(தற்போது காசா போர் தீவிரமாகிய நிலையில் இன்னமும் பாலஸ்தீன – இஸ்ரேல் இரு தேச தீர்வு பற்றி அடிக்கடி சர்வதேச உயர் அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இரு தேச தீர்வாகிய சைப்ரஸ் பற்றிய சிறிய அலசலே இக்கட்டுரை)
துருக்கி – கிரேக்க ஆட்சியில் கீழ் பிரிக்கப்பட்ட சைப்ரஸ் நாட்டின் இரண்டு-அரசுத் தீர்வு(Two-State Solution) என்ற தீர்வானது தமிழ் மக்களது அரசியல் பெருவெளியில் முனைப்புப் பெற்ற விடயமாகும்.
ஒரு நாடு இரு தேசங்கள் (One County two Nations) என்கின்ற கருத்தியல் பற்றி பரவலாக உலகில் பிரிந்து போகும் நாடுகளிடையே பேசப்பட்டு வருகின்ற அரசியலாகும்.
சைப்ரஸ் பிரிவினை 1974 ஆண்டு துருக்கிப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு முன்னரே ஆரம்பமாகியது. மக்களில் மூன்றில் ஒரு பகுதியினரான கிரேக்கர்களும், துருக்கியர்களும் தங்களது சொந்த வீடுகளிலிருந்து வெளியேறிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அக்காலத்தில் ஏற்பட்டது.
சைப்ரஸ் பிரிவினை வரலாறு:
சைப்ரஸ் தீவில் ( Cyprus ) வாழ்ந்து வந்த கிரேக்கப் பெரும்பான்மையினரும் துருக்கிய சிறுபான்மையினரும் இரண்டு ”இனச்சுத்திகரிப்பு” செய்யப்பட்ட பகுதிகளில் பிரிக்கப்பட்டனர்.
1974 யூலை 22 இல் ஐக்கிய நாடுகள் அவை இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. துருக்கிப் படை சைப்பிரசில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டது.
அதே ஆண்டு டிசெம்பர் மாதத்தில் கிரேக்க ஆயர் மாகாறியோஸ் மீண்டும் ஆட்சித் தலைவராகப் பதவி ஏற்றார்.
அடுத்த ஆண்டு சைப்ரஸ் தீவு கிரேக்கர் பகுதி துருக்கியர் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இடையில் ஐக்கிய நாட்டு அவையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் 1983 நவெம்பர் 15 இல் துருக்கி சைப்ரஸ் “வட துருக்கி குடியரசு” எனத் தன்னை ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தியது. ஆனால் ஐநா பாதுகாப்பு அவை அதனை அங்கீகரிக்க மறுத்தது. துருக்கி மட்டும் அதனை அங்கீகரித்தது.
இரண்டு சைப்பிரசையும் இணைப்பதற்கு ஐநா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. 2002 இல் கிரேக்க சைப்ரஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாக:
2003இல் பல்லாயிரக்கணக்கான வட சைப்ரஸில் வாழும் துருக்கி இனமக்கள், சைப்ரஸ் தீவின் கிரேக்கப் பகுதியுடன் தம்மை இணைக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய யூனியனில் சேர்க்கப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வடக்கு சைப்ரஸ் துருக்கிய குடியரசு (TRWC) தலைமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சைப்ரஸ் பிரிவினை முடிவிற்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த யோசனையை துருக்கி மட்டுமே TRNC இனை அங்கீகரித்துள்ளது.
அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 50,000 முதல் 70,000 வரை பொதுமக்கள் கலந்துகொண்டனர். இது தீவின் துருக்கிய பகுதிகளில் வாழும் மக்களில் இதில் மூன்றில் ஒரு பகுதியாகும்.
இவ் எண்ணிக்கையானது சைப்ரஸின் வடக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த துருக்கி தேசிய உணர்வு தனது ஆதரவு முழுவதையும் இழந்துவிட்டது என்பதை காட்டியது.
இதன் பின்னர் சைப்ரசு குடியரசு மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. இதன் அதிகாரபூர்வ பெயர் சைப்ரசு குடியரசு என்பதாகும்.
கிரேக்க காலனி நாடாக:
மத்திய தரைக்கடலில் காணப்படும் மூன்றாவது பெரிய தீவு சைப்ரஸ். சைப்ரஸ் என்றால் கிரேக்க மொழியில் செப்பு என்று பொருள். சைப்ரஸ் துருக்கியின் தென்திசை கடலோரமாகவும் சிரியாவின் மேற்குக் கரையோரமாகவும் இருக்கிறது.
சைப்ரஸ் பலநூற்றாண்டு காலமாக சைப்ரஸ் தீவு பினீசியன்ஸ் மற்றும் கிரேக்கர்கள் ஆகியோரது காலனி நாடாக இருந்து வந்தது. 1571 ஆம் ஆண்டு துருக்கி அதனைத் தாக்கிக் கைப்பற்றியது. அங்கு பெருவாரியான துருக்கியரைக் குடியேற்றி தனது காலனி நாடாக வைத்துக் கொண்டது.
முதலாவது உலகப் போர் வெடித்தபோது பிரித்தானியா சைப்ரஸ் தீவைக் கைப்பற்றியது. 1925 இல் சைப்ரஸ் பிரித்தானியாவின் காலனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
கிரேக்கத்தைத் தாய்நாடாகக் கருதும் சைபிரசில் வாழ்ந்த கிரேக்க மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடினார்கள்.
சைப்ரஸ் தீவு கிரேக்கத்தோடு இணைக்க வேண்டும் என்றும் போராடினார்கள். 1955 இல் சைப்ரஸ் போராளிகளின் தேசிய அமைப்பு (EOKA) பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு கெரில்லா போரைத் தொடங்கியது.
1958 இல் ஆயர் மாகாறியோஸ் (Archbiship Makarios) கிரேக்கத்தோடு இணைவதற்குப் பதில் சைப்ரஸ் ஒரு சுதந்திரநாடாக மலரவேண்டும் என்றார்.
இதே சமயம் சைப்ரஸ் துருக்கியர்கள் சைப்ரஸ் தீவு கிரேக்கர் – துருக்கியர் மக்களிடை பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள். சைப்ரஸ் தீவு 1960, ஓகஸ்ட் 16 இல் சுதந்திரம் அடைந்தது. கிரேக்கர்களும் துருக்கியர்களும் இணைந்து ஒரு அரசியல் யாப்பை எழுதிக் கொண்டார்கள்.
ஆயர் மாகாறியோஸ் சைப்ரஸ் தீவின் முதல் ஆட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் வெகுவிரைவில் கிரேக்கர்கள் – துருக்கியர் மத்தியில் சண்டை பலமாக தொடங்கியது.
துருக்கி படை ஆக்கிரமிப்பு:
கிழக்கு மத்தியதரைக் கடலில் ஒரு மூலோபாய இருப்பிடமாக, பின்னர் அது அசீரியர்கள், எகிப்தியர்கள் மற்றும் பெர்சியர்களின் பேரரசுகள் உட்பட பல முக்கிய சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இவர்களிடமிருந்து கிமு 333 இல் தீவை அலெக்சாண்டர் தி கிரேட் அலெக்சாண்டர் கைப்பற்றினார். டோலமிக் எகிப்து, கிளாசிக்கல் மற்றும் கிழக்கு ரோமானியப் பேரரசு, ஒரு குறுகிய காலத்திற்கு அரபு கலிபாக்கள், பிரெஞ்சு லுசிக்னன் வம்சம் மற்றும் வெனிசியர்கள் ஆகியோரால் 1571 மற்றும் 1878 க்கு இடையில் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான ஒட்டோமான் ஆட்சி பின்பற்றப்பட்டது.
1965 இல் ஐக்கிய நாடுகளின் அவையின் அமைதிப்படை இங்கு அனுப்பப்பட்டது. 1974 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் நாள் ஆயர் மார்க்கோஸ் சைப்ரஸ் தேசிய பாதுகாப்புப் படை நடத்திய புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டார்.
யூலை 20 இல் துருக்கி சைப்ரஸ் தீவில் வாழும் துருக்கியரைக் காப்பாற்றும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறது எனக் கூறிக் கொண்டு அதன் மீது படையெடுத்து சைப்பிரசின் வடபகுதியை அண்டிய 37 விழுக்காடு நிலப்பரப்பைக் கைப்பற்றியது.
இதனால் 180,000 கிரேக்கர்கள் வடக்கில் இருந்து தெற்குக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தார்கள்.
வடக்கு – தெற்கு சைப்பிரசாக பிளவு;
துருக்கி சைப்ரசு குடியரசின் தோற்றத்தை ஒப்புக்கொண்டது. சைப்ரசு தீவு பிரிக்கவேண்டும் என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது. துருக்கியதும் துருக்கிய சைப்ரசு தலைவர்களின் நோக்கமும் விடுதலை பெற்ற துருக்கிய நாட்டை சைப்ரசின் வடபகுதியில் அமைப்பது என்பதாகும்.
வடக்கு சைப்பிரசு (Northern Cyprus) முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் நடைமுறையில் ஒரு சுதந்திர நாடு. இது தனது சுதந்திரத்தை 1983 ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பை துருக்கி மட்டுமே ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கவில்லை.
இந்த பகுதி படைத்துறை, பொருளாதார, அரசியல் வழிகளில் துருக்கியைச் சார்ந்து இருக்கிறது
சைப்ரஸின் துருக்கிப் பகுதி, மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். விளைச்சல் நிலப்பரப்பு என்று எடுத்துக்கொண்டால் நாட்டின் மொத்த விளைச்சல் பரப்பில் இது மூன்றில் இரண்டு பங்காகும்.
ஆனால் வாழ்க்கைத் தரத்தில் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள கிரேக்க தென்பகுதிக்கும் சர்வதேச அளவில் விலக்கி வைக்கப்பட்டுள்ள துருக்கி வடக்கிற்கும் இடையில் பொருளாதார நிலை இடைவெளி விரிவாகிக்கொண்டே போகிறது. இந்த இடைவெளி வடக்கின் துருக்கியின மக்களை வெகுவாகப் பாதிக்கிறது.
தெற்கில் தனிநபர் வருமானம் வடக்கைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
1970கள் முதல் வடக்கு துருக்கி பகுதியில் வாழும் மக்களில் 10,000 இற்கு மேற்பட்டவர்கள் வெளியேறி சென்றுவிட்டார்கள். கடந்த காலத்தில் துருக்கி வலதுசாரி குடியேற்றவாசிகள் அந்த மக்கள் வெளியேறிய இடங்களில் குடியேறினர்.
தெற்கு சைப்பிரசில் தமது உழைப்பிற்காக பல துருக்கி தொழிலாளர்கள் தினசரி கிரேக்க எல்லையைத் தாண்டி தெற்கு சைபிரஸிற்கு வருகின்றனர்.
சர்வதேச மானியங்கள் மற்றும் சுற்றுலா வளர்ச்சி காரணமாக தெற்குப் பகுதி பொருளாதாரம் மகத்தான வளர்ச்சி கண்டது. ஆனால், வடக்குப் பகுதியில் பண வீக்கமும், பண மோசடிகளும் அதிகரித்தன. துருக்கி மக்கள் வறுமையில் மூழ்கினர்.
2004 அண்மையில் ஐரோப்பிய யூனியன் தெற்கு சைபிரசை புதிய உறுப்பினராக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம் சைபிரஸ் தீவின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் நிலவுகின்ற சமூக பாகுபாடுகள் ஆழமாகிவிடும் என்ற அச்சம் தற்போது நிலவுகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா