சொந்த தொகுதியிலே வெல்வது கஷ்டம் ?
(கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், கடந்த 27 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான தோல்வியை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சந்திக்க போகிறது. இதில் ஆளும் தரப்புக்கு மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் கூட அவரது சொந்த தொகுதியில் வெல்வது கஷ்டம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது)
பிரிட்டன் நாட்டில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கே ரிஷி சுனக் தலைமையிலான அரசு, மிக மோசமான தோல்வியை அடைய வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருத்து கணிப்பில் ரிஷி சுனக் தோல்வி :
பிரிட்டன் நாட்டில் இப்போது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். கோவிட்டின் பின் இக்கட்டான சூழலில் 2022இல் அவர் பிரதமர் பதவிக்கு வந்தார்.
எதிர்வரும் தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வரும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் இவ்வாண்டு இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, என்பது குறித்து ‘பெஸ்ட் (Best for Britain) நடத்திய மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரித்தானிய தேர்தல் தொடர்பில், சிவில் சமூக பிரச்சார அமைப்பான ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ (Best for Britain) நடத்திய மெகா கருத்துக் கணிப்பிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டு ஆள்வது யார் ?
தற்போது தேர்தல் நடத்தப்பட்டால், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடு முழுவதும் 250 எம்.பி.க்களை இழக்க நேரிடும் என கூறப்படுகின்றது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைவிட, 19 புள்ளிகள் முன்னிலையுடன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை கணிப்பில் பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சியான எதிர்கட்சி 468 இடங்களை பெற்று வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகிறது.
ஆயினும் பிரிட்டனில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய உள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.
ஆட்சியை பிடித்தாலும் பல சர்ச்சையில் சிக்கி மூன்று பிரதமர்களை மாற்றும் நிலைக்கு கன்சர்வேட்டிவ் கட்சி சென்றது. பாலியல் வழக்கில் சிக்கியவரை அரசாங்கத்தில் நியமித்தது, கொரோனா விதிகளை மீறியது என போரிஸ் ஜான்சனுக்கு எதிராக புகார் எழுந்த நிலையில், தனது பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
போரிஸை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக பதவியேற்ற 6 வாரங்களில் பதவி விலகினார். இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் பல சவால்களை கடந்து அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சி பின்னடைவு:
தற்போது பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. தற்போதய அமைச்சரவையில் உள்ள 28 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு போட்டியிடுவார்களாயின், அவர்களில் 13 பேர் மட்டுமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என Best for Britain கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பிரிட்டன் நாடு முழுக்க நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆளும் தரப்பை ஆட்டம் காண வைப்பதாக இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் அங்கே நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடையும் என்றே அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சொந்த தொகுதியில் வெல்வது கஷ்டம்:
இதில் ஆளும் தரப்புக்கு மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் கூட அவரது (Richmond in North Yorkshire) றிச்மண்ட்்வடக்கு யார்க்ஷயரின் தொகுதியில் வெல்வது கஷ்டமாம். இந்த கணிப்பு படி எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது.
தொழிலாளர் கட்சி 468 ஆசனம் வெல்லும்?
இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தொழிலாளர் கட்சி 468 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதுடன், ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளப் போகும் கன்சர்வேடிவ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியைச் சந்திக்க இருக்கிறது.
அவர்கள் 100க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாக இன்னோர் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி நாடு முழுவதும் மிக மோசமான தோல்வியை அடையும். தொழிலாளர் கட்சி 468 இடங்களைப் பெற்று வெற்றி பெறும் ஒரு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி இதுவரை இப்படியொரு தோல்வியைச் சந்தித்ததே இல்லை.
அத்துடன் கன்சர்வேடிவ் கட்சியின் மோசமான நிலை அத்துடன் நிற்கவில்லை. பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் தொகுதியில் கூட போட்டி மிக மிக நெருக்கமாக இருக்கிறது. அங்கே தொழிலாளர் கட்சி ரிஷி சுனக்கை விட வெறும் 2.4 சதவீதம் தான் பின்தங்கிய இருக்கிறது. எனவே, அங்கே எப்போது வேண்டுமானாலும் நிலைமை மாறலாம் எனக் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் படுதோல்வி:
பிரிட்டனில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது ரிஷி சுனக்கிற்கு பெரும் ஆபத்தைக் கொடுத்துள்ளது. இதனால் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே ரிஷி சுனக்கிற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
வரும் காலங்களில் நிலைமை மோசமாகலாம் என்பது அவர்கள் நிலைப்பாடு.
இதனால் ரிஷி சுனக்கை அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மேலும், அடுத்த முறை நிச்சயம் ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பே இருக்காது என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
தேர்தலுக்கு முன்பாகவே கூட நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
தொழிலாளர் கட்சி சாதனை படைக்குமா?
இன்னோர் கருத்துக் கணிப்பு அமைப்பான ‘யூகோவ் நிறுவனம்’ எடுத்த ஆய்வின் முடிவுகளின்படி, மொத்தமுள்ள 650 இடங்களில் 403 இடங்களை கைப்பற்றி தொழிலாளர் கட்சி சாதனை படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 155 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், கடந்த 27 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி சந்திக்க போகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டோனி பிளேயர் தலைமையிலான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
அந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி 165 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சியை இழப்பதோடு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் இம்முறை தோல்வியை சந்திக்க உள்ளனர் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நிதியமைச்சர் ஜெரோம் ஹன்ட், அறிவியல்துறை அமைச்சர் மைக்கேல் டோனலன், வீட்டு வசதித்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் உள்ளிட்டோர் தோல்வியை சந்திக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கன்சர்வேட்டிவ் குழு தலைவராக பதவி வகித்து வரும் பென்னி மோர்டான்ட், முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் ஆகியோரும் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா