சில காலத்தின் முன்னர் ஒரு நவம்பர் மாத பொழுதில், கிளிநொச்சியில் ஒரு இராணுவ முகாமிற்கு முன்பான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தேன். அங்கு இராணுவத்தினர் பாரிய யுத்த தளவாடங்களை நிறுத்தியிருந்தனர். போர் முடிந்த நிலத்தில் இன்னமும் பீரங்கிகள் வாய்பிளந்தபடி நிற்கின்றன.
அந்தத் தெருவில் குழந்தைகளும் சிறுவர்களும் சென்று வந்து கொண்டிருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் குண்டுகளை வெளித்தள்ளக்கூடியவையாகவே அந்தப் பீரங்கிகள் அந்தக் குழந்தைகளின் கண்களுக்கு தெரிந்திருக்கும்.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டு பதினைந்து ஆண்டுகளை அண்மிக்கின்ற நாட்களில்கூட யாருக்காக அந்தப் பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? எதற்காக அந்தப் பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? தமிழ ஈழ நிலத்தில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடக்கின்றதும் நீள்கின்றதுமான போரைத்தான் பல காட்சிகளிலும் தூலங்களிலும் காண்கிறோம்.
பீரங்கி மலரா காந்தள்?
பீரங்கிகளைப் பார்த்துவிட்டு திரும்புகையில் அதனருகே, ஒரு காந்தள் மலர்ந்திருப்பதைக் கண்டேன். உடல் சிலிர்த்தது. ஒரு பீரங்கியின் எதிரில் ஒரு மலரைத்தான் தமிழ் நிலம் வைத்திருக்கிறது என்றே எண்ணிக் கொண்டேன்.
சிலவேளை அந்த காந்தளை ஒரு இராணுவச் சிப்பாய் காண்கின்ற போது அது பீரங்கிக்கு எதிராக மலர்ந்திருப்பதாக அவன் நினைத்திருக்கக்கூடும். பீரங்கியின் எதிரில் மலர்ந்திருந்த அந்த காந்தள் மலர் என்னை சில நாள் உறங்கவிடாமல் உலைத்தது.
அதிலொரு நெருப்பும் வலிமையும் கொண்டவொரு கவிதையிருப்பதை உணர்ந்தேன். பல நாள் தாக்கத்தின் பிறகு, ‘பீரங்கி மலர்’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆனந்த விகடனில் எழுதியிருந்தேன்.
“சயனைடு குப்பிகளில் மண் நிறைத்து
விளையாடும் குழந்தைகள்
பூக்களை பறிக்க காடு நுழைந்தனர்
இராணுவ சீருடை அணிவிக்கப்பட்ட
காட்டு மரங்களின் இடையே
நிறுத்தப்பட்ட பீரங்களில்
கொடியெனப் பறந்தன
குருதி புரண்ட வெண் சீருடைகள்
அகழப்பட்ட காட்டின் நடுவே
யுத்த ஒத்திகையின்
அதிரும் குரலால் நடுங்கின காடுகளின் விழிகள்
‘இனி யார்மீது யுத்தம்?’
குழந்தைகளின் முகங்களில் முடிவற்ற கேள்விகள்
காட்டின் பழங்களெல்லாம்
சயனைடு குப்பிகளெனத் தொங்கின
குருதிக் கரைகளால் சிவந்த பாதையில்
யாரே இழுத்துச் செல்லப்பட்ட விரலடையாளங்கள்
ஒரு நாடு புதைக்கப்பட்ட நிலத்தில்
‘எப்போது வேண்டுமனாலும் யுத்தம்’ என
நீட்டி நிற்கும் ஒரு பீரங்கியின் வாய்குழல் அருகே
ஒரு காந்தள் கொடி படர்ந்தெழ
அதன் மலர்
நீர்ச் சொட்டுகளுடன் விரிந்து பூத்திருந்தது
ஒரு குழந்தையின்
புன்னகை நிரம்பிய முகமாய்.”
அன்றிருந்த தமிழீழம்
தனித் தமிழீழத்திற்கான போராட்டம் 2009 உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அப்போதைய சூழலில் அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த தீவில் காணப்பட்ட இரண்டு நாடுகளை தாம் ஒன்றாக்கியதாகக் கூறியிருந்தார்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியின் பெரும்பான்மை இடங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தம் ஆளுகையில் கொண்டிருந்தனர். அப்போது வடக்கு கிழக்கு தமிழீழம் என்ற தமிழர் தேசமாக நடைமுறையில் இருந்ததை எல்லோருமே நன்கு அறிவார்கள்.
அடக்கி ஒடுக்கப்படும் ஒரு இனம் விடுதலைக்காக தனித் தேசம் ஒன்றை அமைப்பதற்காக முன்னெடுக்கும் போராட்டத்தில் தமது தேசத்தை கட்டமைக்கும் செயற்பாடு இடம்பெற்றது.
அப்போது தமிழர் தேசத்திற்கென தனியான அடையாளங்கள் அறிவிக்கப்பட்டன. காந்தள் மலர் ஈழத் தேசிய மலர் என்றும் செண்பகம் தேசிய பறவை என்றும் சிறுத்தைப் புலி என்றும் தேசிய மரம் வாகை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை வடக்கு கிழக்கில் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
அன்றைய சூழலில் தமிழ் மொழி சார் மரபு மற்றும் பண்பாடு சார் விழுமியங்களில் மாத்திரமின்றி பொருளாதார எண்ணத்திலும் விடுதலைப் புலிகள் முன்வைத்த பல விடயங்களை ஈழத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு அச் சிந்தனையின் அடிப்படையில் தமது வாழ்வை கட்டமைத்து வளமும் செழுமையும் கொண்டனர்.
அன்று விடுதலைப் புலிகள் விதைத்த பல சிந்தனைகள் தான் இன்றும் வடக்கு கிழக்கு மக்களினதும் நிலத்தினதும் செழுமைக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது சிறிலங்கா ஆட்சியாளர்கள் கூட அறியும் ஏற்கும் விடயம்தான்.
விளையாட்டுக்களில் அபிலாசைகள்?
அண்மைய காலத்தில் இலங்கைத் தீவில் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழர் தேசத்தில் உள்ள பாடசாலைகளில் போரின் தாக்கமும் தமிழ் நிலத்தின் தாக்கமும் கொண்ட இல்ல வடிவமைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை ஒன்றில் யுத்த டாங்கி ஒன்றை தமது இல்லத்தின் வடிவமைப்பாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு மாணவர்கள் அமைப்பது தவறு எனில், இன்றைக்கு இலங்கை அரசை படைகள் தமிழர் பகுதியில் அமைத்துள்ள தமது இராணுவ முகாமின் முன்னால் யுத்த டாங்கிகளை நிறுத்தி வைத்துள்ளதும் தவறல்லவா? அது ஆக்கிரமிப்பின் சின்னமாக இருக்கிறதா? வீரத்தின் சின்னமாக இருக்கிறதா என்பதை இராணுவத்தரப்பு எப்படி பார்க்கிறது?
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கில் உள்ள பாடசாலை ஒன்றில் மாவீரர் துயிலும் இல்ல வாசல் அமைப்பில் இல்லம் ஒன்று தமது வடிவமைப்பை மேற்கொண்டுள்ளது.
இன்றைக்கு தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் பண்பாட்டிலும் கலந்துவிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களின் வடிவமைப்பில் அவ் இலத்தின் வடிவமைப்பை வைப்பது எப்படித் தவறாயிருக்க முடியும்?
மாவீரர் துயிலும் இல்லங்கள் எனும் இறந்தவர்கள் விதைக்கப்பட்ட இடத்தை ஏற்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை அங்கீகரியுங்கள் என்றும், அங்கிருந்து இன நல்லிணக்கத்தை துவங்கினால் அது அர்த்தமாக இருக்கும் என்றும் கடந்த காலம் முழுவதும் வலியுறுத்திக் கொண்டல்லவா இருக்கின்றோம்.
காந்தள் மலர்களுக்கே அச்சமா?
தமிழ் இலக்கியத்தில் சங்கப் பாடல்களில் இடம்பெறும் காந்தள் ஒரு மருத்துவ மலராகும். தமிழ்நாடு அரசின் மாநில மலராகவும் காந்தள் திகழ்கிறது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இந்த மலர் ஆண்டின் நவம்பர் காலப் பகுதியில் பூப்பது வழக்கமாகும். இதுவொரு இயற்கையின் நியதியாகவும் பேரழகாகவும் நிகழ்கிறது.
கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்து, மாவீரர் நாளை செய்யவிடாமல் தடுத்த காலத்தில் காந்தள் மலர்களை தேடி அழித்த நிகழ்வுகளையும் நாம் கண்டிருக்கிறோம்.
எவ்வளவு அழித்தாலும் காந்தன் அழியாது. அது இந்த மண்ணின் மலர். கண்டுபிடிக்க முடியாத கிழங்கின் வேரில் இருந்து அது ஆண்டுதோறும் முளைத்து பூத்து ஈழத் தாயின் பிள்ளைகளாக முகம்காட்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் தேசத்தின் மலராக காந்தளை அறிவித்தமையால் அந்த மலர்களை கண்டு அஞ்சுகிறீர்களா? அண்மையில் யாழ்ப்பாண பாடசாலை ஒன்று தமது இல்லத்தின் வடிவமைப்பாக காந்தளை வைத்தமைக்காக விசாரணை இடம்பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் ஒருமுறை மலரும் காந்தளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதனை காட்சிப்படுத்தியதாக பாடசாலைத் தரப்பு தெரிவித்துள்ளது.
புலிகளின் மலர் என்பதால் காந்தளை இத் தீவில் இருந்து அழித்துவிடப் போகிறீர்களா? அதேபோன்று செண்பகப் பறவைகளையும் வாகை மரங்களையும் சிறுத்தைப் புலிகளையும் இந்த தீவில் இருந்து அழித்துவிடப் போகிறீர்களா?
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழ் மக்களை அழித்தமை போன்றே இந்த அழிப்பையும் செய்ய உத்தேசமா?
தீபச்செல்வன்