடுங்கேணி சந்தியில் இடம்பெறவுள்ள இந்த போராட்டத்தின்போது வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரைக்கும் பேரணி நகர்ந்து, இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு கோரிக்கை மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.
இதில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குலநாசமாகிறதா சிறிலங்கா?
சிறிலங்கா அரசு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. நாட்டை விட்டு பெருமளவு மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
பணத்தின் பெறுமதி இழக்கப்படுவதுடன் பொருட்களின் விலையேற்றம் என்பது சிறிலங்காவை ஆபிரிக்க நாடுகள் போல ஆக்கிக் கொண்டிருக்கிறது.
சிங்கள மக்களும் வாழ முடியாத நிலைக்கு ஆளாகியுள்ள போதும் சிறிலங்கா அரசும் படைகளும் தொல்லியல் திணைக்களமும் பேரினவாதிகளும் தமிழ் மக்களின் நிலங்களையும் வழிபாட்டு இடங்களையும் ஆக்கிரமிக்கும் போரை நிறுத்தாமல் தொடர்கின்றனர்.
எதிர்காலத்தில் எத்தகைய நிலை ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். .வெடுக்குநாறிமலை ஆலயம் ஈழத் தமிழ் மக்களின் சொத்து.
இன்னும் சொன்னாமல் சைவத்தின் சொத்து. சிவனின் சொத்து. சிவன் சொத்து குலநாசம் என்று தமிழ் மரபில் ஒரு பழமொழி உண்டு. சிவன் சொத்தை தொட்டால் அந்த குலமே நசமாகி அழிந்து விடும் என்றும் அதற்கொரு பொருளை சொல்வார்கள்.
ஏற்கனவே சிறிலங்கா அரசு பெரும் அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து வரும் நிலையில் வெடுக்குநாறியில் சிவன் சொத்தை ஆக்கிரமிக்க முயன்று இன்னமும் பின்னடைவுகளுக்கும் வீழ்ச்சிக்கும் உள்ளாகப் போகிறதா?
தீபச்செல்வன்